ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கான சம்பள பட்டியல் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஆன்லைனில் செயல்பாட்டிற்கு வரவிருக்கும் நிலையில் சர்வர் அடிக்கடி முடங்குவதால் அலுவலர்கள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான சம்பள பட்டியல், பில்கள் போன்றவை புதிய ஐஎப்எச்ஆர்எம்எஸ் (இன்டகிரேட்டட் பைனான்சியல் அன்ட் ஹியுமன் ரிசோர்சஸ் மானேஜ்மென்ட் சிஸ்டம்) என்ற சாப்ட்வேர் மூலம் கருவூலகங்களில் செல்லாமல் ஆன்லைனில் உள்ளீடு செய்து வழங்கிட தமிழக அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு இந்த திட்டம் ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது.
ஐஎப்எச்ஆர்எம்எஸ் எனப்படும் பெயரில் இந்த திட்டம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. பழைய சாப்ட்வேர் நடைமுறைகள் ஜூலை 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. புதிய திட்டத்தை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அலுவலர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்பட வில்லை, கால அவகாசமும் வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு பிரச்னைகளை அலுவலர்கள் சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக ஐஎப்எச்ஆர்எம்எஸ் சர்வர் கோளாறு அடிக்கடி ஏற்படுகிறது. இரவு 8 மணிக்கு பிறகு சர்வர் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும் பகல் வேளையில் சர்வர் வேகம் குறைவாக உள்ளது. இதனால் விபரங்களை வேகமாக பதிவு செய்ய இயலவில்லை. மேலும் இந்த மென்பொருளில் 1.7.2019 முதல் டோக்கன் போட முடியவில்லை என்றும் அலுவலர்கள் புகார் கூறுகின்றனர். ஆனால் இது தொடர்பாக கருவூலக அதிகாரிகளிடம் முறையிட்டால் டோக்கன் போடப்பட்டால் மட்டுமே சம்பளம் பட்டியல் அனுமதிக்கப்படும் என்று கூறுகின்றனர்.
இது தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட தனியார் மென்பொருள் நிறுவனத்தில்தான் அலுவலர்கள் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது. இது தொடர்பாக அலுவலர்களுக்கு போதிய அளவில் தொழில்நுட்ப விஷயங்கள் புரிந்து கொள்ளப்படாத நிலையில் இருப்பதால் கால தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் அலுவலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்பளம் பில், செலவு பில், டிஏ பில் போன்றவற்றை போடுவதற்கு நாட்கணக்கில் செலவு ஏற்படாது. பில் போடப்பட்ட உடன் இசிஎஸ் எண், டோக்கன் எண் வந்துவிடும்.
இதற்காக சம்பளம் போடும் கணக்கு அலுவலர்கள் கருவூலகங்களுக்கு அலைய வேண்டியது இல்லை. அதனை போன்று கருவூலக அதிகாரிகளும் பொறுப்பான முறையில் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் இது தொடர்பாக பின்னணியில் நடைபெறுகின்ற முறைகேடுகளும் தடுக்கப்படும். கருவூலகங்களில் பில்கள் நிறுத்தி வைக்கும் வாய்ப்பு குறையும். கணக்கு தணிக்கை பணிகளையும் எளிதாக மேற்கொள்ள முடியும் என்ற பல்வேறு காரணங்களுக்காக ஐஎப்எச்ஆர்எம்எஸ் முறையில் ஆன்லைனில் சம்பளம் போடப்படும் அரசால் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இவை ஒருபுறம் இருக்க இ-எஸ்ஆர் பதிவேற்றம் செய்வதில் பல்வேறு தில்லுமுல்லுகள் அரங்கேறுவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், ஆன்லைனில் சம்பள பட்டியல் தயாரிக்கும் திட்டத்திற்கு முன்னதாக ஆசிரியர், அலுவலர்களின் இ-எஸ்ஆர் பதிவேற்றம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு குழப்பங்களும், குளறுபடிகளும், தில்லுமுல்லுகளும் நடைபெறுகிறது. இதனால் அரசுக்கும் நிதி இழப்பு கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. இஎல் சரண்டர் எண்ணிக்கையை வேண்டியவர்களுக்கு அதிகரித்து பதிவு செய்தால் அதற்கான ஊதியத்தை ஓய்வுபெறும் வேளையில் அரசு வழங்கியாக வேண்டும்.
எனவே எஸ்ஆர் பதிவேற்றம் நடைபெறும்போது அதனை சம்பந்தப்பட்ட அலுவலரை காண்பித்து சரிபார்க்க செய்ய வேண்டும். அதன் பிறகே பதிவேற்றம் செய்ய வேண்டும். சரியான முறையில் இவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மேலும் தவறு செய்யும் கணக்கு அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும். மேலும் ஒவ்வொருவரும் தங்களின் எஸ்ஆர் சரிபார்க்கும் வகையில் போதிய கால அவகாசம் வழங்கப்பட்டு திட்டத்தை செயலப்படுத்த வேண்டும்’ என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...