Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

யாருக்கு வேண்டும் நேர்கொண்ட பார்வை? - மணி கணேசன்



பெண்ணை தெய்வமாகப் போற்றி வணங்குவதிலும் அதே பெண்ணை இழிவாக நடத்துவதிலும் உலகளவில் நம்மை விஞ்ச எவருமில்லை எனலாம். பெண்ணிற்கு எதிரான கொடுமைகள் பல வளர்ந்துவரும் அதேசமயத்தில் எல்லாவகையிலும் மேம்பட்ட இச்சமுதாயத்தில் தொடர்ந்து மலிந்து வருவது வெட்கப்படவேண்டிய, வேதனைத்தரத்தக்க ஒன்றாகும். இதில் பாலியல் வன்கொடுமைச் செயல்கள் தனியாகவும் கூட்டாகவும் மனிதாபிமானமற்ற முறையில் பெண்கள்மீது நிகழ்த்தப்படுவதென்பது மிகவும் கண்டிக்கத்தக்கவை.

புதுடெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் கூட்டு வன்கொடுமைக்கு இலக்காகிப் பின் பலியான நிர்பயாவின் துர்மரணமும்  மும்பையில் அதே வகைக் கொடுமைக்கு இந்தமுறை ஊடகம் சார்ந்த புகைப்படம் எடுக்கும் பெண்ணொருவர் ஆட்பட்ட சேதியும் நாடெங்கிலும் தீயாகப் பரவி ஆறாத ரணத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சட்டங்களைத் திருத்தி தண்டனைகளைக் கடுமையாக்கும் சூழல்கள் தோன்றியுள்ளன. இவையிரண்டும் ஊடகங்களால் வெளிச்சத்திற்கு வந்தவை. தொடர்ந்து தமிழ்நாட்டில் நந்தினி,ஹாசினி என பாலியல் வன்கொடுமைக்கு பலியான அப்பாவிகள் மற்றும் நடிகை பாவனா, பாடகி சுசித்ரா, எழுத்தாளர் லீனாமணிமேகலை போன்றோர் வெளிப்படுத்தும் பாலியல் சீண்டல்கள் ஆகியன நாகரிக சமூகத்திற்கு விடப்படும் அறைகூல்களாக உள்ளன. தமிழகத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் பல்வேறு அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளன.

இதுதவிர, வெளியுலகிற்கு வராதவை கணக்கிலடங்கா. களை மண்டிக்கிடக்கும் பெண் குறித்த பார்வைகள்தாம் இப்பாலியல் வன்கொடுமைக்கு அடிப்படைக் காரணிகள் எனலாம்.பெண்ணை சரியாகப் பார்க்கவும் அணுகவும் இச்சமுதாயம் ஆண்களுக்குக் கற்றுக்கொடுக்கவில்லை போலும். பெண் இங்கு ஆணுக்குரிய நல்ல போகப் பொருளாகப் படைத்துக் காட்டப்படுகின்றாள். பெண் சித்திரிப்புகள் எல்லாம் அவளைச் சாலச் சிறந்தப் பண்டமாக்கியுள்ளன. இச்சூழ்ச்சி வலைப் பின்னலுக்குள் பெண் தெரிந்தும் தெரியாமலும் வயிற்றுப் பிழைப்புக்காகவோ, வாழ்க்கை வசதிக்காகவோ பலியாகி விடுகின்றாள். இதில் பெரும்புகழுக்கான மோகமும் அதிகபணம் ஈட்டும் நோக்கமும் அடங்கும்.

