திருப்பூர் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிமாணவன் சபரிநாதன், வருங்கால விஞ்ஞான உலகில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
சமீபத்தில் வெளியான ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் 91.29 சதவீதம் மதிப்பெண் பெற்று திருப்பூரில் தேர்ச்சியான ஒரே மாணவன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.அவரிடம் பேசியதிலிருந்து...அப்பா பொன்னுசாமி, அம்மா தனலட்சுமி இருவரும் நெசவுத்தொழில் பண்றாங்க. ஒண்ணாம் வகுப்புல இருந்து அரசு பள்ளியில்தான் படிக்கிறேன். எதையும் மனப்பாடம் செய்ய பிடிக்காது. கருத்தை உள்வாங்கி புரிஞ்சு படிப்பேன். பத்தாம் வகுப்பில், 484 மார்க் கிடைச்சதும். பிளஸ்2 தேர்விலும் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.மொழிபாடங்கள் பிரச்னை இல்லை.இயற்பியல், வேதியியல், கணக்கு பாடத்துக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தந்தேன். காலை, 8:00 மணி - மாலை, 6 மணி வரை ஸ்பெஷல் கிளாஸ். ஆசிரியர் சொல்லித்தர்றது மட்டும்தான். ஜூன் மாசமே கல்வித்துறை, 'தொடுவானம்' மூலமா ஒவ்வொரு அரசு பள்ளியில் ஜே.இ.இ., நீட் தேர்வுக்கு தகுதியுள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்தாங்க.
திருப்பூரில் ஜே.இ.இ., தேர்வுக்கு தேர்வாகிய இருமாணவர்களில் நானும் ஒருவன்.பொதுத்தேர்வுக்கு தயாராகிட்டே, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வுக்கும் படிச்சேன். ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் என்னை உற்சாகப்படுத்துனாங்க. கான்செப்ட் சொல்லிக்கொடுத்து, ஒவ்வொரு கேள்வியையும் என்னையே தயாரிக்க சொன்னாங்க. இந்த பயிற்சி, பப்ளிக் தேர்விலும் கிரியேட்டிவ் டைப் கேள்விகளுக்கு பதிலளிக்க சுலபமாக இருந்துச்சு.
இதனாலே, பிளஸ்2வில், 573 மார்க் எடுத்து ஸ்கூல்பர்ஸ்ட் எடுக்க முடிந்தது; ஜே.இ.இ., தேர்விலும், 2 லட்சம் பேர்ல, 28 ஆயிரத்து 206 இடம் கிடைச்சது.ஜே.இ.இ., தேர்வை ஆங்கிலம், இந்தி, குஜராத்தி மொழியில மட்டும்தான் எழுத முடியும். இதனாலேயே அரசு பள்ளி மாணவர்கள் பயப்படுறாங்க.கணக்கு, வேதியியல் பாட கேள்விகள் ஆங்கிலத்திலும் எளிதாக புரிந்துகொள்ள முடியும். இயற்பியல் பாடத்தை மட்டும்தான் படிக்கும்போது ஆங்கிலத்திலும் அர்த்தத்தை புரிந்து படித்தால் ஜே.இ.இ., தேர்விலும் அசால்டாக அடிக்கலாம்,' என்கிறார்.
மாதம், 3 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைப்பதே அரிதாகிபோன, கைத்தறி நெசவாளி குடும்பத்தில் பிறந்த இவர், அடுத்த, அட்வான்ஸ் தேர்வுக்கு ரெடியாகி வருகிறார். ஐ.ஐ.டி.,யில் நிச்சயம் நுழைந்து இஸ்ரோவில் பணிபுரிவதே லட்சியமாக கொண்டுள்ளார்.வாழ்த்துக்கள் சபரிநாதன்..!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...