அரசு ஊழியர்களுக்குப் பயிற்சி
அளிக்க பயிற்றுநர்களை சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், பயிற்சிக்காக வரும் பயிற்றுநர்களின் வேலை நாள், பணி நாளாகவே கருதப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவைப் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் எஸ்.ஸ்வர்ணா பிறப்பித்துள்ளார்.
அவர் பிறப்பித்த உத்தரவு விவரம்:
தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த மற்றும் நடுநிலையில் உள்ள அலுவலர்களுக்கு அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் சார்பில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.இந்த வகுப்புகளை, அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் வழக்கமான பயிற்றுநர்கள் நடத்துவதுடன் மட்டுமல்லாது, கௌரவ பயிற்றுநர்களும் நடத்துகின்றனர். பிற தனிப்பட்ட நபர்கள், தமிழக அரசுத் துறைகள், நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றில் பணியாற்றுவோரும் கௌரவ பயிற்றுநர்களாக நியமிக்கப்பட்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
நாள்களை உறுதி செய்ய கோரிக்கை:
தமிழக அரசுத் துறைகளில் ஒட்டுமொத்த மனிதவளத்தை மேம்படுத்தும் பணியில் கௌரவ பயிற்றுநர்களின் தேவை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதன் மூலமாக, அரசுத் துறைகளின் பணித் திறனை வளப்படுத்த முடியும். எனவே, பிற அரசுத் துறைகளில், நிறுவனங்களில் பணியாற்றும் கௌரவ பயிற்றுநர்கள் மாதத்தின் மூன்று நாள்கள் பயிற்சி வகுப்புகளை நடத்தவும், அந்த நாள்களை அவர்களுக்கு பணி நாள்களாகக் கருதவும் தமிழக அரசைஅண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் கேட்டுக் கொண்டிருந்தார்.அவரது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்திலும், அதனுடைய மண்டலமையங்களிலும் மாதத்துக்கு மூன்று நாள்கள் பயிற்சி வகுப்புகளை நடத்த ஒவ்வொரு கௌரவ பயிற்றுநருக்கும் அனுமதி அளித்துள்ளது. மேலும், அந்த நாள்கள் அவர்களுக்கு பணி நாள்களாகவே கருதப்படும். இதுபோன்ற பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு வசதியாக உரிய கௌரவ பயிற்றுநர்களுக்கான அனுமதியை துறைத் தலைவர்கள் அளித்திட வேண்டும் என்று தனது உத்தரவில் ஸ்வர்ணாதெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...