குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) கடைசி நாளாகும். தேர்வுக்கு இதுவரை 13.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவர், வரித் தண்டலர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 4 பிரிவுக்குள் வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்தக் காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்துகிறது. இந்த ஆண்டு குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிக்கை கடந்த ஜூன் 14-இல் வெளியிடப்பட்டது. 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை 13.5 லட்சம்: எழுத்துத் தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, ஜூலை 14-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஞாயிற்றுக்கிழமையாகும். சனிக்கிழமை நிலவரப்படி 13.5 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை விண்ணப்பம் செய்ய கால அவகாசம் இருப்பதால், மேலும் அதிகமானோர் விண்ணப்பம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வுக்கு ஸ்டேட் வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலமாக கட்டணம் செலுத்தலாம். கட்டணத்தைச் செலுத்த ஜூலை 16-ஆம் தேதி கடைசி நாளாகும். எழுத்துத் தேர்வு செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தொடர்ந்து அதிகரிப்பு: குரூப் 4 பிரிவுக்குள் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் சேர்க்கப்பட்டதன் காரணமாக, தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த முறை தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 17 லட்சமாக இருந்தது. இப்போது 13 லட்சத்தைத் தாண்டியுள்ளது. விண்ணப்பிக்க ஒரு நாள் அவகாசம் உள்ள நிலையில், தேர்வர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குரூப் 1 தேர்வு: இதனிடையே, குரூப் 1 முதன்மைத் தேர்வு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) நிறைவடையவுள்ள இந்தத் தேர்வினை 81 சதவீதம் பேர் எழுதியுள்ளனர். அதாவது, அனுமதிக்கப்பட்ட 9 ஆயிரத்து 441 பேரில் 7 ஆயிரத்து 600-க்கும் அதிகமானோர் முதன்மைத் தேர்வினை எழுதியுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தன
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...