பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளில் பாடவேளை நேரத்தை
தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக தொடக்க கல்வி
இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழக தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள செயல்வழிகற்றல் மற்றும் எளிய படைப்பாற்றல் கல்வி முறைகளுக்கான அரசாணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில் இந்த திருத்தங்கள் அடிப்படையில் செயல்வழி கற்றல் ஒருங்கிணைக்கப்பட்டு புதிய பாட புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 1 முதல் 3ம் வகுப்புகளுக்கு செயல்வழி கற்றல் கற்பித்தல் முறையும், 4ம் வகுப்புக்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் முறையும் பின்பற்றப்படுகிறது.
இதில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கு கூடுதல் பாட வேளை ஒதுக்கீடு செய்யும் வகையில் ஒரு பாடவேளை 90 நிமிடங்கள் என்று ஒரு நாளைக்கு 3 பாடவேளை ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்வழி கற்றல் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் முறையை தொடக்க பள்ளிகள் பின்பற்ற திட்ட இயக்குநரால் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் கல்வி திறனையும், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் செயல்பாட்டு திறனையும் பொறுத்துஅதனை குறைத்து நிர்ணயம் செய்து கொள்ளலாமா என்பதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரின் முடிவுக்கு விட்டுவிடலாமா என்பது குறித்து தொடக்க கல்வி இயக்குநர் அளவில் முடிவு செய்து கொள்வது தொடர்பாக கருத்துகேட்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் தொடக்க நிலை பள்ளிகளின் பாடவேளை நிர்ணயம் செய்வது தொடர்பாக வட்டார கல்வி அலுவலர்கள் தலைமையில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்திட வேண்டும்.
அந்த கூட்டத்தில் தொடக்க நிலை வகுப்புகளில் 90 நிமிடங்கள் அல்லது 45 நிமிடங்கள் பாட வேளையாக நடத்துவது குறித்து கருத்துகேட்பு மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிக்கு முன்னேற்றம் தரும் வகையில் பள்ளிகளில்உள்ள அந்தந்த தலைமை ஆசிரியர்களின் விருப்பப்படி பள்ளி பாடவேளை நேரத்தை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு தொடக்க கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.