பாடப் புத்தகத்தில் வெளிவந்த
பிழைக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கோபிசெட்டிபாளையம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள், சுற்றுலாப் பயணிகளுக்காக படகு இல்லம், பூங்கா ஆகியவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7 இடங்களில் துணை மின் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 2 துணை மின் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. கொடிவேரி அணை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்தி குற்றாலத்தைப் போல் கொடிவேரியை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை 45.72 லட்சம் மடிக்கனிணிகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் கல்வி சேனல் தொடங்கப்படவுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. கட்டணம் செலுத்தியவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும். தொடக்கப் பள்ளிகளில் 2 மாத காலத்தில் பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்படும். பாடப் புத்தகத்தில் வெளிவந்த பிழைக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். இதில் அதிகாரிகள் மீது எப்படி குறை சொல்ல முடியும்? இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். புதிய கல்விக் கொள்கையை பொருத்தவரை தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் தொடர வேண்டும் என பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் தொடரும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...