Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு வாழ்வளிக்குமா ஆசிரியர் தேர்வு வாரியம்? - முனைவர் மணி கணேசன்

அண்மையில் தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு
வாரியம் அரசுக் கலை,அறிவியல் கல்லூரிகளுக்கு 2340 உதவிப் பேராசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த உதவிப் பேராசிரியர்கள் நிரப்பும் பணி சான்றிதழ் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என இரண்டுக் கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு முறையில் முதலாவதாகக் கல்வித்தகுதிச் சான்றிதழ்களுக்கு ஒன்பது மதிப்பெண்ணும் பணிஅனுபவத்திற்குப் பதினைந்து மதிப்பெண்ணும் வழங்கப்பட்டு இரண்டாவதாக நடக்கும் நேர்முகத் தேர்விற்குப் பத்து மதிப்பெண் என மொத்தம் 34 மதிப்பெண் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க சேதி எதுவெனில் குறிப்பிட்ட துறையில் அவர்கள் காட்டிவரும் தனித்திறன்கள், படைப்புகள், பரிசுகள், விருதுகள் முதலியன கவனத்தில் கொள்ளப்படும் என்கிற விவரம் சுட்டப்படவில்லை. இதைப் பற்றி இங்குப் பேசுவதற்கு உரிய காரணமும் இருக்கிறது.
மேல்நிலைக்கல்வி என்பது அறிவாற்றலுக்கான ஓர் உந்து சக்தி. கல்லூரிக்கல்வி என்பது முற்றிலும் அதிலிருந்து வேறுபட்டது. வெறும் பாட அறிவு மட்டும் அதற்குப் போதாது. அதனைத்தாண்டி புதியன படைக்கும் உத்வேகமும் இருப்பவற்றைத் திறனாய்ந்து புதுமை நோக்கில் சீரிய வகையில் வெளிப்படுத்தும் திறனும் கட்டாயம் அவசியம். அப்போதுதான் அந்தந்த துறைகள் மேன்மேலும் செழுமையுற்று வளர்ச்சியடைந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு சிறந்த முறையில் அடிகோல நல்ல வாய்ப்பேற்படும். இதனைக் கருத்தில்கொண்டே அண்மைக்காலமாக  உயர்கல்வி ஆய்வு உட்பட அனைத்துத் துறைகளிலும் இன்னும் மேம்படுதல் அவசியமென்பதைத் தவறாமல் வலியுறுத்திவரும் போக்குகள் வரவேற்கத்தக்கவை. இதனை எளிதில் புறந்தள்ளிவிடலாகாது.
காட்டாக, கல்லூரித் தமிழ்த்துறையில் அன்று பேராசிரியர்களாகத் திகழ்ந்தவர்கள் பலரும் தாம் சார்ந்திருக்கும் துறையில் ஆழ்ந்த பற்றும் புலமையும் கொண்டிருந்தனர். மேலும், தலைசிறந்த படைப்பாளிகளாகவும் திகழ்ந்தனர். அதனால்தான் அவர்களாலும் உயரமுடிந்தது. அவர்களிடம் பயின்ற மாணவர்களையும் உயர்த்த முடிந்தது. தமிழியல் சார்ந்த பல்வேறு புதியபுதிய நவீனப் படைப்புகளும் ஆய்வியல் நெறிமுறைகளும் இதன்மூலமாகத் தமிழுக்குக் கிடைத்தன. கிடைத்தும் வருகின்றன. இதை யாராலும் மறுக்கமுடியாது.
