தமிழகத்தின் புதிய சின்னமாக தமிழ் மறவன் வண்ணத்துப்பூச்சியை அறிவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கென தனியாக மாநில வண்ணத்துப்பூச்சி தேர்வு:
தமிழ்நாட்டின் சின்னங்களாக திருவில்லிபுத்தூர் கோபுரம், பனைமரம், மறையாடு, மரகதப்புறா, செங்காந்தல் மலர், பலாப்பழம், கபடி ஆகியவை உள்ளன. அந்த வகையில், சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வினை வலியுறுத்தும் நோக்கில் தமிழகத்திற்கென தனியாக மாநில வண்ணத்துப்பூச்சி தேர்வு செய்ய வனத்துறை மற்றும் பல்வேறு சுற்றுசூழல் அமைப்புகள் முயற்சி மேற்கொண்டு வந்தன.
இதற்கான தகுதியான வண்ணத்துப்பூச்சியை தேர்வு செய்யும் முயற்சி கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. ஆரம்பத்தில் தமிழ் லேஸ்விங் எனப்படும் வண்ணத்துப்பூச்சி தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இது அபூர்வ வகை என்பதால் எளிதில் காண்பது கடினம். இதனை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் தமிழ் இயோமென் (தமிழ் மறவன்) என்ற வண்ணத்துப்பூச்சி, தமிழ்நாட்டின் மாநில வண்ணத்துப் பூச்சியாக தேர்வு செய்யப்பட்டது.
தமிழக அரசு அரசிதழில் வெளியீடு:
இந்நிலையில் தமிழ் மறவன் வண்ணத்துப்பூச்சி இனத்தையும் சின்னமாக அறிவிக்க முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின பாதுகாவலர் ஆகியோர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து தமிழ் மறவன் வண்ணத்துப்பூச்சி இனத்தை தமிழ்நாட்டின் சின்னமாக அறிவித்து சுற்றுசூழல் மற்றும் வனத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு தற்போது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வண்ணத்துப்பூச்சி பிரைட் ஆரஞ்சு நிறத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காண கூடியது. மேற்கு தொடர்ச்சி மலையின் ஓர் அங்கமான நீலகிரியில் குன்னூர், கூடலூர், முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...