புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் கிராமத்தில், சிதம்பரவிடுதி அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திரு.அருண் மற்றும் திருமதி.வினோ இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் 5 வயது நிரம்பிய தன் மகனை கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளிப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் சிதம்பரவிடுதி அரசு தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்தனர்.
.
திருவரங்குளம் ஆசிரிய பயிற்றுனர் திருமதி. கண்ணம்மாள், “இது ஒரு நல்லதொரு
தொடக்கம். அருண் மற்றும் வினோ ஆசிரியர் போன்று அனைத்து ஆசிரியர்களும்
தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் படிக்கவைத்தால், பெற்றோர்களிடம்
தனியார் பள்ளி மோகம் குறைந்து, அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
அதிகரிக்கும்” என்று பாராட்டிப் பேசினார்.மாணவனின் தந்தையான அருண் ஆசிரியரிடம் இது பற்றி கேட்டபோது ”சிதம்பரவிடுதி
அரசு தொடக்கப்பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை, 5 கணினிகள் கொண்ட தனி கணினி
அறை உள்பட பல வசதிகள் உள்ளன. இப்பள்ளி மாணவர்கள் பலர் சதுரங்கப்
போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்கள். மேலும்
திறமையான மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, வருடந்தோறும் ஆண்டுவிழாவில்
மாணவர்களுக்கு மிதிவண்டி, கற்றல் மேசை முதலிய பரிசுகள் வழங்கப்படுகின்றன.
தனியார் பள்ளி மாணவர்களுக்குக்கூட கிடைக்காத இதுபோன்ற பல
வாய்ப்புகள்-வசதிகள் இப்பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கின்றன. இவையனைத்தும்
எங்களது மகனுக்கும் கிடைத்தால், அவனது வாழ்வும் சிறப்பாக இருக்கும் என்று
ஆசைப்பட்டோம். அதனால்தான் நாங்கள் பணிபுரியும் எங்களது பள்ளியிலேயே எங்களது
மகனை சேர்த்துள்ளோம்” என்று பெருமையாக கூறினார்.
.
மாணவனின் தாயான வினோ ஆசிரியை, ”நாங்கள் ஆலங்குடியில் வசித்து வருகிறோம்.
எங்களது பள்ளி ஆலங்குடியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. எங்களது மகன்
தொடக்கக்கல்வி பயில தினமும் 10 கி.மீ பயணம் செய்ய வேண்டும். இது எங்களுக்கு
சிறிது கஷ்டமாக இருந்தாலும், எங்களது மகனுக்கு நாங்கள் சிறப்பான கல்வியை
கொடுக்கப் போகிறோம் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
முக்கியமாக அரசுப்பள்ளி ஆசிரியர்களாகிய நாங்கள் ‘எங்களது பிள்ளை
அரசுப்பள்ளியில் படிக்கிறான்’ என்பதுதான் எங்களுக்குப் பெருமையே” என்று
உறுதிபட கூறினார்.
.
சிதம்பரவிடுதி பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.சந்திரா, “இப்பள்ளியில்
பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் திறமையான ஆசிரியர்களே. அருண் மற்றும்
வினோ ஆசிரியர், நம் பள்ளி ஆசிரியர்கள்மீது நம்பிக்கை வைத்து, அவர்களது மகனை
நம் பள்ளியில் சேர்த்ததற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்-நன்றிகள். நம்
பள்ளியானது சிறப்பாக செயல்படுவதனால்தான், தொலைவிலிருந்தும் பல பெற்றோர்கள்
தங்களது பிள்ளைகளை நம் பள்ளியில் சேர்த்துள்ளார்கள். இத்தகைய சிறப்புகள்
பெறுவதற்கு பள்ளி ஆசிரியர்களுக்கு உறுதுணையாக செயல்பட்டுவரும் பெற்றோர்
ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு, கிராமக் கல்விக்குழு, மாணவர்
கலந்தாய்வுக்குழு, பெற்றோர்கள் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் அனைவருக்கும் இந்த
நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு.மணிமாறன், “நம் பள்ளியில் தங்களது
மகனைச் சேர்த்த அருண் மற்றும் வினோ ஆசிரியருக்கு பள்ளி சார்பாக நன்றிகள்.
’ஒன்றாம் வகுப்பு மாணவன் தினந்தோறும் தமிழ் செய்தித்தாள் மற்றும் ENGLISH
NEWSPAPER படிக்கிறான்’ என்றால், அதற்கு வினோ ஆசிரியர் தான் காரணம். ’நம்
பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெறுகிறார்கள்’
என்றால் அதற்கு அருண் ஆசிரியர் தான் காரணம்.
’நம் மாணவர்கள் ENGLISH மற்றும் பல போட்டித்தேர்வுகளில் வெற்றிபெறும்
அளவிற்கு திறமை பெற்றுள்ளார்கள்’ என்றால், அதற்கு ராஜேஸ்வரி ஆசிரியர் தான்
காரணம். ’ஒட்டுமொத்தமாக அனைத்து ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து, பள்ளி
நிர்வாகம் சிறப்பாக செயல்படுவதற்கு’ தலைமை ஆசிரியர் தான் காரணம். பள்ளிக்கு
தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய பள்ளி பொறுப்பாளர்களாகிய நாங்கள்
தயாராக உள்ளோம். அருண் மற்றும் வினோ ஆசிரியர்களைப் போலவே இப்பகுதி
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்த்து பயன்பெற வேண்டும்”
என்று பேசினார்.
.
இந்நிகழ்வில் PTA செயற்குழு உறுப்பினர் M.S.குணசேகரன், மாணவர்
கலந்தாய்வுக்குழுத் தலைவர் K.K.முத்துவேல், SMC தலைவி புவனேஸ்வரி கேசவன்,
மலர்விழி ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...