அதேவேளையில் பணிநிறைவுக்குப் பின்னரும் அத்தகையோரின் செவ்வியல் சிந்தனைகள், புதுப்புது ஆக்கங்கள், கோட்பாடுகள், வரைவுகள், முன்மொழிவுகள், பரிந்துரைகள், வழிக்காட்டுதல்கள் குறித்த தமிழ்ப்பணிகள் தமிழுலகிற்கு இன்றும் தேவைப்படுவதாக உள்ளன. இது நடப்பு உயர்கல்வியில் காணப்படும் போதாமையினை வெளிப்படுத்துவதாக உள்ளன என்றே சொல்லவியலும். இன்றும் பலர் நவீனம் குறித்த புரிதல்களுக்கும் உரையாடல்களுக்கும் ஆக்கங்களுக்கும் உரிய முக்கியத்துவம் தர முன்வருவதில்லை. அவர்கள் படித்த படிப்போடு நின்றுகொண்டு நிகழ்காலச் சிந்தனை வெளிப்பாடுகள் சார்ந்த தொடர்வாசிப்புகளுக்குத் தம்மை ஆட்படுத்திக்கொள்ளாமல் திணறும் ஆரோக்கியமற்ற சூழல் தமிழ்வளர்ச்சிக்கு ஏற்பட்ட முட்டுக்கட்டை எனலாம். அதற்காகத் தமிழிலக்கியத்தின் நவீனம் சார்ந்த நோக்கும் போக்கும் தேங்கிவிடவில்லை. யாரோ சிலரால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்றாலும் அதன்வேகம் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும்.ஆக,பல்கலைக் கழக உயர்கல்வி எல்லாவகையிலும் சிறந்து விளங்கிட நல்ல தரமிக்க ஆய்வாளர்களும் படைப்பாளர்களும் பெருகுதல் இன்றியமையாதது. அதற்கு உரமூட்டும் விதமாக உயர்கல்வி ஆய்வுகளை மேம்படுத்துவதும் முறைபடுத்துவதும் தகுதிமிக்கோரைப் பணியில் நியமனம் செய்யமுனைவதும் அவசியம். பல முனைவர் பட்ட ஆய்வுகள் இன்றும் காசு கொடுத்து எழுதி வாங்கப்படுகின்ற அவலம் கொடுமையானது. இதற்கென்றே பல பட்டறைகள் தொழிற்சாலைகள்போல் பெருநகரங்களில் பெருகியுள்ளன. அதற்கு இத்தகையோர் துணைபோவதுதான் மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது. பணமே முதன்மை என்றாகிவிட்ட நடப்பு உலகில் படிப்பு மட்டும் தப்பிவிடமுடியுமா?மேலும், இத்தகைய வழிகளில் பெறப்படும் ஆய்வுகள் எப்படித் தரமுள்ளவையாக இருக்கவியலும்? அவ் ஆய்வாளர் எதிர்காலத்தில் எங்ஙனம் திறன்மிக்க பேராசிரியராக விளங்குவார்?இதுமாதிரியான கேள்விகள் சாமானியனுக்கும் எழுதல் இயற்கை. ஆதலால், உயர்கல்வியின் உயராய்வுகள் குறித்த உண்மைத்தன்மைகள் பற்றி ஆராய ஓர் உயர்மட்ட வல்லுநர்குழுவினை ஒவ்வொன்றுக்கும் துறைவாரியாக வெளிப்படைத்தன்மையோடு நியமித்திடுதல் மற்றும் கண்காணித்திடுதல் அரசின் முக்கிய கடமையெனலாம். இத்தகைய இழிநிலைகள் முறையான படிப்பிலேயே காணப்படுவதுதான் வருந்தத்தக்க செய்தியாக உள்ளது. 
அதேபோல், பணியனுபவத்திற்குக் காட்டப்படும் முக்கியத்துவம் படைப்பனுபவத்திற்கும் காட்டப்பட வேண்டும். வெறும் பணியனுபவம் மட்டும் பேராசிரியர் பணிக்குப் போதாது. தமிழ்ப் படைப்பிலக்கியங்களில் முதன்மைப்பெற்று, கல்லூரி பணியனுபவம் கிடைக்கப்பெறாதத் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறைகளில் பல்லாண்டுகள் பணியாற்றும் முனைவர் பட்டம் பெற்ற, பல்கலைக்கழக மான்யக்குழு நடத்தும் கல்லூரி விரிவுரையாளருக்கான தேசிய, மாநிலத் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சியுற்ற ஆசிரியர்கள் துறைமாறுதல் மூலமாகக் கல்விச்சேவை செய்திட இதுநாள்வரை இத்தேர்வு முறைகளில் புதுத்திருத்தங்கள் ஏதும் மேற்கொள்ளாதது கவலைத்தரக்கூடிய செய்தியாகும். எல்லாவகைத் திறமையிருந்தும் அத்தகையோருக்கு இத்தகையப் பணிக்கிடைப்பதில் உள்ள தடைகள், பாரபட்சப் போக்குகள் ஆகியவை உடன் களையப்படுதல் பேருதவியாக அவர்களுக்கு அமையக்கூடும். இதனால் அரசுக்குப் பெரும்நிதிச்சுமையேதும் ஏற்படப் போவதில்லை. அவர்களது பட்டய, பட்டப் படிப்புகளில் பயிலப்பட்ட உளவியல் கருத்துகள், புதிய பயிற்றுவிப்பு முறைகள், கல்விச் செயலாய்வுகள், நிர்வாகத் திறன்கள், ஆளுமைப் பண்புகள், கற்போரை எளிய வகையில், வழியில் கையாளும் நவீன உத்திமுறைகள், தனியாள் ஆராய்ச்சி வழிமுறைகள், வாழ்க்கையனுபவ வழிக்காட்டல்கள் மற்றும் ஆலோசனைகள் போன்ற கூடுதல் தகுதிகளால் இளம் பட்டதாரி மாணவர்கள் நிச்சயம் கவரப்படுவர்.
