Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விண்வெளி பயிற்சிக்கு தேர்வாகி இருக்கும் தமிழக மாணவி!


அரசு உதவிபெறும் பள்ளியில் தமிழ்வழியில் பயின்ற மாணவி போலந்து நாட்டில் இவ்வாண்டு நடைபெற உள்ள விண்வெளி ஆய்வுப் பயிற்சிக்கு தேர்வாகியுள்ளார் என்பது பெருமைக்குரியது. தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த எழுத்தாளர் தாமோதரனின் மகள் உதயகீர்த்திகாதான் இந்தச் சாதனையைப் படைத்துள்ள மாணவி.

சர்வதேச அளவில் ஐந்து மாணவர்கள் மட்டும் தேர்வாகியுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து தமிழக மாணவியான உதயகீர்த்திகா மட்டுமே இப்பயிற்சிக்கு தேர்வாகியுள்ளார். தமிழ்வழியில் பயின்ற மாணவி சர்வதேச பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து பலரும் வாழ்த்துகளை மட்டுமே தெரிவித்து வரும் நேரத்தில் பயிற்சிக் காலத்தில் ஆகும் செலவுகளுக்கு நடிகர் விஜய் சேதுபதி நிதியுதவி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘விவரம் தெரியாத சின்ன வயதிலிருந்தே நிலாவுக்கு போகவேண்டும் என சொல்லிக்கொண்டேயிருப்பார் உதயகீர்த்திகா. இப்பயிற்சிக்கு தேர்வாகியிருப்பது என்பது அவரது கனவை நிறைவேற்றுவதற்கான முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது’’ என்கிறார் எழுத்தாளரும் உதயகீர்த்திகாவின் தந்தையுமான தாமோதரன்.

சமூக சேவைகளில் நாட்டம் கொண்ட எழுத்தாளர் என்பதாலோ என்னவோ மிகவும் கஷ்டப்பட்டுத்தான் தன் மகளைப் படிக்க வைத்துள்ளார் தாமோதரன். சுனாமி பாதிப்பின்போது இவர் செய்த களப்பணியின் விளைவாகத் தகுதியானவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘நான் குழந்தையாக இருக்கும்போது நிலவுக்கு போகவேண்டும் எனக் கூறியதை பெற்றோர்கள் சொல்லிச் சொல்லி என்னை வளர்த்தனர். ஐயா அப்துல்கலாமின் மீது கொண்ட பற்றினால் விண்வேளி சார்ந்த புத்தகங்களை அதிகம் படிப்பேன். அதுவே விண்வெளி வீரர் ஆகவேண்டும் என்ற ஆசையைத் தூண்டிவிட்டது. இஸ்ரோ நடத்தும் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டிக்கான விளம்பரத்தை செய்தித்தாளில் பார்த்து பத்தாம் வகுப்பு படிக்கும்போது விண்ணப்பித்தேன். ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பில் விண்வெளி ஆய்வின் பங்கு’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தியாவிலிருந்து அதுவரை அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள், அதன் தன்மைகள், செயல்படும் விதம், அவற்றால் விவசாயம், சுற்றுச்சூழல், கனிம, கரிம வளங்கள், புவிவெப்பமயமாதல் போன்றவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த விரிவான ஆய்வை மேற்கொண்டு கட்டுரை எழுதி சமர்ப்பித்தேன். 2012ம் ஆண்டு நடத்தப்பட்ட அப்போட்டியில் மாநில அளவில் ஜூனியர் லெவலில் முதல் பரிசு கிடைத்தது. மகேந்திரகிரியில் செயல்பட்டுவரும் இஸ்ரோ மையத்திற்குச் சென்று பரிசு பெற்றேன்.

இஸ்ரோவிற்குள் சுற்றிப் பார்க்க ஆவலாக இருந்தது. அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டேன். முதலில் மறுத்தவர்கள் என் கட்டுரையின் தரத்தையும் என் திறமையையும் பாராட்டி பின்னர் சுற்றிக் காட்டினர். ஆய்வு மையத்தை நேரில் பார்க்கும்போது என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது. அதுவரை சிபிஎஸ்இ பள்ளிகளில் மற்றும் ஆங்கிலவழியில் படித்தவர்கள் மட்டுமே அப்போட்டிகளில் வென்றுள்ளனர். தமிழ்வழியில் பயின்று பரிசு பெற்றதால் என்னை மிகவும் பாராட்டி சீனியர் லெவல் போட்டிகளில் கலந்துகொள்ளச் சொல்லி அதிகாரிகள் ஊக்கப்படுத்தினர்’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்த உதயகீர்த்திகா, ‘‘அடுத்த இரண்டு வருடங்களில் மீண்டும் ஒரு போட்டிக்கான அறிவிப்பு வந்தது. விண்வெளி ஆய்வு என்பது விவசாயம் முதல் தொலைத்தொடர்பு வரை எனஅனைத்துத் துறைகளையும் எவ்வாறு வழிநடத்துகிறது என்பது சீனியர் லெவலுக்கான தலைப்பாக இருந்தது. தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு, விவசாயம் போன்ற துறைகளுக்காக அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் பற்றி முழுமையாக ஆய்வு செய்து 2014ம் ஆண்டு நான் +2 படிக்கும்போது ஆய்வுக் கட்டுரையை எழுதி அனுப்பினேன். அந்த ஆய்வுக் கட்டுரையும் மாநில அளவில் முதல் பரிசை வென்றது.