தொலைக்காட்சி, திரைப்படம் உள்ளிட்ட அனைத்துவகை ஊடகங்களும் பெண்ணை உயிரும் உணர்வும் கொண்ட சக மனுஷியாகக் காட்ட முயற்சிப்பதில்லை. மாறாக, அழகும் வசீகரமும் மிக்க உணர்ச்சியற்ற நல்ல நுகர்ச்சிக்குரிய கைப்பாவைப் பொருளாக மட்டுமே கவர்ச்சியுடன் காட்டப்படுவதையே தலையாயக் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. வளர்ந்துவரும் சமூகத்தில் பணமே எல்லாம்; எல்லாம் பணத்திற்காக என்பதோடு உலகிலுள்ள பொருள்கனைத்தும் நுகர்ந்து இன்பம் அடைவதற்கே என்கிற அதிநுகர்வு கலாச்சாரம் எல்லா மட்டத்திலும் தழைத்தோங்கி வருகின்றன. இது பெண்ணையும் விட்டுவைக்கவில்லை. பொருள்களனைத்திலும் ஆகச் சிறந்த பொருளாகக் காட்சிப்படுத்தப்படுவதன் விளைவு, பெண் பலவகையிலும் பாலியல் வன்கொடுமைக்கும் சுரண்டலுக்கும் ஆளாகின்ற அவலம் உலக நடப்பாக இருக்கின்றது.

பெண் அதிகம் புழங்கும் வீடு, அலுவலகம், பல்வேறு சமுதாய வெளிகளில் வாழும் இரக்கமற்ற மனிதர்களின் விரும்பத்தகாத நடத்தைகளால் இயல்பிலேயே அவளிடம் காணப்படும் மென்மைத்தன்மை மற்றும் சமயம் பார்த்து அவளிடமிருந்து வெளிப்படும் பலவீன குணம் ஆகியவற்றை இந்த ஆணாதிக்க சமூகம் நன்கு தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது. முடியாதபட்சத்தில், அவளது விருப்பு, வெறுப்பு பற்றி கிஞ்சித்தும் கவலைக்கொள்ளாமல் பலாத்காரம் புரிந்து தம் தேவையினைப் பூர்த்திசெய்து கொள்கின்றனர். இவை காரணமாகப் பெண்சமூகம் பெரும் இன்னல்களுக்கு உட்படவேண்டிய துர்பாக்கிய சூழல் நிலவுகின்றது. இத்தகு சமுதாயக் கேடுமிக்க சிக்கல்களிலிருந்து பெண்ணை விடுவிப்பதும் மீட்டெடுப்பதும் இன்றியமையாதக் கடமைகளாகும்.

எல்லா வகையிலும் அனைத்து நிலையிலும் ஆண், பெண் பாலின பாகுபாடுகள், வேலைப்பிரிவினைகள், இழிவுப்போக்குகள், அநீதிகள், இழிவான வார்த்தை உபயோகங்கள் போன்ற பெண்களுக்கெதிரானவற்றை முதலில் குடும்பம் கைவிட்டு சம உரிமை, சம மதிப்பு, சம வாய்ப்பு ஆகியவற்றை மனமுவந்து வழங்க முன்வருதல் காலத்தின் கட்டாயமாகும்.


அப்போதுதான் பெண்ணென்பவள் சக உயிரி எனும் உயரிய சிந்தனையானது இளம்பருவம்தொட்டு ஒவ்வொரு ஆணின் மனத்திலும் நன்கு பதியும். அதுமட்டுமல்லாமல், ஆண்டான் - அடிமை நோக்கும் போக்கும் தொடக்கத்திலேயே ஒழியப்பெற்று பெண்ணின் மீதான சகோதரத்துவப் பார்வை செழித்துவளர வாய்ப்பேற்படும்.

அதுபோல, தொடக்கக்கல்வி நிலையிலேயே ஆண், பெண் சமத்துவம் மற்றும் இயல்புகள், பெண்ணின் மகத்துவம் மற்றும் தனித்தன்மைகள், மனித குல வளர்ச்சிக்குப் பெண்ணின் பங்களிப்புகள், எதிர்பால் ஈர்ப்புணர்வின் இன்றியமையாத நிலைப்பாடு மற்றும் சமுதாயத்தில் காணப்படும் விழுமிய குணங்கள் முதலானவற்றை உள்ளடக்கிய கல்வியும் கற்பித்தல் முறைகளும் தழைத்தோங்குதல் நன்மைப் பயக்கும் எனலாம்.