தவிர, கல்லூரி பணியனுபவத்தைக் காரணங்காட்டி இவர்களைப் புறந்தள்ளுவதென்பது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நல்ல அறமாக இருக்கமுடியாது. அது இந்திய அரசியலமைப்பு வலியுறுத்தும் அனைவருக்கும் சமநீதி, சமவாய்ப்பு ஆகியவற்றிற்கு எதிரானதாகவும் போகக்கூடும். இவர்களின் பள்ளிப் பணியனுபவத்தைக் கல்லூரிப் பணியனுபவத்திற்கு ஈடாகக் கருத அரசின் மனச்சாட்சி இடம்தராவிட்டாலும் அதை ஒட்டுமொத்தமாக ஒதுக்கித் தள்ளுதல் நல்லதல்ல. அரசு, அரசு உதவிபெறும், சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நிரந்தரமில்லாக் கௌரவ விரிவுரையாளரின் ஓராண்டுப்பணிக்கு வழங்கப்படும் இரண்டு மதிப்பெண்களுக்குப் பதிலாக அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நிரந்தரப் பணியிடங்களில் பணிபுரிந்திடும் ஆசிரியர்களின் ஓராண்டுப் பணியனுபவத்திற்கு குறைந்தபட்சமாக ஒரு மதிப்பெண்ணாவது வழங்க அரசு முன்வரவேண்டும். இது ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் கனவாகவும் உள்ளதைக் கவனத்தில் எடுத்துக்கொள்வது நலமுண்டாகும். இத்தகு தகுதிவாய்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த அறிவிப்பிலேயே கூடுதல் திருத்தமொன்றை மேற்கொண்டு அவர்களுக்கும் ஒரு நல்ல வழி அமைத்துத் தருதல் அரசின் கடமையாகும்.
அதுபோல், உண்மையான படைப்புகளுக்கும் அப்படைப்பை மேற்கொண்ட கல்லூரிப் பேராசிரியர் பதவிக்குத் தகுதிவாய்ந்த தமிழ்ப் படைப்பாளிகளுக்கும் உரிய முக்கியத்துவத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் அளிக்க முன்வருதல் சாலச்சிறந்ததாக அமையும். அதற்கு வழிகோலுவதாக மீதமுள்ள பதினாறு மதிப்பெண்களைப் படைப்புகள், ஆய்வுகள், வெளியீடுகள், விருதுகள் ஆகியவற்றிற்கு பகிர்ந்தளித்து அவர்களின் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கான பங்களிப்பிற்கு முன்னுரிமை வழங்க ஆவனச் செய்வதன் வாயிலாகத் திறமை மிகுந்த பேராசிரியர்களைக் கல்லூரிப் பணிக்குக் கொண்டுவர முடியும். அப்போதுதான் யாரும் எளிதில் விரும்பிப் படிக்காமல் கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரு தீண்டப்படாதத் துறையாக விளங்கும் தமிழ்த்துறைக்கு மீளவும் புத்துணர்ச்சிப் பாய்ச்சியது போலிருக்கும். தமிழ்மொழி பற்றிய ஆய்வுகள் உலகத் தரத்திற்கு ஒப்பாகத் திகழும். மேலும், தமிழ்மொழி பற்றிய போதிய அடிப்படை அறிவு இல்லாமல் மருத்துவம், பொறியியல் முதலான தொழிற்கல்வி சார்ந்த உயர்படிப்பினை ஆங்கிலவழியிலேயே பயிலும் துர்பாக்கிய நிலையால் அவை குறித்த உயராய்வுகள் பல்கிப் பெருகுவதில் எண்ணற்ற சிக்கல்கள் நிறைந்துள்ளன. மனிதச் சிந்தனை அவரவர் தாய்மொழியிலேயே எழும் என்பது மொழியியல் வல்லுநர்களின் கருத்தாகும். ஆக, தாய்மொழியாம் தமிழ்மொழி வழிக்கல்வியில் அனைத்துப் படிப்புகளும் தடையின்றி மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்வதில் அரசாங்கத்தின் இன்றியமையாத