பெருநகர சென்னை மாநகராட்சிப்
பள்ளிகளில் பணியாற்றும் 1,400 இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 5 ஆண்டுகளாகப் பதவி உயர்வு இல்லாமல் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் சுமார் 84 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 3,246 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் சுமார் 1,400 பேர் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படாததால், அவர்கள் மனதளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
அரசாணையின்படி, பணி மூப்பு உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்குப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆனால், கடந்த 2014-இல் இருந்து இடைநிலை ஆசிரியர்கள் எவருக்கும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதற்கான காரணத்தைக் கேட்டால், பதவி உயர்வு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால், இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வு தொடர்பான வழக்கில், தகுதி உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கலாம் என நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் பின்னரும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
கடந்த 1995-97 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களில் பலர் இன்று தலைமை ஆசிரியர்களாகவும், உதவிக் கல்வி அலுவலர்களாகவும் உள்ளனர். அதேவேளையில், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பலர், உரிய தகுதி இருந்தும் பதவி உயர்வு பெறாமல் உள்ளனர். சிலர் ஓய்வும் பெற்றுவிட்டனர். இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
விரைவில் நடவடிக்கை:
இதுகுறித்து மாநகராட்சி கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் இந்த விவகாரம் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. தேர்தல் முடிந்த பின்னர் இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு தொடர்பான கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...