லண்டனில் படித்து வந்த தங்களின் மகனை விழுப்புரம் அரசுப் பள்ளியில் சேர்த்த தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
விழுப்புரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிவப்பிரகாஷ் - சுபாஷினி தம்பதி லண்டனில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் இளைய மகன் அன்புச்செல்வன் லண்டனில் உள்ள ஒரு பள்ளியில் முதல் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். ஆனால், தங்கள் மகன் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் விழுப்புரம் மாவட்டம், நன்னாடு ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பில் சேர்திருக்கின்றனர் இந்தத் தம்பதி.
சிவக்குமார் பிரிட்டிஷ் தூதரகத்திலும், சுபாஷினி லண்டன் பள்ளியில் ஆசிரியையாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழ் மீதும், அரசுப் பள்ளி மீதும் தீராத பற்றுக்கொண்ட இந்தத் தம்பதி, நன்னாடு அரசுப் பள்ளியில் பணிபுரியும் சிறப்பான ஆசிரியர்களைப் பற்றியும், அவர்களின் கல்வி போதிக்கும் முறை பற்றியும் கேள்விப்பட்டு தங்கள் மகனைச் சேர்த்திருக்கின்றனர்.
``நானும், என் கணவரும் லண்டனில் வேலை செய்துவருகிறோம். நாங்கள் இருவருமே அரசுப் பள்ளியில் படித்தவர்கள்தான். எங்களின் இந்த உயர்வுக்கு அரசுப் பள்ளிகள் கொடுத்த சூழலும், அதன் ஆசிரியர்களும்தான். எங்கள் மகனுக்கும் அப்படி ஒரு கல்வியைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். அதற்கான அரசுப் பள்ளியைத் தேடிக் கொண்டிருந்தபோதுதான் இந்தப் பள்ளியின் சிறப்பான செயல்பாடுகளைப் பற்றியும், அற்பணிப்பு மிக்க தலைமையாசிரியை புவனேஸ்வரி அவர்களைப் பற்றியும் கேள்விப்பட்டோம். அதனால் உடனே இங்கு வந்து பள்ளியில் 2-ம் வகுப்பில் சேர்த்திருக்கிறோம். தற்போது அரசு உயர் பதவிகளில் பதவி வகிப்பவர்களில் 90% பேர் கண்டிப்பாக அரசுப் பள்ளிகளில் படித்தவர்களாகத்தான் இருப்பார்கள். தற்போதும் அந்த நிலை சற்று சரிந்துவிட்டதில் எங்களுக்கு வருத்தம்தான். ஆனாலும் அரசுப் பள்ளிகளின் மீதான எங்கள் நம்பிக்கை இன்னும் குறைந்துவிடவில்லை" என்கிறார் சுபாஷினி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...