சின்னஞ்சிறு குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படவிருந்த சூழலில், புதிதாகக்
கட்டி குடியேற இருந்த நிலையில் தனது வீட்டை வாடகையின்றி வகுப்புகள் நடத்த
அளித்ததுடன் மின் கட்டணத்தையும் செலுத்துகிறார் பூ வியாபாரி ஒருவர்.
குழந்தைப் பருவத்தில் அளிக் கப்படும் அடிப்படைக் கல்வியே சின்னஞ்சிறு குழந்தைகளின் படிப்படியான வளர்ச்சிக்கு அடித்தளம் எனலாம்.
அப்படிப்பட்ட சின்னஞ்சிறு குழந்தைகளின் கல்வி பாதிக்கப் படவிருந்த சூழலில்,
தான் புதிதாகக் கட்டி குடியேற இருந்த வீட்டை பள்ளி வகுப்புகள்
நடத்துவதற்காக அளித்துள்ளார் பூ வியாபாரி கு.தியாகராஜன்(50).
திருச்சி மாநகராட்சி 65-வது வார்டுக்குட்பட்ட திருவெறும்பூர்
நொச்சிவயல்புதூரைச் சேர்ந்த இவர், சிறிய பூக்கடை நடத்தி வருகிறார்.
இவருக்கு மனைவி கலைவாணி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
நொச்சிவயல்புதூரில் செயல் பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
தற்போது அதே பெயரில் மாநகராட்சி பள்ளியாக செயல்பட்டு வருகிறது. மிகவும்
சிதிலமடைந்திருந்த இக்கட்டிடம், புதிய கட்டிடம் கட்டுவதற்காக
இடிக்கப்பட்டது.
இதனால், கடந்த ஆண்டு செப்.16-ம் தேதி வேறு இடத்துக்கு பள்ளியை மாற்ற
வேண்டிய சூழலில் உள்ளூரைத் தவிர வேறு இடத்தில் பள்ளி அமைந்தால் குழந்தைகள்
பள்ளிக்கு வருவதில் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்த தியாகராஜன், தான்
புதிதாகக் கட்டி குடியேற இருந்த வீட்டை வாடகையின்றி பள்ளி வகுப்புகள் நடத்த
அளித்தார்.
இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியர் கே.லதா மகேஸ்வரி கூறியபோது, ‘‘பள்ளிக்
கல்வித் துறை அலுவலர்கள் அறிவுறுத்தலின்பேரில், பள்ளிக்கு அதே பகுதியில்
மாற்றுக் கட்டி டத்தை தேடினோம். ஒரு வாரம் அதே பகுதியைச் சேர்ந்த சமூக
ஆர்வலர் முருகானந்தம் என்பவரின் வீட்டு மாடியில் வகுப்புகளை நடத்தினோம்.
சிறுவர், சிறுமிகளுக்கு மாடி வீடு பாதுகாப்பாக இருக்காது என்று கருதி வேறு
இடம் தேடியபோது எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் பள்ளியை நடத்திக்கொள்ள
உடனடியாக சம்மதம் தெரிவித்தார் தியாகராஜன்.
கடந்த 11 மாதங்களாக வாடகை வாங்கிக்கொள்ளாமல், மின் கட்ட ணத்தையும் தானே
செலுத்தி வருகிறார். இதற்கிடையில் பள்ளி நடத்து வதற்கு வசதியாக தனது
வீட்டில் கூடுதலாக ஒரு அறையையும் கட்டிக் கொடுத்துள் ளார்’’ என்றார்
பெருமிதத்துடன்.
இதுகுறித்து தியாகராஜன் கூறியபோது, ‘‘என் தந்தை வீட்டில் குடும்பத்துடன்
வசித்து வந்த நான், தனியாக குடியேற முடிவு செய்து, புதிய வீட்டைக் கட்டி
பால் காய்ச்சி குடியேற வசதியாக அனைத்துப் பொருட்களையும் அடுக்கி
வைத்திருந்தேன்.
இந்நிலையில் பள்ளித் தலைமையாசிரியர், வகுப்பு நடத்த இடம் கேட்டார். நான்
அந்தப் பள்ளியில்தான் 6-ம் வகுப்பு வரை படித்தேன். குடும்பச் சூழல் காரணமாக
படிப்பைத் தொடர முடியாத எனக்கு நேர்ந்த நிலை பள்ளி வேறு ஊருக்கு மாறினால்
மற்றவர்களுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உடனே வீட்டைக்
கொடுத்தேன்.வீட்டு மின் இணைப்பை வணிக இணைப்பாக மாற்ற கூடுதல் டெபாசிட் செலுத்தியதுடன் நானே மின் கட்டணத்தையும் செலுத்தி வருகிறேன்.
இதில் எனக்கோ எனது மனைவிக்கோ எந்த மன வருத்தமும் இல்லை. புதிய கட்டிடம்
கட்டி, பள்ளி அங்கு மாறிய பிறகு நாங்கள் அந்த வீட்டில் குடியேறுவோம்’’
என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...