எம்பிபிஎஸ் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத்
தேர்வு (நீட்) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெற உள்ள
நிலையில், மதுரை, திருநெல்வேலியில் தேர்வு மையங்கள் மாற்றப்பட்டதாகக்
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நிகழாண்டு நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 14 மாவட்டங்களில் 520 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் தவிர்க்க முடியாத காரணங்களால் சில தேர்வு மையங்களில் தேர்வெழுதும் மாணவர்கள் வேறு மையங்களுக்கு மாற்றப்படுவதாக வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியானது. இது பல்வேறு குழப்பங்களுக்கு வித்திட்டுள்ளது.
தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பாக முன்னறிவிப்பின்றி இதுபோன்ற மாற்றங்கள் செய்யப்படுவது ஏற்புடையதல்ல என்று மாணவர்களின் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு நடுவே, தேர்வர்கள் எத்தகைய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பான தகவல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. அதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதும் விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது.
குறிப்பாக, ஆடை மற்றும் அணிகலன்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதும், பர்ஸ், பெல்ட், கைக் கடிகாரம் ஆகியவற்றுக்கு அனுமதி மறுக்கப்படுவதும் வழக்கம்போலவே விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இம்முறை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது.
நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வந்த நிலையில், இந்த ஆண்டு தேசிய தேர்வுகள் முகமை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...