ஆசிரியர் தேர்வு வாரியம் முதன்முறையாக ஆன்லைன் முறையில் ஞாயிற்றுக்கிழமை
நடத்திய கணினிப் பயிற்றுநர் நிலை-1 பணிக்கான தேர்வில் பெரும் குளறுபடி
ஏற்பட்டிருப்பதாக தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேசிய கல்வியியல் கவுன்சில் விதிகளின் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான
கணினிப் பயிற்றுநர் பணிக்கு முதுநிலை படிப்புடன் பி.எட்., முடித்தவர்கள்
மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என அண்மையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை
அரசாணை வெளியிட்டது. இதைப் பின்பற்றி 814 கணினிப் பயிற்றுநர் நிலை-1 காலிப்
பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆசிரியர் தேர்வு வாரியம் முதன்முறையாக ஆன்லைன் மூலம் 119 மையங்களில்
நடத்திய இத்தேர்வுக்கு ஆண்கள் 7,546 பேர், பெண்கள் 23,287 பேர் என மொத்தம்
30,833 பேர் விண்ணப்பித்திருந்தனர்
தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1 மணி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
வேலூர் மாவட்டத்தில் தேர்வு எழுத கணியம்பாடி கணாதிபதி துளசிஸ் பொறியியல்
கல்லூரி, காட்பாடி கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, திருப்பத்தூர் பொதிகை
பொறியியல் கல்லூரி, வேலூர் தோட்டப்பாளையம் ரேஸ் கோச்சிங் சென்டர், ஸ்ரீ
கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, அடுக்கம்பாறை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக்
கல்லூரி என மாவட்டம் முழுவதும் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
விண்ணப்பித்த 1,542 பேரில் 1,367 பேர் எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கி
மதியம் ஒரு மணி வரை தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 10
மணிக்கு தொடங்கிய தேர்வின் இடையே சில மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு
ஏற்பட்டதால் தேர்வு ஒரு மணி நேரம் தாமதமாக நடத்தி முடிக்கப்பட்டதாக மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ் தெரிவித்தார்.
இதேபோல் மாநிலத்தின் பல்வேறு மையங்களில் தேர்வு நடைபெறுவதில் குளறுபடிகள்
ஏற்பட்டன. இதனால், பாதிக்கப்பட்ட தேர்வர்கள் ஆங்காங்கே போராட்டங்களிலும்
ஈடுபட்டனர். அதன்படி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தனியார் கல்லூரி,
மதுரை பொட்டப்பாளையம் தனியார் கல்லூரி மையங்களில் தொழில்நுட்பக் கோளாறால்
தேர்வர்கள் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தேர்வர்கள்
அக்கல்லூரி மையங்களை முற்றுகையிட்டும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
மேலும், பல தேர்வு மையங்களில் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டு மதியம் 1
மணி முதல் மீண்டும் நடத்தப்பட்டன. இத்தகைய குளறுபடிகளை அடுத்து
பாதிக்கப்பட்ட தேர்வர்கள், கணினிப் பயிற்றுநர் நிலை- 1 பணிக்கான தேர்வை
மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியது:
சுமார் 10 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு கணினிப் பயிற்றுநர் தேர்வு
நடத்தப்படுகிறது. இதனால், தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளைக்
கருத்தில் கொண்டே இத்தேர்வை ஆன்லைன் முறையில் நடத்தாமல் ஓஎம்ஆர் விடைத்தாள்
முறையில் நடத்த முன்பே கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், ஆசிரியர் தேர்வு
வாரியம் அதைப் பொருட்படுத்தாமல் ஆன்லைன் முறையிலேயே தேர்வை நடத்தியது.
இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வர்கள் பலரும் இத்தேர்வை
முழுமையாக எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பல தேர்வு மையங்களில்
செல்லிடப்பேசிகள் அனுமதிக்கப்பட்டுள்ள காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இதன்மூலம் இத்தேர்வு நியாயமாக நடத்தப்படவில்லை என்பது உறுதியாகிறது. எனவே,
ஆன்லைன் முறையில் நடத்தப்பட்ட கணினிப் பயிற்றுநர் நிலை-1 தேர்வை முழுமையாக
ரத்து செய்துவிட்டு மீண்டும் ஓஎம்ஆர் விடைத்தாள் முறையில் நடத்த வேண்டும்
என்றனர்.
மறுதேர்வு நடத்தப்படும்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கணினி பயிற்றுநர் தேர்வை எழுத
முடியாதவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ள
ஆசிரியர் தேர்வு வாரியம், தேர்வை முழுமையாக முடிக்காதவர்களுக்கும் மீண்டும்
தேர்வு நடத்தப்படும். தேர்வு நடைபெறும் நாள் மற்றும் மையங்கள் சார்ந்த
விவரங்கள் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் தேர்வர்களுக்கு விரைவில்
தெரிவிக்கப்படும். எனவே இத்தேர்வர்கள் எக்காரணத்தைக் கொண்டும் அச்சப்படத்
தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...