புதுச்சேரியில் அரசுப் பள்ளியொன்று நீர் மேலாண்மை சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கும் செயல்பாடுகளுக்குமாக சிறந்த பள்ளிக்கான மத்திய அரசின் விருதைப் பெற்று அசத்தியுள்ளது.
கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இங்கு அவ்வப்போது சமூகம் சார்ந்த, வாழ்வியல் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு பயிற்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறித்து சிறப்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக நாட்டிலேயே சிறந்த பள்ளிகளுக்கான பிரிவில் முதலிடத்தை வென்று வந்துள்ளது இப்பள்ளி.
இதற்காக பள்ளிக்கு நினைவுப் பரிசுடன் 2 லட்ச ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதினை டெல்லியில் நடைபெற்ற தேசிய நீர் விருது வழங்கும் விழாவில் மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மாநில நீர்வள அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கடந்த 25-ம் தேதி வழங்கியுள்ளனர்.
இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் திறமையை சரியாகப் பயன்படுத்தும் ஆசிரியர்கள், பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதற்கு அவர்களுக்கு பயிற்சிகளையும் ஊக்கத்தையும் வழங்கி வருகின்றனர்.
சர்வதேச அறிவியல் செயல்திட்டப் போட்டியில் முதலிடம் பெற்று பாரிஸ் நகருக்கு சென்று பரிசையும் சான்றிதழையும் பெற்றதாகக் கூறும் பள்ளியின் ஆசிரியர் குருநாதன், மேலும் பல்வேறு போட்டிகளில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் தங்கள் மாணவர்கள் பரிசுகளை வென்றுள்ளதாக பெருமிதத்துடன் கூறுகிறார்.
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பட்டைதீட்டப்படாத வைரம்தான்.
அவர்களை பட்டைதீட்டி மதிப்பு மிக்கவர்களாக மாற்றுபவர்கள் ஆசிரியர்கள் என்பதில் ஐயமில்லை.
அந்த பட்டியலில் பனித்திட்டு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களும் இடம் பிடிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...