ஈரோடு: "சார்.. இப்படியே 2 வருஷமா சொல்லிட்டு இருக்கீங்க.. எப்பதான் சொன்னதை செய்ய போறீங்க" என்று பள்ளி மாணவிகள் அமைச்சர் செங்கோட்டையனை முற்றுகையிட்டு விட்டனர்!

இப்ப இருக்கிற அமைச்சர்களிலேயே பள்ளி கல்விதுறையை மிக சிறப்பாக செய்து வரும் அமைச்சர் செங்கோட்டையன்தான். ஸ்மார்ட் கிளாஸ், யூனிபார்ம்.. ஆங்கில பள்ளிக்கு நிகரான சீர்திருத்தத்தை தனது துறையில் செய்து வருகிறார்.

அதிமுகவின் சீனியர் அமைச்சரான இவர், ஜெயலலிதா இறந்ததில் இருந்தே தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்! ஆனால் 2 நாளைக்கு முன்னாடி அதிமுக ஆலோசனை கூட்டம் சமயத்தில்தான், "பொதுச்செயலாளர் செங்கோட்டையன்" என்று போஸ்டர்கள் பரபரக்க ஆரம்பித்தன.


முற்றுகை
இப்போது சமாச்சாரம் என்னவென்றால், கோபியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பள்ளி முன்பு 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் திரண்டு நின்றிருந்தனர்.


லேப்டாப்
அமைச்சரை வரவேற்கத்தான் இப்படி நிற்கிறார்கள் என்று பார்த்தால், திடீரென்று அவரை முற்றுகையிட்டு விட்டனர். "2017ம் வருஷமே நாங்கள் பிளஸ் 2 முடிச்சிட்டோம். ஆனா இதுவரை எங்களுக்கு லேப்டாப் தரவே இல்லை" என்றனர்.


அரசாணை
இதனை கொஞ்சமும் எதிர்பாராத செங்கோட்டையன், "இன்னும் 2 மாசத்தில் எல்லோருக்கும் லேப்டாப் தந்துடுவாங்க.. அதுக்கான அரசாணை கூட பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.


வாக்குவாதம்
ஆனால் மாணவிகளோ, "சார்.. இதையேதான் 2 வருஷமா சொல்லிட்டு வர்றீங்க.. வெறும் அறிவிப்பு மட்டும்தான் இருக்கு..இப்போ நாங்க பிளஸ் டூ முடிச்சிட்டு காலேஜில்கூட சேர்ந்துட்டோம். இந்த சமயத்துல லேப்டாப் தந்தால் மட்டுமே எங்களால படிக்க முடியும்" என்று சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தர்மசங்கடத்தில் சிக்கிய செங்கோட்டையனோ, கண்டிப்பாக 2 மாசத்தில் லேப்டாப் தருவதாக சொல்லி அங்கிருந்து நகர்ந்து சென்றார்.


சீல் போட்டுள்ளனர்
ஆனாலும் மாணவிகள் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். இதை பற்றி விசாரித்ததற்கு, "நாங்க பிளஸ் டூ படிச்சி முடிச்சிட்டு, ஸ்கூல்ல டிசி (மாற்று சான்றிதழ்) வாங்கிட்டோம். ஆனால், அந்த டிசியில், லேப்டாப் எங்களுக்கு கொடுத்ததாக சீல் போட்டுள்ளார்கள். அதனால்தான் நாங்க அமைச்சரை முற்றுகையிட்டோம்" என்றனர்.