கடமையெனலாம். அக்குறிக்கோள் தம் இலக்கை எய்திடவும் தாய்மொழியில் பிழையின்றி அனைவரும் பிறருடன் எளிதில் தொடர்புகொண்டிடவும் தமிழ்மொழி அனைத்துக் கல்லூரி நிலைகளிலும் குறைந்தது முதல்பருவத்தில் நிறைவு செய்திடும் வகையில் ஒருபாடமாக ஒருமித்தக் கருத்துடன் வைக்க அரசு உறுதிபூணுதல் நல்லது. அதன்மூலமாக அத்தகைய கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்கள் புதிதாக உருவாக வாய்ப்பேற்படும். அது பாடம்சார்ந்து எழும் சிலபல சந்தேகங்களுக்கும் புரியாத் தன்மைகளுக்கும் நிவர்த்தி செய்திட வழிப்பிறக்கும். எல்லா விதமான அரிய வளங்களையும் தன்னகத்தேக் கொண்டுள்ள செம்மொழியாம் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் மீட்சிக்கும் பல்லாற்றானும் உதவிபுரிவது என்பது மனித ஆற்றலை மேம்படுத்துவதற்குச் சமமாகும். ஏனெனில், மொழிவளர்ச்சியே ஓர் இனத்தின் பெருமையாகும். தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை தமிழுக்கு முக்கியத்துவம் தந்து அதனைத் தரப்படுத்துவதென்பது அதற்கான முதற்படிக்கட்டு எனலாம். இதனடிப்படையில் தமிழுக்கும், தகுதிமிக்க தமிழ்ப் படைப்பாளிகளுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் வாழ்வளிக்குமா தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும்?




2 Comments:

  1. இருக்குற பள்ளிகளையெல்லாம் இழுத்துச்சாத்தியாச்சு! இனி உங்களுக்கு பணி அனுபவத்திற்கு ஒரு மார்க் கொடுத்து..கல்லுாாிகளில் இடம் கொடுத்து அதையும் இழுத்து சாத்தனும் அது தானே உங்க திட்டம்! முதல்ல நீட்-ல ஒரு மாணவனையாவது பாஸ் செய்ய வையுங்க! அப்புறம் உயர்கல்வியில் பு....லாம்!

    ReplyDelete
  2. பேராசிரியர் பணிக்கு எழுத்துத்தேர்வு நடத்த வேண்டும் ...
    . தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் / பேராசிரியர் காலிப் பணியிடங்கள் (SLET,NET, Phd) நேர்முகத் தேர்வு என வெயிட்டேஜ் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது இதனால் முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது .எனவே பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி, சட்டக் கல்லூரி பேராசிரியர்களுக்கு எழுத்துத்தேர்வு வைத்து தேர்வு செய்வதுபோல் கலைக் கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கும் SUET,NET, P.hd தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் எழுத்துத் தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டும். இதனால் அனுபவ ஆசிரியர்கள் எவ்வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் ஏனெனில் பல ஆண்டுகளாக கற்பித்ததன் மூலம் அவர்கள் துறையில் அவர்கள் நிபுணர்களாக தான் இருப்பார்கள்.. மேலும் திறமையான இளம் பேராசிரியர்களுக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive