அரசுப் பள்ளிகள் இனி மெல்ல அழியும் என்னும் பொய்யான, போலியான பரப்புரை
திட்டமிடப்பட்டு கட்டவிழ்த்து விடப்பட்டாலும் நாட்டில் கடைசி ஏழை, எளிய
அடித்தட்டு மக்களின் புகலிடமாக விளங்கிவரும் அரசுப்பள்ளிகள் இருந்தே தீரும்
எனலாம். தகவல் தொழில்நுட்ப வசதிகள் பெருகிய போதும் மாணவர்களை உருவாக்கும்
நேரங்களில் ஆசிரியர்களைப் பதிவேடுகள் பலவற்றை தயாரித்திட அச்சுறுத்தப்பட்டு
வருவது வேதனையளிக்கக் கூடிய கொடுஞ்செயல்களாகும்.
மாணவர்கள் சார்ந்த அடைவு ஆய்வில் மொழி வாசிப்பு தலையாயதாக இருக்கின்றது. மாணவர்களைப் படிக்கச் செய்தல் என்பது அவ்வளவு எளிதான செயலல்ல. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வும் வகுப்பறை சார்ந்த தொடர் பயிற்சியும் மிகுந்த பொறுமையும் மிக அவசியம் ஆகும்.
அரசுப்பள்ளிகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் திடீர் நலிவுற்றதற்கும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் பெருக்கத்திற்கும் இன்றியமையாத காரணமாக மாணவர்களிடையே ஆங்கில மொழி வாசிப்பு உள்ளது. இதனாலேயே சாமானிய மக்களிடம் கூட ஆங்கில மோகம் தலைவிரித்தாடும் அவலநிலை காணப்படுகிறது. இந்த அறைகூவல்களை எதிர்கொண்டு தம் சிறப்பான பங்களிப்புகளை ஆசிரியர்கள் சமூகத்திற்கு அளித்து வருகின்றனர். அந்தவகையில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியம், பாமணி ஊராட்சிக்குட்பட்ட தேசிங்குராஜபுரம் ஊராட்சி ஒன்றிய ஈராசிரியர் தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்துவரும் தலைமையாசிரியை திருமதி இரா. விஜயலட்சுமி அவர்களின் கற்பித்தல் சார்ந்த பல்வேறு பணிகள் அளப்பரியவை. இப்பள்ளியில் தற்போது 43 மாணவ, மாணவியர் படித்து வருகின்றர். தனியார் பள்ளிக்கு நிகராக இப்பள்ளி மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசிப்பில் முனைப்புக் காட்டி வருவது வியக்கத்தக்கது. வாசிப்பில் வெறும் சரளப்பண்பை மட்டும் கொள்ளாமல் புரிந்துகொள்ளும் தன்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, ஆங்கில மொழியில் வாசிப்பை மேம்படுத்தும் உச்சரிப்பு முறை வாசிப்புப் பழக்கத்தைப் பெரும்பாடுபட்டு இவர் தம் உதவியாசிரியை ஒத்துழைப்புடன் முதல் வகுப்பு முதற்கொண்டு நிறைவேற்றி வருவது பாராட்டத்தக்கது.
எடுத்துகாட்டாக, இப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஐந்தாம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தைச் சரளமாக வாசித்துக் காட்டுவதை வட்டாரக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் உள்ளிட்ட பள்ளி ஆய்வு அலுவலர்கள் மனமுவந்து பாராட்டியது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இதுதவிர, இவரது தொடர் முயற்சியாலும் தன்னார்வ ஊக்கத்தாலும் உயர்தொடக்க நிலை மாணவர்களுக்கு இணையாக வட்டார, மாவட்ட அளவில் நடைபெறும் பல்வேறு கல்வி இணைச் செயல்பாடுகள் சார்ந்த தனிநபர் மற்றும் குழுவினர் தொடர்பாக நிகழும் போட்டிகளில் தம் மாணவர்களைப் பங்குபெற செய்து வெற்றி வாகை சூடி அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி வருவது பாராட்டத்தக்கது.
புத்தக வாசிப்பை நேசிக்கத் தூண்டும் புத்தகப் பூங்கொத்துத் திட்டத்தில் காணப்படும் பல்வேறு நூல்களில் இடம்பெற்றிருக்கும் சிறுவர் கதைகளை வாசித்து அவற்றை தம் சொந்த நடையில் வளரும் 'கதை சொல்லி'களாக மாறிவருவது அழகு. அதுபோல், கணிணியைக் கையாண்டு தம் கற்றலை வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளுக்கு இவ் ஆசிரியை உரமூட்டி வருவதும் சிறப்பு மிக்கது. இவர் இப்பள்ளியில் தலைமை பொறுப்பு ஏற்று ஆறு ஆண்டுகளில் பள்ளி வளர்ச்சிக்குத் தேவையான கூடுதல் வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் வசதிகள் ஆகியவற்றை உரிய அலுவலகத்தில் தொடர் படையெடுத்துக் கோரிப்பெற்று நிறைவேற்றி வருவது என்பது ஒரு முன்மாதிரி செயல்களாகும்.
இதுதவிர, தன்னார்வ தொண்டு அமைப்பான சகாயம் அறக்கட்டளை நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு கஜா கோரப்புயலில் சீரழிந்த பள்ளி மேற்கூரையினை ரூபாய் ஒரு இலட்சம் செலவில் சீர்செய்து மாணவர்கள் பாதுகாப்பைத் துரிதமாகச் செயல்பட்டு உறுதி செய்ததை பாராட்டாதவர் யாருமில்லை. ஆண்டுதோறும் குறுவள மைய அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் இளம் விஞ்ஞானிகளுக்கான தேடல் புத்தாக்கப் படைப்புப் போட்டியில் முதலிடம், அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலமாக நடைபெறும் பேச்சுப் போட்டியில் ஒன்றிய அளவில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகவும் மாவட்ட அளவில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகளாகவும் முதலிடம் பிடிக்கும் வகையில் மாணவர்களைத் தயார்படுத்தி வரும் இவரது அளப்பரிய செயல் நினைந்து போற்றத்தக்கது.
"எங்கள் தேசிங்குராஜபுரம் பள்ளிக்கு முள்ளூர் என்று மற்றொரு பெயரும் உள்ளது. நான் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற இந்த 6 வருடங்களில் எனது பள்ளியை பெரிதும் மாற்றியிருக்கிறேன். மாதந்தோறும் நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி குறித்த ஆரோக்கியமான கருத்துக்கள் விவாதிக்கப்படும். சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. எங்கள் ஊர் கிராமம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய கிராமம். இருப்பினும் எங்களுடைய அறிவுறுத்தலின்படி எங்கள் பள்ளி மாணவர்கள் அனைவர் வீட்டிலும் கழிப்பறை வசதி உள்ளது. எங்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கழிப்பறை பயன்படுத்த தெரிந்துள்ளதை ஒரு சாதனையாக நான் கருதுகிறேன்." என்னும் தலைமையாசிரியை திருமதி இரா. விஜயலட்சுமி ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரிய சமூகத்தில் ஓர் ஒளிரும் ஆசிரியர் என்பதில் மாற்றுக் கருத்துண்டோ?
இன்னும் தொடர்வார்கள்...
முனைவர் மணி கணேசன்
நன்றி: திறவுகோல் மின்னிதழ்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...