தேர்வு நேரத்தில், மருத்துவ விடுப்பு
எடுக்கும் ஆசிரியர்களின் உண்மை நிலையை ஆய்வு செய்ய, உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 1ல் துவங்கியது. தேர்வுப் பணியில் மைய பொறுப்பாளர், அறை கண்காணிப்பாளர், பறக்கும் படை அலுவலர்கள் என, ஆயிரக்கணக்கானோர் நியமிக்கப்படுகின்றனர். நடப்பு கல்வியாண்டில், தனியார் பள்ளி ஆசிரியர்களை, தேர்வுப் பணிக்கு பயன்படுத்தாததால், பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, தேர்வுப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால், பள்ளிகளில், ஒன்றிரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இருந்து, இதர வகுப்புகளுக்கு, பாடம் நடத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்நிலையில், தேர்வுப் பணி உள்ளிட்டவற்றை தவிர்க்க, பல ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுப்பதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:தேர்வுப் பணிகளில், ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதை தவிர்க்க, உயர் அதிகாரிகள் சிபாரிசு, மருத்துவ விடுப்பு என, பல காரணங்களை தெரிவிக்கின்றனர்.
பல ஆசிரியர்கள், தங்களது குழந்தைகள் பொதுத்தேர்வு எழுதும் பட்சத்தில், அவர்களுக்கு உதவும் வகையில், பல நாட்களுக்கு, தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுத்துக் கொள்கின்றனர். இதனால், தேர்வுப் பணிகளை நடத்தி முடிப்பது, கல்வித் துறை அலுவலர்களுக்கு பெரும்பாடாக மாறி வருகிறது.இதனால், தேர்வு நேரத்தில் மருத்துவ விடுப்பு எடுத்துள்ள ஆசிரியர்களை கணக்கெடுக்கவும், அதன் உண்மை தன்மை குறித்து ஆய்வு நடத்தவும், உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...