Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொய்க்கால் குதிரை, கரகாட்டம்... மரபுக் கலை பயிற்சியளிக்கும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்!

நாம் பின்பற்றி வரும் பண்பாடுகளை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுசெல்வது இரண்டு தரப்பினரால் மட்டுமே முடியும். ஒன்று பெற்றோர், இன்னொன்று ஆசிரியர்கள். மாணவர்களுக்குக் கல்வியைப் போதிப்பதோடு, சமூகம், பண்பாடு சார்ந்த செய்திகளையும் ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும்போதே அக்கல்வி முழுமையை அடைகிறது. வெளியுலகைப் பற்றிய அறிமுகம் பள்ளியில் மட்டுமே கிடைக்கும் சூழலில் வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, பாடக்கல்வியைத் தாண்டியும் அந்த மாணவருக்குப் பல கதவுகளைத் திறந்துவிடும் பெரும் பொறுப்பு ஆசிரியர்களுக்கே இருக்கிறது. அந்தப் பொறுப்பினை முற்றிலும் உணர்ந்தவராகத் திகழ்கிறார் கலைமுருகன்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகிலுள்ள கீழச்சாக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆசிரியர்தான் கலைமுருகன்.
வழக்கமான தம் பணிகளுடன் நம் மரபுக் கலையைப் பரவலாக அறிமுகம் செய்துவைப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார். பல்வேறு விழாக்களில் இவரே, தப்பாட்டாம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கட்டைக்கால் ஆட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வரும் கலைமுருகனிடம் பேசினோம்.
``கமுதிக்குப் பக்கத்துல உ.கரிசல்குளம்தான் என்னோட சொந்த ஊரு. அந்தப் பகுதியில அடிக்கடி நாடகம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம்னு நிறைய நடக்கும். அங்கெல்லாம் நான் போய்ப்பார்ப்பேன். சின்ன வயசிலிருந்தே கலைகள் மேல ஓர் ஆர்வம். தவில் எப்படி வாசிக்கிறாங்க... கரகம் கீழே விழாம எப்படி ஆடுறாங்கனு ஒண்ணு ஒண்ணா பார்ப்பேன். அடுத்த நாள், வீட்டுல அதே மாதிரி ஆடியும் பார்ப்பேன். அந்தப் பழக்கம்தான் இதுக்கெல்லாம் ஆரம்பப் புள்ளி. ஆசிரியரானதும் இதை மாணவர்களுக்கு ஆடக் கத்துகொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்காக, மதுரையில கரகாட்டம், கட்டக்கால் ஆட்டம், தப்பாட்டம்னு பயிற்சி எடுத்தேன். இப்போ, நானாப் பழகுனது, பயிற்சி எடுத்துக்கிட்டதுனு எட்டு ஆட்டங்கள் ஆடத் தெரியும்
மாணவர்களுக்கு நான் மட்டுமே சொல்லிக்கொடுத்தால், குறைவான நபர்களுக்குத்தான் கத்துக்கொடுக்க முடியும். அதனால, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்தக் கலைகள கத்துக்கொடுத்தால், அவங்ககிட்ட படிக்கிற மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பாங்க. ஒவ்வொரு வருஷமும் இது தொடரும்னு நினைச்சேன். அதுக்காக, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலமாக, யார் யாருக்கெல்லாம் ஆர்வம் இருக்குனு கேட்டேன். 100க்கும் அதிகமான ஆசிரியர்கள் வாரேன்னு சொன்னாங்க. அதில் 25 ஆசிரியர்கள மட்டும் தேர்வு பண்ணினேன். அவங்களுக்கு மட்டும் கலைப் பயிற்சி கொடுத்துட்டு இருக்கோம்" என்றவரிடம், ``நீங்களே மற்றவர் ஆடியதைப் பார்த்து பழகிக்கொண்டதாகச் சொல்கிறீர்கள்... நீங்கள் எப்படி அந்தக் கலையைப் பயிற்சிக் கொடுக்க முடியும்?" என்றேன்.
``ஒவ்வொரு கலைக்கும் அதுக்கு உரிய ஆட்டக்கலைஞரை வெச்சிதான் பயிற்சிக் கொடுக்கிறோம். எனக்கு ஏற்கெனவே பழக்கம் இருக்கிறதால, எப்படிப் பயிற்சிக் கொடுக்கலாம், எதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்னு முன்கூட்டியே திட்டமிட முடியுது. போன வருஷம் டிசம்பர் மாதம் முதல் பயிற்சியை ஆரம்பிச்சோம். சம்மர் லீவு, சனி ஞாயிறு லீவு எனக் கிடைக்கிற லீவ்ல பயிற்சி கொடுக்கிறோம். பள்ளி வேலைகளுக்கு துளியும் இடைஞ்சல் இல்லாம, எங்க பயிற்சியை வகுத்துக்கிறோம். இதுக்கான செலவுகள பொறுத்தவரை, அந்தந்த நாள்ல ஆகுற செலவை அப்படியே பகிர்ந்து கொள்கிறோம். அதனால, யாருக்கும் இந்தப் பயிற்சி சுமையா தெரியல.
பல ஊர்களேருந்து வர்ற ஆசிரியர்கள் கஷ்டப்பட்டு இந்தக் கலைகள கத்துக்கொள்றது ஒரே நோக்கத்துக்குத்தான். நம்மோட மரபுக் கலைகளை எப்படியாவது அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கணும். சின்ன வயசுல நான் பார்த்த ஆட்டங்கள்தான் என்னை இப்படி முழு வீச்சோடு வேலை செய்ய வெக்குது. அதனால, பள்ளி மாணவர்கள் இதைப் பார்த்து ஆர்வத்தோடு கத்துக்கிட்டாதான் இந்தக் கலைகள் வாழும். மாணவர்களோடு தனித்திறனும் மேம்படும்.
எங்களோடு பயிற்சியின் முடிவுல, இந்த வருஷம், அக்டோபர்ல, கல்வி அமைச்சர், அதிகாரிகள் அனுமதியோட நாங்க பழகினதை பெரிய மேடையில அரங்கேற்றம் செய்யலாம்னு நினைக்கிறோம். அதுவும் நல்ல விதமாக நடக்கும்னு நம்பறோம்" என்கிறார் நம்பிக்கையுடன். அந்தப் பகுதியில் எங்கு கபடிப் போட்டி நடந்தாலும் நடுவராக இவரைத்தான் அழைப்பார்களாம். பல திறமைகளை வளர்த்துக்கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்.
புதிய முயற்சிகள் எடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் எண்ணங்கள் நிறைவேறட்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive