ஒரே ஆண்டில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 7000 ரூபாய் அதிகரித்துள்ளது.
உலக பொருளாதார வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது
வலுவாக திரும்பியதே தங்க விலை உயர்விற்கு காரணம். இதே நிலை அடுத்த இரண்டு
ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதால் தங்கத்தின் விலை இப்போதைக்கு குறைய
வாய்ப்பே இல்லை. நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வால்
முதலீட்டாளர்களுக்கு கொண்டாட்டம் என்றால் அடித்தட்டு மக்களுக்கு
திண்டாட்டம்.
திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு குண்டுமணி அளவுக்கு தங்கம்
வாங்கி விடலாம் என்று கடைக்கு செல்வோர் விலையைக் கேட்டு வாங்க தயங்கும்
நிலை ஏற்பட்டுள்ளது.
2018-ஆம் ஆண்டில் அதிகபட்சமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை 23 ஆயிரம் ரூபாய் வரை இருந்தது. ஆனால் ஒரே ஆண்டில் 7000 ரூபாய் அதிகரித்து தற்போது சவரன் 30,000 வரை ஆகிவிட்டது.
இந்நிலையில் விலை கூடிய அளவிற்கு வியாபாரம் ஆகாததால் நகை கடைகள் வெறிச்சோடி
கிடக்கின்றன. வழக்கமான விற்பனையில் 50 சதவிகிதம் அளவிற்கு கூட இல்லை
என்பது கடைக்காரர்களின் புலம்பல். தங்கத்தின் விலை தாறுமாறாக உயர சர்வதேச
பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவும் காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.
அமெரிக்கா சீனா இடையே நடக்கும் வர்த்தக போர் டாலருக்கு நிகரான இந்திய
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி தங்கத்தின் மீதான
இறக்குமதி 12.5 சதவீதமாக அதிகரிப்பு போன்றவை தான் விலை உயர்விற்கு காரணம்
என்று பட்டியலிடுகின்றனர்.கடந்த காலங்களில் இதே போன்று அபரிவிதமான தங்கத்தின் விலை அதிகரித்த
நாள்களிலேயே சரசரவென சரிந்தது. அதே போன்ற அதிசய நிகழ்வு இப்போது ஏற்படுமா
என்ற ஆவலோடு காத்திருக்கின்றனர் மக்கள். இந்தியாவில் ஓர் ஆண்டுக்கான
தங்கத்தின் தேவை சுமார் 850 டன் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...