ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு முதல்வர் பழனிசாமி பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 48.6% ஆக உயர்ந்துள்ளது. உயர்கல்வியில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. டீன் ஏஜ் வயதில் மாணவ, மாணவிகள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக டீன் ஏஜ் பெண் குழந்தைகள் சரியான வழியில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் அவர் பேசுகையில், ஆண்களை விட பெண்களே அதிகம் கல்வி கற்கிறார்கள். தேர்ச்சி விகிதம், மதிப்பெண் பெறுவதில் என அனைத்திலும் மாணவிகளே முதலிடம் வகிக்கிறார்கள். இந்திய வரலாற்றிலேயே தமிழகத்தில்தான் கல்வித்துறைக்கு அதிகபட்சமாக ரூ.34,700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் பெறப்பட்ட முதலீடுகளால், தமிழகத்தில் 10 லட்சம் பேருக்கு வேலை உத்தரவாதம் கிடைத்தது. கல்வி நிறுவனங்களை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக, தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவுவதற்கான சட்டம் இயற்றப்பட்டு 2 தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதியும் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
முதல் தலைமுறை பட்டதாரி மாணாக்கர்களுக்கு கல்வி கட்டணம் திரும்பி வழங்கும் திட்டத்திற்காக இந்த ஆண்டிற்கு 460 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகளை 2018-19-ஆம் கல்வியாண்டில் அரசு நிறுவியதுடன், 29 சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கவும் அனுமதி வழங்கியுள்ளது 10 மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் 65 அரசுக் கலைக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 382 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை இன்று 48.6 சதவிகிதமாக உயர்ந்து இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பது தமிழ்நாடு தான் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் 2019-2020 ஆம் ஆண்டில் ராமேஸ்வரத்தில் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்களின் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...