Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

25 ஆண்டுகளாக மாற்றப்படாத எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை

அத்தியாவசிய பொருள்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளபோதும், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி  உதவித் தொகை கடந்த 25 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருப்பதாக கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.
அதுபோல, கல்லூரிகளில் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாடப் புத்தகங்களும் பல ஆண்டுகளாக வழங்கப்படுவதில்லை எனவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் சமூகத்தில் முன்னேற்றம் அடைவதற்காக, அவர்களுடைய குழந்தைகளின் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்விக்கு, கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசு சார்பிலும் சில திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் குறிப்பாக கல்லூரிகளில் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்காக மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, கல்வி உதவித் திட்டத்தை அறிமுகம் செய்து அதற்கான வழிகாட்டுதலையும் வெளியிட்டது.
அந்த வழிகாட்டுதலின் படி, இன்றளவும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித் தொகையில் பராமரிப்புப் படி, கல்விக் கட்டணம், புத்தகங்களுக்கான கட்டணம், கல்விச் சுற்றுலா என பல்வேறு கட்டணங்கள் அடங்கும்.
இதில் முக்கியமானது பராமரிப்புப் படியாகும். இது அந்த ஏழை மாணவர்களின் உணவு, உடை ஆகியவற்றுக்கான செலவைக் கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது.
இந்த பராமரிப்புப் படியைப் பொருத்தவரை விடுதியில் தங்கும் மருத்துவம், பொறியியல் பட்ட மாணவர்களுக்கு மாதம் ரூ. 1200, தினமும் வீட்டிலிருந்து வரும் மாணவர்களுக்கு ரூ. 550 வழங்கப்படுகிறது. அதுபோல செவிலியர் படிப்பு உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்பு மேற்கொள்ளும் விடுதி மாணவர்களுக்கு மாதம் ரூ. 820, வீட்டிலிருந்து வருபவர்களுக்கு ரூ. 530 வழங்கப்படுகிறது.
பி.ஏ., பி.எஸ்சி. போன்ற கலை-அறிவியல் படிப்பு மேற்கொள்பவர்களுக்கு விடுதி மாணவர்களுக்கு மாதம் ரூ. 570, வீட்டிலிருந்து வருபவர்களுக்கு ரூ. 300 வீதமும் பராமரிப்புப் படி வழங்கப்படுகிறது.
இந்த பராமரிப்புப் படி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்க வேண்டும் என இந்த வழிகாட்டுதலுக்கான விதியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக இந்த பராமரிப்புப்படி மாற்றியமைக்கப்படவில்லை எனவும், பாடப் புத்தகங்களும் இந்த மாணவர்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை என கல்வியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்க மாநில அமைப்பாளர் எம்.பரதன் கூறியது:
எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் பலர் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் இதுபோன்ற கல்வி உதவித் தொகையை நம்பி உயர் கல்வியை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படியே, படிப்போடு உணவும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மாணவர்களை, தனியார் பொறியியல் கல்லூரிகளில் எங்களுடைய இயக்கத்தின் சார்பிலும் சேர்த்தோம்.
இந்தச் சூழலில் இந்த உதவித் தொகை பல ஆண்டுகளாக மாற்றியமைக்கப்படவில்லை என்பதோடு, பலருக்கு கிடைக்கவே இல்லை என்பதால் படிப்பை பாதியில் நிறுத்தும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
வழிகாட்டுதலின்படி, இந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் பராமரிப்புப் படி விலைவாசி உயர்வின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால், 25 ஆண்டுகளாக இந்தத் தொகை மாற்றியமைக்கப்படவில்லை. மேலும், மருத்துவம், பொறியியல் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் இரண்டு பேருக்கு ஒரு செட் பாடப் புத்தகம் வீதம் வழங்கப்பட வேண்டும். இதைக் கல்லூரிகள் புத்தக வங்கிபோல உருவாக்கி அந்த மாணவர்களுக்கு ஏற்பாடு செய்துதரவேண்டும். அல்லது அந்தப் புத்தகத்துக்கான கட்டணத்தை அளிக்கவேண்டும். ஆனால், இதுவரை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால், கடுமையான குடும்பச் சூழலிலும் அதிக விலைகொடுத்து மருத்துவம், பொறியியல் பாடப் புத்தகங்களை இவர்கள் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இப்போது 2019-20-ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.




Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive