டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிபதற்காக காலக்கெடுவை
வரும் 12-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க
வேண்டிய இணையதளம் சரியாக வேலை செய்யவில்லை என எழுந்த புகாரையடுத்து
காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை
பாடம் எடுக்கம் ஆசிரியர்கள் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில்
தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆரம்ப பள்ளி, இடைநிலை மற்றும்
பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை
ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஆசிரியர் தகுதித்
தேர்வு தாள் 1, தாள் 2 என தகுதிக்கேற்ப இரு போட்டித் தேர்வுகள்
நடத்தப்படுகின்றன. பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டு ஆசிரியர்
பயிற்சி கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 4 ஆண்டு பி.எட். பயிற்சி
தேர்ச்சி பெற்றவர்கள் தாள்-1 தேர்வை எழுதலாம். இவர்கள் 5-ஆம் வகுப்பு
வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் வாய்ப்புப் பெறுவார்கள். அதே போல 6 முதல்
8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தாள்-2 தேர்வு
நடத்தப்படுகிறது. பட்டப் படிப்புடன், 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி
பெற்றவர்கள், பி.எட் பயிற்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.
2019-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வை டிஆர்பி கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து கடந்த மார்ச் 15 முதல் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பத்தின் விலை ரூ.500 ஆகும். குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த காலஅவகாசத்தை வரும் 12-ம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நடப்பாண்டில் அதிகளவில் விண்ணப்பங்கள் விற்பனையாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை போட்டித் தேர்வு நடைபெறும் தேதி,காலிப் பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...