அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி தொடர்பான வழக்கில் திமுக முன்னாள்
எம்எல்ஏ அப்பாவு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவுக்கு செப்டம்பர் 4ம்
தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பிரதீப்
யாதவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்த கோரி திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் 37 ஆயிரத்து 211 அரசு பள்ளிகளும், 12 ஆயிரத்து 419 தனியார் பள்ளிகளும், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன.
இந்த பள்ளிகளில் ஒரு கோடியே 25 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். தமிழக அரசு கல்விக்காக ஆண்டுதோறும் ரூ.27 ஆயிரம் கோடி செலவிடுகிறது. இந்த நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளி இறுதி வகுப்பை முடித்த பிறகு, ஆங்கில பேச்சு திறன் இல்லாத காரணத்தால், தொழிற்கல்வி படிப்புகளில் சேர முடியாத நிலையும், நல்ல வேலைவாய்ப்புகளை பெற முடியாத நிலையும் உள்ளது. எனவே, அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வினீத் கோத்தாரி தலைமையிலான அமர்வு, இது சம்பந்தமாக அப்பாவு, 2018 செப்டம்பரில் அளித்த மனுவை, மனுதாரரின் கருத்தை கேட்டு மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று 2019 ஜனவரி 4ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அப்பாவு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், உயர் நீதிமன்றம் அளித்த காலக்கெடு கடந்த ஏப்ரல் மாதம் முடிந்த நிலையில் இதுவரை தன்னை அழைத்து கருத்தை கேட்கவில்லை. நடப்பு கல்வியாண்டு தொடங்கி விட்ட நிலையில் அரசு நடவடிக்கை எடுக்காததால் 85 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பள்ளிக்கல்வித்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் செப்டம்பர் 4ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பள்ளிக்கல்வி துறை செயலாளர் பிரதீப் யாதவுக்கு உத்தரவிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...