சென்னை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் பணிபுரியும்
2,500 பேராசிரியர்கள் தகுதியற்றவர்களாக இருப்பதாக தெரியவந்துள்ளது. ஒரு
கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்ற முதுநிலை பட்டப்படிப்பில் 55
சதவீதம் தேர்ச்சியுடன், தேசிய தகுதி தேர்வு (நெட்) அல்லது மாநிலதகுதி
தேர்வு (செட்) ஆகிய ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
அதேபோல், பல்கலைக்கழக மானியக்குழு விதி 2009-ன்படி ஆராய்ச்சி படிப்பு முடித்திருந்தாலும் உதவி பேராசிரியர்களாக இருக்கலாம். அந்த வகையில் நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை பல்கலைக்கழகத்துக்கு கீழ் இயங்கும் 90 இணைப்பு கல்லூரிகளில் தகுதியான பேராசிரியர்கள் பணிபுரிகிறார்களா? என்பது குறித்து சென்னை பல்கலைக்கழகம் சரிபார்த்தது. அதில் 30 சதவீதம் பேராசிரியர்கள் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்துள்ள விதிகளின்படி தகுதியற்றவர்கள் என்பதை சென்னை பல்கலைக்கழகம் கண்டு பிடித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பி.துரைசாமி கூறுகையில், “நீதிமன்ற உத்தரவுப்படி இணைப்பு கல்லூரிகளில் தகுதியான பேராசிரியர்கள் இருக்கிறார்களா என்று சரிபார்த்தோம். 90 இணைப்பு கல்லூரிகளில் மொத்தம் 8,500 பேராசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் 2,500 பேராசிரியர்கள் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்துள்ள விதிகளின்படி தகுதியற்றவர்களாக இருக்கின்றனர்” என்றார். நகர் பகுதிகளில் உள்ள பல கல்லூரிகளில் தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் இருக்கின்றனர். ஆனால் புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில்தான் தகுதியற்ற பேராசிரியர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
தகுதியற்றவர்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பேராசிரியர்கள் தேசிய தகுதி தேர்வு அல்லது மாநில தகுதி தேர்வில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்று பணியில் தொடர சென்னை பல்கலைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது. அண்மையில் இணைப்பு கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட கல்லூரி முதல்வர்கள் தகுதியான பேராசிரியர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று புகார் தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழகமேஒரு இணையதளத்தை உருவாக்கி, தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் இருந்தால் அதில் பதிவு செய்ய அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, இணையதளம் உருவாக்கிய சில நாட்களிலேயே 800-க்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் பதிவு செய்து இருப்பதாகவும், அவர்களை இணைப்பு கல்லூரிகளுக்கு பரிந்துரைப்போம் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்தார். இதுகுறித்து சில பேராசிரியர்கள் கருத்து கூறும்போது, “பேராசிரியர்களுக்கு ரூ.7 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது. அதிலும் ரூ.1,000 உணவு மற்றும் பஸ் போக்குவரத்துக்காக பிடித்தம் செய்துவிடுகிறார்கள்.
இதுபோன்ற சொற்ப அளவிலான சம்பளத்துக்கு தகுதியான பேராசிரியர்கள் எப்படி வருவார்கள்?” என்று கேள்வி எழுப்பினர். தகுதியற்ற பேராசிரியர்களை கொண்டு செயல்படும் கல்லூரிகளுக்கு கூடுதலாக படிப்புகளை வழங்கக் கூடாது என்று பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் குரல் எழுப்பி இருக்கின்றனர். ஆனால் கல்லூரி நிர்வாகமோ, “கணிதம், கணினி அறிவியல், ஆங்கிலம், புள்ளியியல் மற்றும் காட்சி தொடர்பியல் (விஷூவல் கம்யூனிகேஷன்) உள்பட பல்வேறு பாடங்களுக்கு தகுதியான பேராசிரியர்கள் கிடைக்கவில்லை” என்று தெரிவித்து இருக்கிறது. தேசிய தகுதி தேர்வு, மாநில அளவிலான தகுதி தேர்வு சங்கத்தின் ஆலோசகர் எஸ்.சுவாமிநாதன் கருத்து கூறுகையில், “மாநிலத்தில் 50 ஆயிரம் தகுதியான பேராசிரியர்கள் இருக்கின்றனர். அதே அளவுக்கு இணையாக ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்துள்ள விதி படி சம்பளம் வழங்க கோரிக்கை விடுக்கின்றனர். ரூ.10 ஆயிரத்துக்கு மேல் அவர்களுக்கு சம்பளம் வழங்க பல கல்லூரிகளுக்கு மனம் வரவில்லை” என்றார். பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி, உதவி பேராசிரியருக்கு ரூ.65 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும்.ஆனால் கல்லூரிகள் அதை வழங்க மறுக்கின்றனர்” என்பது பேராசிரியர்களின் புகாராக அமைந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...