பிளஸ் 1 அரியர் தேர்வில் 42% மாணவர்கள் தோல்வி
அடைந்துள்ளதாகவும், ஜூன் மாத சிறப்புத் தேர்வே அவர்கள் தேர்ச்சிபெற இறுதி
வாய்ப்பு என தேர்வுத்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.
தமிழக பள்ளிக்கல்வியில் 2018-ம் ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு அமல் படுத்தப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வை பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவர்கள் எழுதினர்.
இதில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.எனினும், பிளஸ் 1 வகுப்பில் சில பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள் தொடர்ந்து 12-ம் வகுப்புக்குச் செல்லலாம். தோல்வியுற்ற பாடங்களை 12-ம் வகுப்பு இறுதித்தேர்வின்போது சேர்த்து எழுதிக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.இதையடுத்து பிளஸ் 1 தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தொடர்ந்து பிளஸ் 2 வகுப்புக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. அந்த வகையில் தனித்தேர்வர்கள் சுமார் 66,000 மாணவர்கள் நடப்பு ஆண்டு பிளஸ் 1 அரியர் தேர்வை எழுதினர். அதில் 42 சதவீதம் பேர் (28,000 மாணவர்கள்) வரை தோல்வி அடைந்துள்ளதாகவும், அதனால்தான் அதுதொடர்பான விவரங்களை தேர்வுத்துறை வெளியிடவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்டாய மாற்றுச் சான்றிதழ்
இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பிளஸ் 1 அரியர் தேர்வை 66,000 மாணவர்கள் எழுதியதில் 28,000 பேர் வரை தோல்வி அடைந்துள்ளனர். அதில் சரிபாதி பேர் இடைநின்ற மாணவர்களாவர். அதாவது கடந்த ஆண்டுபிளஸ் 1 தேர்வில் 75,000 பேர் தோல்வியுற்றனர். இதில் தனியார் பள்ளிகளில் படித்த 26,000 மாணவர்களை நூறு சதவீத தேர்ச்சிக்காக நிர்வாகங்கள் கட்டாய மாற்றுச் சான்றிதழ் வழங்கி வெளியேற்றிவிட்டன.
பொதுத்தேர்வுக்கு பள்ளிகள் பதிவு செய்த விவரங்களில் இந்த விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து மாற்றுச் சான்றிதழ் பெற்று இடைநின்ற மாணவர்கள், பள்ளி மாணவர்களாகவே தேர்வெழுத அனுமதிக்கப்பட்டது. அவ்வாறு தேர்வெழுதிய இடைநின்ற மாணவர்களில் பலர் தேர்ச்சி பெறவில்லை.குறிப்பாக கணிதம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட முக்கிய பாடங்களில்தான் பெரும்பாலானவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். ஒரே நேரத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 என 2 பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டிய சூழல் இருந்தது.
நுண்ணறிவு வகை கேள்விகள்
இதுதவிர வினாத்தாளில் நுண்ணறிவு வகை கேள்விகள் அதிக அளவில் இடம்பெற்றிருந்தன. மேலும். விடைக்குறிப்பில் ஒவ்வொரு கேள்விக்கான பதிலானது துல்லியமாகவும், குறிப்பிட்ட விடை அம்சம் இருந்தால் மட்டும்தான் மதிப்பெண் வழங்க வேண்டும் போன்ற கடும் நிபந்தனைகளும் மாணவர்கள் தேர்ச்சிக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டன.இதையடுத்து பழைய பாடத்திட்டத்தில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு வரும் ஜூன் சிறப்புத் தேர்வே இறுதி வாய்ப்பாகும். அதைப் பயன்படுத்தி மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...