2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை (5-ம் தேதி) நடத்தப்படுகிறது. ஃபானி புயல் காரணமாக ஒடிசாவில் மட்டும் நாளை நடைபெறவில்லை. முன்பைப்போலவே இந்த முறையும் நீட் தேர்வுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில், நீட் என்று சொன்னவுடன் 2017-ல் அனிதா, 2018-ல் பிரதீபா என்ற அச்ச உணர்வுதான் முதலில் எழுந்து நிற்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக நீட்டுக்கு எதிராகத் தமிழகத்தில் வலுவான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசியல் கட்சிகளும் நீட்டுக்கு எதிராகக் கொடிபிடித்து வருகின்றன. காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகள்கூட நீட் விவகாரத்தில் தமிழக எல்லைக்குள் முகமூடி அணிந்து வேறு நிலைப்பாட்டையே முன்வைக்கின்றனர். ஆனாலும், இவற்றுக்கிடையே தேர்வுகளும் மரணங்களும் நிகழ்வது தொடர்கதையாகதான் இருக்கிறது.
தமிழகத்தில் மொழிசார் பிரச்னை என்பது எப்போதும் முன்னிறுத்தப்படும். ஆனால், நீட் விவகாரத்தில் அவை எடுபடாமல் போகின. கடந்த தேர்வில் 49 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டதற்கு, 196 மதிப்பெண்ணைத் தமிழில் தேர்வெழுதியவர்களுக்கு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அதை, உச்ச நீதிமன்றம் மறுத்துத் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், தமிழக மாணவர்கள் தமிழில் நீட் தேர்வுக்குத் தயாராவதற்கான புத்தகங்கள்கூட இதுவரை தமிழில் இல்லை. இதன் மற்றொரு விளைவுதான், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைகளில் ஏற்பட்டுவரும் தொய்வு.
இதுகுறித்து பேசிய டெக் ஃபோர் ஆல் (tech 4 all) அமைப்பைச் சார்ந்த ராம்பிரகாஷ், "நீட் தேர்வு என்பது 17 வயதுக் குழந்தைகளுக்கு நடத்தப்படுகிறது என்ற உணர்வுகள் முதலில் தேர்வுகளை நடத்துபவர்களுக்கு வரவேண்டும். நீட் தேர்வுகளை அந்தந்தப் பகுதிகளின் மொழிகளில் நடத்தவேண்டும். அதுதான் அந்தப் பகுதி மாணவர்களுக்கு எளிமையானதாக அமையும். ஆனால், தற்போது பெயருக்கு மட்டும்தான் தமிழில் நடைபெறுகிறதே தவிர, நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்கள்கூட இதுவரை தமிழில் இல்லை. நீட் தேர்வு பற்றியான அறிவிப்புகளில்தொடங்கி, விண்ணப்பங்கள்வரை எதுவும் தமிழில் வெளியிடப்படுவதில்லை. தேர்வுக்கான வினாத்தாள்களை மட்டும் தமிழில் அளித்துவிட்டால், தேர்வுகளைத் தமிழில் நடத்திவிட்டோம் என்றாகிவிடுமா? மத்திய அரசின் பாடத்திட்டங்களில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. தமிழக மாணவர்களுக்குப் புத்தகங்களாவது மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா என்றால் அதுவும் இல்லை. அவர்கள் எந்தப் புத்தகங்களை வைத்துப் படிப்பார்கள்? கடந்த தேர்வில் 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. இவற்றுக்கிடையே இந்த முறையும் கேள்வித்தாள்களில் தவறுகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்றார்.
மொழிகள் புறக்கணிக்கப்படும்போது அந்த மொழியின் மக்களும்தானே புறக்கணிக்கப்படுகிறார்கள்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...