தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத
ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை தகுதி நீக்கம் செய்யவும், அவர்களிடம் 10 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ராஜ்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தகுதி தேர்வு அறிமுகப்படுத்தி ஒன்பது ஆண்டுகளில் ஆண்டுக்கு இரண்டு முறை என 18 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்கவேண்டும்.ஆனால், தமிழகத்தில் மூன்று முறைதான் நடத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக தெளிவான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும்தான் உரிய அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. தனி நீதிபதி தேசிய தகுதி தேர்வை அடிப்படையாக எடுத்துக்கொண்டுள்ளார். தமிழக ஆசிரியர்கள் தேசிய தகுதி தேர்வை எழுத முடியாது என்பதை தனி நீதிபதி கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
தற்போதுகூட தேர்வு அறிவிப்புதான் வெளியாகி உள்ளது. ஆனால், எப்போது தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை. எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும்.தனி நீதிபதி முன்பு தாங்கள் மனுதாரர் இல்லை என்பதால், இந்த மேல்முறையீட்டு வழக்கை பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், சுப்ரமணியபிரசாத் அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.சங்கரன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதிப்பதாகவும் அடுத்தவாரம் விசாரிப்பதாகவும் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...