மேலும்,பதின்பருவ இருபால் வயதினரிடையே களங்கமற்ற, கருத்தொருமித்த நட்புறவுக்கு வழிகோலுதல் அன்றி அதனைப் பெற்றோரும் மற்றோரும் அங்கீகரித்து அரவணைத்தல் மிக அவசியம். உண்மையில் பாடசாலைகள் இருபாலரின் அறிவு வளர்ச்சிக்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் பண்பாட்டுப் பெருக்கத்திற்கும் மட்டும் உதவிடச் செய்வதில் தனிநபர் ஒழுக்கம் முக்கியமானது. ஆணோ, பெண்ணோ தமக்குள் காட்டாறாகப் பெருக்கெடுக்கும் சுய உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் அதைத் திறம்பட கையாண்டு நல்ல வழியில் செலுத்தி அறிவியல் மற்றும் அறவியல் சார்ந்த புதுப்புதுப் படைப்பாக்கங்கள் பெருகிட முழுமுயற்சியெடுத்தல் நல்லது.

தவிர, அனைத்துவகை ஊடகங்களும் வணிகநோக்கைப் புறந்தள்ளி சமுதாய அக்கறைக் கண்ணோட்டத்துடன் பெண்ணைக் காட்சிப்படுத்துதலும் அவளது புற அழகாக விளங்கும் மேனிக்கும் அங்க அவயத்திற்கும் மிகுதியாக இடம் தருவதைத் தவிர்த்து அவளுடைய அக அழகாக மிளிரும் அறிவாற்றலுக்கும் தனித்திறமைக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க முன்வருவது அவசர அவசியமாகும். அதேவேளையில், பெண்களும் தம் மதிப்பிற்கும் கௌரவத்திற்கும் பங்கம் விளைவித்துக்கொள்ளும் நோக்கில் பணத்தை முன்னிட்டு பெண்ணையும் பெண்மையையும் இழிவாகக் காட்ட விழைவோரின் சூழ்ச்சி வலைக்குள் அகப்பட்டுக் கொள்வதிலிருந்து முற்றிலும் தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

மேலும், பெண்கள் புடவைகள், ஆபரணங்கள், அலங்காரப் பொருள்கள், தங்க, வைர நகைகள், வாசனைப்பொருள்கள், முகப்பூச்சுகள் போன்றவற்றின் மீது தீராதப் பற்றுக்கொண்டும் மோகம் கொண்டும் தம்மை அழகுப் பதுமைகளாக ஆக்கிக்கொள்ள பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பக்கூடாது என்பது பெண்ணியம் பேணுவோரது சீரிய சிந்தனையாகும். அன்பும் அறிவும் சமுதாயத் தொண்டும் தைரியமும்தாம் பெண்ணுக்கான பேரழகு குணங்களாகும் என்பதைப் பெண் உணருதல் அவசியம் எனலாம்.

கவிதை, சிறுகதை உள்ளிட்ட படைப்பிலக்கியங்களில் ஈடுபடும் ஆண், பெண் இருபாலரும் தத்தம் நிலையிலிருந்து வழுவாது எதிர்கால சமூகத்தின் நலனைக் கருத்தில்கொண்டு பெண்ணைப் பற்றிய கருத்தோட்டங்களில் மிகையான கற்பனைகள், வருணனைகள்,இழிவான சொல்லாட்சிகள், சொற்றொடர்கள், வழக்காறுகள், ஏற்றத்தாழ்வு மிக்க கருத்துகள், சிந்தனைகள் ஆகியவற்றை விடுத்து பெண்ணினத்தின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் அதிகம் உழைப்போராகத் திகழ்தல் நல்லது. பண்டை இலக்கியங்களில் காணலாகும் பெண்ணடிமைக் கருத்தாக்கங்கள் மீள் வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டு அவை இதுகாறும் வெளிப்படுத்தாதப் புதுமைக் கருத்துகளைத் தற்சார்பின்றி புதிய அணுகுமுறையில் வெளிப்படுத்தவல்லதாக உருவாக்கிடுதல் சிறந்தது. இலக்கியப் பிரதிகள் அனைத்தும் ஆண், பெண் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்துவனவாக அமைக்கப்படுதல் என்பது படைப்பாளிகளின் தொலைநோக்குப் பார்வையாக, இலட்சியமாக இருத்தல் சிறப்பு.

