பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு
வரும் ஜூன் 25ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியல் தேதி மாற்றம் காரணமாக சிறப்பு பிரிவு கலந்தாய்வு தேதி தள்ளி போகிறது. தமிழகத்தில் 539 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் பி.இ, பி.டெக் படிப்புகளில் ஏறதாழ ஒரு லட்சத்து 80 ஆயிரம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதில் சேருவதற்கான ஆன்லைன் பதிவு மே 2ம் தேதி தொடங்கி 31ம் தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. அதன்படி, 2019-20 கல்வி ஆண்டு பொறியியல் படிப்பில் சேர 1 லட்சத்து 33 ஆயிரத்து 166 மாணவா்கள் விண்ணப்பதித்தனர். இவர்களுக்கு கலந்தாய்வுக்கான ரேண்டம் எண்கள் ஜூன் 3ம் தேதி இணையதளத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 17) மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருத்தது.
ஆனால், திடீரென இது ஒத்திவைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தர்மபுரியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பகழகன், தமிழக பொறியியல் சேர்க்கைக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 166 பேர் பதிவு செய்திருந்தனர். இதில், 1 லட்சத்து 4 ஆயிரத்து 418 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர். இது, 78.4 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு பொறியியல் சேர்க்கைக்கு 1 லட்சத்து 59 ஆயிரம் பேர் பதிவு செய்து, 98 ஆயிரம் பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர். இது 61.6 சதவீதம் ஆகும். நடப்பு கல்வியாண்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், வரும் 17ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட இருந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி தர வரிசைப் பட்டியல் வெளியிடுவது 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பின்போது சில மாணவர்களால் சில சான்றிதழ்களை உடனடியாக சமர்ப்பிக்க இயலாத சூழல் நிலவியதாக தெரியவந்தது. இதுபோன்ற சிறு சிறு பிரச்சினைகளில் இருந்தவர்கள் பெயரும் தரவரிசைப் பட்டியலில் தவறாமல் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். தரவரிசை பட்டியல் தேதி மாற்றம் காரணமாக சிறப்பு பிரிவு கலந்தாய்வு தேதி தள்ளிவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், வரும் 20ம் தேதி நடைபெறவிருந்த சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு வரும் ஜூன் 25ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த கலந்தாய்வு 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதா சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு வரும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...