இ ந்தியாவில் எழுத்தறிவு மிக்க மக்கள் அதிகம் வாழும் மாநிலம் எது என்று கேட்டால், உடனே ஞாபகம் வருவது கேரளாவாகத்தான் இருக்கும். ஆனால், கேரளாவிலும் அதிக எழுத்தறிவு இல்லாத பழங்குடி கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த கிராம மக்களுக்கும் படிப்பு, நூலகம் சார்ந்த தேடல் இல்லாமல் இருக்கிறது. இதைப் பற்றி அரசாங்கமும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், அரசாங்கத்தால் செய்ய முடியாத செயலை தனிநபர் நினைத்தால் செய்யமுடியும் என எடுத்துக் காட்டியிருக்கிறார், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர்.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள எடுமலைக்குடி எனும் பழங்குடி கிராமத்தில் நூலகம் நடத்தி வருபவர் பெயர், பி.வி.சின்னதம்பி, வயது 73. சுற்றியிருக்கும் கிராம மக்களுக்கு இவரது கடைதான் ஒரே ஷாப்பிங் மால்.
அதனால்தான் என்னவோ, தனது கடையிலேயே நூலகத்தையும் நிறுவிவிட்டார். இவர் நூலகம் ஆரம்பிக்கும்போது அதை யாரும் பெரிதாக எண்ணவில்லை. நாளடைவில் கடைக்கு வருபவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை தூண்ட ஆரம்பித்தார். அவரது தூண்டுதல் சரியாகவே வேலை செய்தது. முதல் மாதமே 10- க்கும் மேல் உறுப்பினர்கள் சேர்ந்துவிட்டனர். அதிலிருந்து சின்னதம்பிக்கு தன் மக்களைப் படிக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையும் பிறந்திருக்கிறது. இப்போது சுற்றியிருக்கும் கிராம மக்களுக்கு இதுதான் ஒரே படிக்கும் இடமாகவும் திகழ்கிறது. பழங்குடி மக்கள் அருகிலுள்ள பள்ளிக்குச் செல்ல வேண்டுமானால் கூட, அதிக தூரம் நடந்துதான் செல்ல வேண்டும். இவர் வைத்திருப்பவை எல்லாமே மார்க்சியம் சார்ந்த புத்தகங்கள்தான். இவர் வைத்திருக்கும் புத்தகங்களை பழங்குடியின மக்கள் பெற்றுக் கொண்டு, படித்து முடித்துவிட்டுத் திரும்ப ஒப்படைத்து விடுகிறார்கள். சின்னதம்பி அந்த கிராமத்தில் நடத்தும் டீக்கடையில்தான் நூலகத்தை வைத்திருக்கிறார். நூலகத்தின் பெயர், அக்ஷரா கலை மற்றும் விளையாட்டு நூலகம்.இதுதான் கேரளாவின் மிகவும் பின்தங்கிய பஞ்சாயத்து. இங்கு முத்துவான் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த இடத்தை அடைய மூணாறு பெட்டிமுட்டியிலிருந்து 18 கி.மீ நடந்துதான் செல்லவேண்டும். மிகவும் பின்தங்கிய இந்த கிராமத்திற்கு இந்த வருடம்தான் ஒரு ஜீப் செல்லும் வகையில் மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய சிறிய கடையில் டீ, மிக்ஸர், பிஸ்கெட், தீப்பெட்டிகள் மற்றும் இதர மளிகைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். அந்தக் கடை எடுமலைக்குடி மலைச் சாலையின் அருகில் உள்ளது.
ஒவ்வொரு புத்தகமும் அரசியல் சார்ந்து இருக்கின்றன. சிலப்பதிகாரத்தின் மலையாள மொழிபெயர்ப்பு நூலைக் கூட வைத்திருக்கிறார். வைக்கம் முகம்மது பஷீர், எம்.டி.வாசுதேவன் நாயர், கமலா தாஸ் போன்றோர்களின் புத்தகங்களும் இருக்கின்றன. இந்த நூலகத்தைச் சுற்றிலும் கிட்டத்தட்ட 35 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சின்னதம்பியிடம் இருக்கும் புத்தகங்களில் நான்கில் ஒரு பங்கு புத்தகங்கள் இந்த பழங்குடி மக்களால் வாசிக்கப்பட்டு விடுகின்றன. இந்த நூலகத்தில் உறுப்பினராகச் சேர 25 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். பிறகு மாதத்திற்கு 2 ரூபாய் பராமரிப்புக் கட்டணம் செலுத்த வேண்டும். நூலகத்திற்கு வருவோருக்குச் சர்க்கரையில்லாத பிளாக் டீ இலவசமாகக் கொடுக்கிறார். சில நேரங்களில் வருபவருக்கு ஒரு சாப்பாடுகூட இலவசமாகக் கிடைக்கும்.
நூல்களை வழங்கும் தேதி, மற்றும் எடுப்பவரின் பெயர்கள் அனைத்தும் கோவையாக எழுதப்பட்டுள்ளன. இந்த நூலகத்தில் அதிகமாக எடுத்துச் செல்லப்பட்ட புத்தகம் சிலப்பதிகாரம்தான். இதுதவிர, சின்னதம்பியின் வாழ்க்கை வரலாறு என்ற நூலையும் எழுதிக் கொண்டிருக்கிறார்.
2010-ம் ஆண்டு இந்த நூலகத்தை நிறுவினார் சின்னதம்பி. இங்கு மின்சாரம் ஒரு ஆடம்பரமாகவே கருதப்படுவதால், மின்சாரம் கிடையாது. இப்போது வயது முதிர்வின் காரணமாக புத்தகங்களைப் பராமரிக்க முடியாமல் தவித்து வருகிறார், சின்னதம்பி. இவரது நூலகத்தை மேம்படுத்த 50,000 ரூபாய் பணம் கொடுக்கிறோம் என்று அரசியல்வாதிகள் வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், இன்றுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
தனது நூல்களில் பெரும்பாலான நூல்களைப் பராமரிக்க முடியாமல் பள்ளிக்கு கொடுத்துவிட்டார். இந்த நூலகத்தை நிறுவ சின்னதம்பியுடன் அவரது நண்பர் முரளியும் உதவியாக இருந்திருக்கிறார். தன் இன மக்கள் படிப்பறிவு இல்லாமல் இருப்பதை முரளியும் விரும்பவில்லை. அதனால் 'நீங்கள் வைத்திருக்கும் டீக்கடையுடன் சேர்ந்து நூலகத்தை நிறுவலாம்' என சின்னதம்பிக்கு யோசனை சொல்லியிருக்கிறார், முரளி. உடனே இருவரும் சேர்ந்து புத்தகங்களைச் சேகரித்து நூலகத்தையும் நிறுவினர். அனைத்து புத்தகங்களையும் இருவர் மட்டுமே சுமந்து 18 கி.மீ தூரம் இருவரும் சுமந்து வந்து சேர்த்திருக்கிறார்கள்.
சின்னதம்பி முதுமையடைந்த போதும், நோய்வாய்ப்பட்ட தனது மனைவியை கவனித்துக் கொண்டு, நூலகத்தை நடத்திக்கொண்டு வருகிறார். இன்னும் இவர் நூலகத்திற்கு வரும் மக்களுக்கு இலவச டீ கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். பழங்குடி மக்களுக்காக காட்டுக்குள், தனிநபரால் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் நூலகமும் இதுவாகத்தான் இருக்கும். தன் இனம் படிக்க ஆரம்பித்துவிட்டதை நினைத்து, நிம்மதியாக தன்னுடைய காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறார், சின்னதம்பி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...