தமிழ், ஆங்கில வழியில் படிக்கும்
மாணவர்களை ஒரே வகுப்பறையில் அமரவைத்து பாடம் நடத்துவதால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர் களிடையே கற்றல் திறன் மற்றும் கற்பித்தலில்சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் மாணவர்கள் படித்து வருகின்றனர். தமிழ், ஆங்கிலம் மட்டுமே பொதுவான பாடங்களாக இருக்கும். ஆங்கில வழி என்றால், மற்ற பாடங்கள் ஆங்கிலத்தில்தான் கற்றுத்தர வேண்டும். தமிழ் வழி என்றால், தமிழில் கற்றுத்தர வேண்டும். இரு பிரிவு மாணவர்களையும் ஒரே வகுப்பறையில் அமரவைத்து கற்றுத்தருவதால், மாணவர்களின் கற்றல் திறன்பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர் கல்வியாளர்கள்.
ஆசிரியர் தட்டுப்பாடு
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: பொதுவாகவே5-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்துவிட்டு, 6-ம் வகுப்பில் ஆங்கிலப் பிரிவை தேர்ந்தெடுத்து படிப்பவர்களுக்கு தனியாக பாடம் நடத்த வேண்டும். அவர்களுக்கெனபிரத்யேக வகுப்பறை தயார் செய்துதர வேண்டும். ஆனால், சில பள்ளிகளில் போதிய இடவசதி இல்லாததால், இரு பிரிவு மாணவர்களையும் ஒரே வகுப்பறையில் அமர வைத்துபாடம் நடத்தப்படுகிறது.ஓர் ஆசிரியரே தமிழ், ஆங்கில வழியில் பாடங்களை எடுக்கும் நிலை ஏற்படுகிறது. அவசர,அவசர மாக பாடங்களை முடிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆசிரியர்கள் தள்ளப் படுகின்றனர். ஒரு கட்டத்தில் கற்பித்தலில் ஆசிரியர்கள் சோர் வடைவது போல், கற்றலில் மாணவர்கள் சோர்வடைகின்றனர். கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் என மற்ற பாடங்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கென பிரத்யேக வகுப்பறை, ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். அப்போதுதான், மாணவர் முழுமையாக படிக்க இயலும். இதனை பள்ளி நிர்வாகம் தங்கள் அளவில் செய்து, அரசுப் பள்ளிகளை நம்பியுள்ள குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கற்றல் திறன்
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, ‘5-ம்வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்துவிட்டு, அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு ஆங்கில வழியில் படிக்க வரும் மாணவர்கள், எளிதாக பாடங்களை புரிந்துகொள்கிறார்கள். 5-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்துவிட்டு, அதன் பிறகு ஆங்கில வழியில் 6-ம் வகுப்பு சேர்பவர்கள் கொஞ்சம் தாமதமாகத்தான் புரிந்துகொள்வார்கள். இதற்கிடையில், தமிழ் வழியில் படிப்பவர்களையும், ஒரே வகுப்பறையில் அமரவைத்து கற்றுத்தரும்போது, கற்றலில் பல்வேறு சிரமங்களை மாணவர்கள் சந்திக்கிறார்கள். பாடத்தை புரிந்து படிக்கஇயலாத சூழல் ஏற்படும். மாவட்டம் முழுவதும் இதுபோன்ற பள்ளிகளை முழுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
அரசுப் பள்ளிகள்
அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் கூறும்போது, ‘தமிழ் வழியில் அதிகம் மாணவர்கள் சேர்வதில்லை. திருப்பூர் மாநகராட்சி பள்ளி ஒன்றில் 12 பேர் மட்டுமே 6-ம் வகுப்பில் தமிழ் வழியில் சேர்ந்துள்ளனர். 52 பேர் ஆங்கில வழியில் சேர்ந்துள்ளனர். இதனால், மாணவர்களை தனியாக வைத்து வகுப்பு எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, தமிழ் வழியில் குறைவான மாணவர்கள் சேர்வதால், இதுபோன்ற சிக்கல் எழுகிறது. எனவே, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமித்த முடிவு எடுத்தால் மட்டுமே, இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...