பான் கார்டுடன் ஆதார் எண்ணை வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் அந்த பான் கார்டு ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும் என்று வருமான வரித் துறையின் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
வரி செலுத்துபவர்கள் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் பான் கார்டு நம்பர், ஆதார் எண் இணைப்பை உடனடியாக செய்ய வேண்டும் என வருமான வரித் துறை கூறியுள்ளது. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் உங்கள் பெயரில் பிடித்தம் செய்யப்பட்டுள்ள கூடுதல் வரியை திரும்பப் பெற முடியாத சூழ்நிலை உருவாகும்.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதிலிருந்து அசாம், ஜம்மு காஷ்மீர், மேகாலயா உள்ளிட்ட மாநிலத்தவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல வெளிநாடு வாழ் இந்தியர்கள், 80 வயதுக்கும் மேற்பட்ட முத்த குடிமக்கள், இந்திய குடிமக்கள் அல்லாதவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பான் எண் ஆதார் எண் இணைப்பு
மத்திய நேரடி வரி வாரியம் கடந்த ஆண்டு ஜூன் 30 வரை மதிப்பீட்டாளர்கள் தங்கள் PAN கார்டுகளை ஆதாருடன் இணைக்க அனுமதி அளித்திருந்தது. இப்போது அது இந்த வருடத்தின் நிதி ஆண்டு முடிவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139 ஏஏ (2) கீழ், 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதியன்று பான் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும், ஆதார் பெற தகுதியுடையவர், எனவே தனது ஆதார் எண்ணை வரி அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது முறையாகும்.
வருமான வரித்துறை டிவிட்டரில் அறிவிப்பு
வருமான வரித் துறையின் டிவிட்டர் பதிவில் 2019 மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் அந்த பான் கார்டு ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
எஸ்எம்எஸ் மூலம் இணைக்கலாம்
ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கு எஸ்எம்எஸ் வசதியையும் வருமான வரித்துறை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி கைப்பேசியில் UIDPAN என்று டைப் செய்து இடைவெளிவிட்டு உங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும்.அதன் பின் சிறிய இடைவெளிவிட்டு உங்கள் பான் எண்ணை குறிப்பிட்டு இதனை 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பி இணைத்து கொள்ளலாம்.
UIDPAN<12 digit Aadhaar><10 digit PAN>
ஆதாருடன் இணைப்பது எப்படி
பான் காடுடன் ஆதார் எண்ணை ஆன்லைன் மூலமாகவும் இணைக்கலாம். வருமான வரித் துறையின் incometaxindia.gov.in இணையதளத்தில் இதுவரை நீங்கள் பதிவு செய்யவில்லை என்றால் அதில் ஒரு கணக்கைத் தொடங்க வேண்டும். பின்னர் அந்த இணையதளத்தில் உள்நுழைந்து ‘Link Aadhaar' என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் அங்கு கேட்கப்படும் விவரங்களை அளித்து captcha என அழைக்கப்படும் பாதுகாப்பு குறியீட்டை உள்ளிட்டு 'Link Aadhaar' என்பதை கிளிக் செய்வதன் மூலம் ஆதார் எண்ணில் உள்ள மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (OTP) அனுப்பப்படும். அந்த பாஸ்வேர்ட்ஐ பதிவு செய்து ‘sumbit'என்பதை கிளிக் செய்யும் போது இணைப்பு முழுமை அடையும்.
தகவல்கள் ஒரே மாதிரி இருப்பது அவசியம்
ஆதார் எண்ணில் கொடுத்த பெயருக்கும் பான் எண்ணில் உள்ள பெயருக்கும் இடையே ஸ்பெல்லிங் வேறுபாடு இன்சியல் வேறுபாடு இருக்குமாயின் இணைப்பு தோல்வியடையும். வரிசெலுத்துவோர் ஆதார் பெயரையோ அல்லது பான் பெயரையோ திருத்த வேண்டியிருக்கும், அதாவது ஆதார் தரவுப்பெட்டகத்திலோ பான் தரவுப் பெட்டகத்திலோ ஸ்பெல்லிங்கைத் திருத்த வேண்டியிருக்கும். உடனடியாக திருத்தி மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைத்து விடுவது அவசியமானது.
இணைத்து விட்டீர்களா?
நீங்கள் உங்கள் பான் கார்ட் நம்பரை ஆதாருடன் இணைத்திருக்கிறீர்களா என்பதில் சந்தேகம் வந்தால் அதனை நீங்கள் சரிபார்த்துக்கொள்ளலாம். incometaxindiaefiling.gov.in இணையத்தளத்திற்கு சென்று, 'ஆதார் இணைக்கவும்' என்பதை கிளிக் செய்யவும். அந்த பக்கத்தின் மேலே, 'இங்கே கிளிக் செய்யவும்' என்று ஒரு ஆப்ஷன் சிவப்பு மற்றும் நீல நிறத்தில் தோன்றும். அதை கிளிக் செய்யவும். ஒரு புதிய பக்கம் தோன்றும். அதில் உங்கள் ஆதார் எண் மற்றும் பான் நம்பர் விவரங்களை பதிவிடுங்கள். உங்கள் பான் கார்டு எண் இணைக்கப்பட்டிருக்கிறதா என்று அப்போதே தெரிந்துவிடும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...