இரண்டாவது முறை பரிசு பெறும்போது விண்வெளி தொடர்பான உயர்கல்வியைப் படிக்கச் சொல்லி அதிகாரிகள் கூறினர். விண்வெளி சார்ந்த படிப்புகளுக்கு இந்தியாவிலேயே ஐஐடி தான் சிறந்த கல்வி நிறுவனம் என்று சொல்லி அங்கு படிக்கச் சொன்னார்கள். ஐஐடி நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றேன்.

அந்த மையத்தில் பயிற்சி மேற்கொண்ட பெரும்பாலானோர் ஆறாம் வகுப்பிலிருந்தே நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சியை மேற்கொண்டு வந்திருந்தனர். ஆனால் நான் +2 முடிக்க இரண்டு மாதங்களே இருந்த காரணத்தினால் அந்தக் குறுகிய காலத்தில் முழுமையான பயிற்சியைப் பெற இயலவில்லை. இச்சூழலில் என்னுடைய +2 பொதுத்தேர்வுகளும் நெருங்கியதால் பயிற்சியில் எனது முழுக் கவனத்தை செலுத்த இயலவில்லை.

இந்தியாவின் சிறந்த கல்விநிறுவனத்தில் படிக்க இயலாததால் வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்கலாம் என உக்ரைனின் தேசிய விமானப்படை நடத்தும் கார்க்கியூ நேஷனல் ஏரோஸ்பேஸ் யுனிவர்சிட்டியில் விண்ணபித்தேன். இதற்காக எனக்கு பலரும் நிதிஉதவி செய்ததால் நான்கு வருட ஏர்கிராஃப்ட் மெயின்டனன்ஸ் படிப்பை 92.5 % மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றேன்’’ எனக் கூறும் உதயகீர்த்திகா ஆராய்ச்சி கட்டுரைகளுக்கான ஆய்வை மிகுந்த சிரமத்துடனேயே மேற்கொண்டுள்ளார்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போதும் சரி, +2 படிக்கும்போதும் சரி எங்கள் வீட்டில் கம்ப்யூட்டரோ, இன்டர்நெட் வசதியோ இல்லை. ஆய்வுக் கட்டுரைகளுக்கான தகல்களை பெரும்பாலும் புத்தகங்களைப் படித்தே தொகுத்தேன். தேவைப்படும் புத்தகங்களை அப்பாவிடம் கேட்பேன். அவர் காலை ஒரு வேளை சாப்பாட்டைத் தவிர்த்து பணம் சேமித்து எனக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பார்.

அவ்வாறு அப்பா சாப்பிடாமல் சேகரித்த பணத்தில்தான் நான் ஆய்வுக் கட்டுரைகளை எழுதினேன்’’ என மன நெகிழ்ச்சியுடன் தெரிவித்த உதய கீர்த்திகா படிப்பிலும் படுசுட்டியாக இருந்துள்ளார். பத்தாம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் வாங்கியுள்ளார். சர்வதேச விண்வெளிப் பயிற்சிக்குத் தேர்வான விதத்தையும் தன்னுடைய வருங்கால லட்சியத்தையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் உதயகீர்த்திகா.

‘‘இந்தியா சார்பாக விண் வெளிக்குச் சென்ற பெண்களான கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் நாசாவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். மேலும் அவர்கள் அமெரிக்க வாழ் இந்தியர்களாகத்தான் அறியப்பட்டனர். ஆகவே, முற்றிலும் இந்தியராக அதுவும் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோவின் வழியாக விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்பதே என் கனவு. 2021ம் ஆண்டு ககன்யான் திட்டத்தில் மூன்று பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர். அதில் ஒரு பெண் வீராங்கனை இடம்பெறுவார்.

அந்த ஒரு பெண்ணாக நான் இருக்கவேண்டும் என்பது என் லட்சியம். எனவே, வெறும் டிகிரி மட்டும் போதாது மேற்கொண்டு பயிற்சி வேண்டும் என கருதி போலந்து Analog Astronaut Training Centre-க்கு விண்ணப்பித்தேன்.

ஒவ்வொரு ஆண்டும் மிகவும் குறைவான எண்ணிக்கையில் பயிற்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு பயிற்சி வழங்கப்படும்.  முந்தைய கால ஆராய்ச்சிகள், விண்ணப்பதாரர்களின் திறன்கள் அடிப்படையில் பயிற்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவ்வாண்டு ஐந்து பேர் மட்டுமே சர்வதேச அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் இந்தியாவை சேர்ந்த நான் மட்டுமே தேர்வானேன்.

செவ்வாய் மற்றும்  நிலவுக்குச் சென்றால் அங்கு எவ்வாறு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும், ராக்கெட் செல்லும் வேகத்திற்கு ஏற்றவாறு நம் உடலைத் தயார்படுத்துவது எப்படி என்பது போன்ற பத்துவிதமான பயிற்சிகள் அங்கு  வழங்கப்படுகிறது. மற்ற தேர்வாளர்கள் ஒன்று அல்லது இரண்டு பயிற்சிகளை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளனர். நான் பத்து பயிற்சிகளையும் தேர்ந்தெடுத்துள்ளேன். அப்போதுதான் விண்வெளி ஆய்வு குறித்துத் துல்லியமாக அறியமுடியும்’’ என்ற உதயகீர்த்திகாவை நாமும் மனதார பாராட்டலாமே!




1 Comments:

  1. மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள் உதயகீர்த்திகா

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive