தமிழகம், புதுச்சேரியில்
கடந்த 1ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகள் 29ம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து திட்டமிட்டபடி மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்ற பொதுத்தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பாடங்களுக்கான மதிப்பெண்கள் 100 என மாற்றப்பட்டது. தேர்வு நேரமும் 30 நிமிடம் குறைக்கப்பட்டது. பிளஸ் 2 தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து ,107 மாணவ மாணவியரும், பழைய நடைமுறையில் தேர்வு எழுதி தோல்வி அடைந்த 25741 தனித்தேர்வர்களும், கடந்த ஆண்டு தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதி தோல்வி அடைந்த 1144 தனித்தேர்வர்களும் சேர்த்து மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் தேர்வில் பங்கேற்றனர். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பொதுத் தேர்வை கண்காணிக்க பிரச்னைக்குரிய தேர்வு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி தேர்வை கண்காணித்தனர். அடுத்த ஆண்டு அனைத்து தேர்வு மையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.மார்ச் 1ம் தேதி முதல் நேற்று வரை முடிந்த தேர்வு விடைத்தாள்கள் சென்னை தேர்வு மையத்துக்கு வரவழைக்கப்பட்டு, அவை டம்மி எண்கள் போடும் பணி நடக்கிறது. அவை விரைவில் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பும் பணியை தேர்வுத்துறை தொடங்கியுள்ளது. இந்நிலையில், பிளஸ்2 தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. இறுதி நாளான இன்று, உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்குப் பதிவியல் மற்றும் கணக்குத் தணிக்கை பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கிறது. இதையடுத்து, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 40க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி 29ம் தேதி தொடங்குகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...