திரைப்படங்கள் சர்ச்சைகளில் சிக்குவது திரை உலகத்துக்கு ஒன்றும் புதிதான விஷயம் அல்ல. பெரும்பாலும் திரை உலகில் அரசியல் தலையீடு என்பதே ஒரு திரைப்படத்துக்குப் பெரும் பிரச்னையாக இருக்கும். `சர்கார்' படத்துக்கு அ.தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு சோறுபதம்.
ஆனால், அரசியல் சார்பின்றி, பொதுமக்களின் ஒரு தனிப்பட்ட பிரிவோ, குழுவோ, வலுவாக ஒரு திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது அரிதானது. அப்படி ஓர் எதிர்ப்பை சந்தித்துக்கொண்டிருக்கிறது, சமீபத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான `ராட்சசி' திரைப்படம்.ராட்சசிபடத்தில் ஒரு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜோதிகா நடித்திருக்கிறார்.சீர்குலைந்த ஒரு பள்ளியின் நிலையை மீட்டெடுத்து முன்னேற்றும் வலுவான கதாபாத்திரம் அவருக்கு. ஆனால், கதையின் போக்கில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை மிகவும் மோசமாகச் சித்திரித்திருப்பதாகவும் படத்தின் வசனங்கள் ஆசிரியர்களை அசிங்கப்படுத்தியும், அவதூறு பரப்பும் விதமாக இருப்பதாகவும், இந்தப் படம் அரசுப் பள்ளிகளை கேவலப்படுத்தி, சீர்திருத்தம் என்ற பெயரில் சேற்றை வாரிப் பூசுவதாகவும் குற்றம் சாட்டி, இந்தப் படத்துக்குத் தடை விதிக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பாக சென்னை காவல்துறை கமிஷனரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.மனுவில், `` `அரசுப் பள்ளி எங்கும் குப்பை, அங்குவேலை செய்யும் ஆசிரியர்கள் எப்போது வருவார்கள்,எப்போது போவார்கள் என்பது தெரியாது', `இந்த வாத்தியார்களால்தான் நாடே கெட்டுப் போச்சு' போன்ற வசனங்களும், ஆசிரியர்கள் மீது பாலியல் மற்றும் சாதிய குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் காட்சிப்படுத்துவதும், மிகவும் தவறு. இதனால் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறையும். ஆகையால், `ராட்சசி' படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் இளமாறன் நம்மிடம் பேசுகையில், ``இந்தத் திரைப்படம் சீர்திருத்தம் என்ற பெயரில் அரசுப்பள்ளிகளின்மேல் உள்ள நம்பிக்கையைக் கெடுக்கிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்பையே வாழ்க்கையாகக் கொண்டுதான் வாழ்ந்து வருகிறோம். தமிழகத்தில் எத்தனை ஆயிரம் அரசுப் பள்ளிகள் இருக்கின்றது, எந்தப் பள்ளியிலும் இதுபோன்ற மோசமான நிலைமையில்லை.
ஆசிரியர்கள் கையொப்பம் போட்டுவிட்டு அப்படியெல்லாம் போய்விட முடியாது. இப்போதெல்லாம் எல்லாமே பயோ-மெட்ரிக் முறைதான். அதேபோல, எந்தப் பள்ளியிலும், மாணவரின் பெற்றோரை நாங்கள் படத்தில் காட்டுவதுபோல மரியாதை இன்றி நடத்துவதில்லை" என்றார்.தொடர்ந்து பேசிய அவர், ``எங்கோ ஓரிடத்தில், யாரோ தவறு செய்வது விதிவிலக்காக நடக்கிறது. ஆனால், அதைக் காரணம் காட்டி இந்தப் படத்தில் அனைவரையுமே குற்றவாளி ஆக்கியிருப்பது, மிகவும் வருத்தமளிக்கிறது. நாங்கள் காயப்பட்டிருக்கிறோம். அதனால்தான், இப்படத்துக்குத் தடை கோரி மனு அளித்திருக்கிறோம்" என்று அடிபட்ட குரலில் வலியோடு பேசுகிறார்.
ஒருபுறம் பாராட்டுகள் குவியும் வேளையில், படத்துக்கு இப்படி ஓர் எதிர்மறை விமர்சனம் இருக்கிறதே, எதிர்ப்பு தெரிவிக்கும் ஆசிரியர்களுக்கு என்ன பதிலளிக்கிறீர்கள் என்றுபடத்தின் இயக்குநர் கெளதம் ராஜிடம் விளக்கம் கேட்க தொடர்புகொண்டோம்.
``ஆசிரியர்களின் மனு குறித்து நானும் கேள்விப்பட்டேன். என்னைப் பொறுத்தவரை, அரசுப் பள்ளிகளையும், ஆசிரியர்களையும் குறை சொல்வது என்னுடைய நோக்கமல்ல. அரசுப் பள்ளிகளில் எந்த மாதிரியான மாற்றங்கள் வந்தால் சிறப்பாக இருக்கும் என்ற எனது எண்ணத்தையே படத்தில் பதிவு செய்திருக்கிறேன்" என்றார்.மேலும், ``அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வசனங்கள்கூட, ஒரு ஆட்டோ ஓட்டுநர் பேசுவதுபோலத்தான் அமைந்திருக்கும். அப்படி பொதுச் சமூகத்தில் இருக்கும் யதார்த்த மனநிலையைத்தான் இந்தப் படம் பதிவு செய்திருக்கிறது. நானும் அரசுப் பள்ளி மாணவன்தான். என்னுடைய ஆசிரியர் ஒருவரின் தாக்கத்திலேயே ஜோதிகா மேடத்தின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறேன். ஆசிரியர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அரசுப் பள்ளிகளில்தான் கடினமான தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
ஆனால், பிரச்னை ஒரு பள்ளியின் நிர்வாகத்தில் இருக்கிறது என்பதுதான் உண்மை. ஆசிரியர்கள் உலகத்தின் அதிவேக வளர்ச்சிக்கும், ஓட்டத்துக்கும் ஏற்ப தங்களை மேம்படுத்திக்கொள்வது அவசியம் என்பதும்என் கருத்து. ஒரு நேர்மறை தாக்கத்தை இந்தப் படம் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் படம் உருவானது. அதற்குப் பலனாக பல்வேறு தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் என்னைத் தொடர்புகொண்டு பாராட்டி இருக்கிறார்கள். மற்றபடி, இந்தப் படத்தை யாரையும் காயப்படுத்தும், அவமானப்படுத்தும் நோக்கில் எடுக்கவில்லை" என்கிறார், தீர்க்கமாக.
Ratchasi
ஒரு திரைப்படம் நூறு சதவிகிதம் மக்களின் ஒப்புதலை எப்போதும் பெற்றுவிடுவதில்லை, அதற்கு ராட்சசி'யும் விதி விலக்கல்ல. பாராட்டுகளையும், விமர்சனங்களையும் நேரடியாகச் சந்திக்கும் மனநிலை இயக்குநருக்கும், எதிர்ப்பைக் கண்ணியமாக, முறையாகப் பதிவு செய்யும் பக்குவம் ஆசிரியர்களுக்கும் இருக்கும்வரை, ஆக்கபூர்வமானஒரு விவாதத்துக்குள் இந்தக் கதையும், வசனமும் சுழன்று மீண்டெழும் என்பதில் ஐயமில்லை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...