அதேவேளையில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்குச் சட்டம் வழங்கும் நீதியும் கடுந்தண்டனையும் விரைந்து கிடைத்திட வழிவகை காணுதலானது குற்றம் மேலும் நடைபெறாமல் தடுக்க உதவிடும். குற்றவாளிகள் யாராக இருப்பினும் எந்த வகையிலும் பரிவோ, சலுகையோ காட்டப்பெறாமல் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதியும் நிவாரணமும் மறுவாழ்வும் உகந்த முறையில் கிட்டிட முழுஅக்கறை காட்டிடுதல் என்பது அனைவரின் தலையாயக் கடமையாகும்.

இளம்வயதைக் காரணங்காட்டி குற்றவாளிகளைச் சட்டத்திலிருந்து தப்பிக்க விடுவதும் அவர்களைக் காப்பாற்ற முயலுவதும் கூடாது. அது குற்றவாளிகளுக்கு மேலும் உரமூட்டி குற்றங்கள் பெருகிடவே வழிவகுக்கும். இதை மறத்தலாகாது. குற்றத்தை யார் செய்திருந்தாலும் குற்றம் குற்றமேயாகும். கூட்டாக குற்றங்களில் ஈடுபடும் கயவர்களுக்குத் துணைபோகும் மைனர்களின் குற்றங்களையும் நன்கு ஆராய்ந்து அதற்குரிய நீதியும் நியாயமும் தக்க தண்டனையும் கிடைத்திடச் செய்யத் அண்மையில் மேற்கொண்ட போக்ஸோ சட்டத் திருத்தம் நல்லதொரு அடையாளமாகும்.


தவிர, பெண்ணிற்கான பாதுகாப்பையும் நீதியையும் நிலைநாட்டிட, சட்டமென்பது ஒரு நல்ல வழிமுறையாகும். ஆனாலும், சட்டத்தினால் எல்லாவற்றிற்கும் முழுத்தீர்வு காணுவதென்பதும் இயலாததொன்று. வேறு என்னதான் வழியண்டு என்று சிந்தித்தோமானால் ஆணாதிக்க எண்ணம்கொண்ட ஒவ்வொரு மூளைக்குள்ளும் உருவாக வேண்டியது நல்லதொரு மனமாற்றமாகும். மனித இனத்தின் சரிபாதியாக விளங்கும் பெண்சமூகத்தை அறிந்துணரவும் உணர்ந்துபோற்றவும் மதித்து நடக்கவும் சகோதரத்துவம் பேணவும் இது பெரிதும் உதவும். மேலும், பெண்ணென்பவள் வெறும் கடைச்சரக்கோ,புரியாத புதிரோ, இல்ல அடிமையோ, அழகுப் பதுமையோ அல்லள். மனித இனத்தை மறுஉற்பத்திச் செய்து பெருக்கிட வந்த மகாசக்தி மட்டுமல்ல, ஓர் உயிருள்ள உணர்வுமிக்க சக மனுஷி. தலைசிறந்த தோழி! அவள் இல்லை என்று சொன்னால் இல்லைதான்! அதாவது வேண்டாம் என்றால் வேண்டாம் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்! இந்த நேர்கொண்ட பார்வை ஒவ்வொரு ஆணுக்கும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதைத்தான் திரைமொழியில் பெண்களின் சார்பில் ஓங்கி உரத்துச் சொல்ல முற்பட்டிருக்கின்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive