நிர்வாக குளறுபடிகள் அதிகரிப்பை தொடர்ந்து, பதவியேற்ற, 10 மாதங்களில்,
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மாற்றப்பட்டுள்ளார்.அரசு பள்ளிகள்,
கல்லுாரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகள், இன்ஜி., கல்லுாரிகள்
உள்ளிட்டவற்றின் ஆசிரியர், பேராசிரியர் பணியிடங்களில்,ஆசிரியர் தேர்வு
வாரியமான, டி.ஆர்.பி., வழியாக, புதிய ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். போட்டி
தேர்வு, பதிவு மூப்பு ஆகியவற்றின் அடிப்படையில், இந்த நியமனம்
மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஜெயந்தி தலைமையிலான, டி.ஆர்.பி.,யின் நடவடிக்கைகள், ஆசிரியர்கள், தமிழக அரசு அதிகாரிகள், உயர்கல்வி துறையினர் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பணி நியமனங்களில் குளறுபடி, தேர்வுகளில் முறைகேடு புகார், நியமன உத்தரவுகளில் விதி மீறல் என, அடுக்கடுக்கான பிரச்னைகள் நீதிமன்றம் வரை சென்று, டி.ஆர்.பி.,க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பாலிடெக்னிக் தேர்வில் நடந்த முறைகேடு விவகாரம், கிரிமினல் வழக்காக போலீசாரால் விசாரிக்கப்படுகிறது.டி.ஆர்.பி.,யில் நிர்வாக சீர்திருத்தம் ஏற்படுத்த, பல தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. டி.ஆர்.பி., தலைவராக பணியாற்றிய, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஜெயந்தி மற்றும் பள்ளி கல்வி அதிகாரிகள் இடையில், யாருக்கு கூடுதல் அதிகாரம் என்ற பிரச்னையும், டி.ஆர்.பி.,யில் அதிகரித்தது.
இதை சமாளிக்க, வட மாநிலங்களில் நடந்த சட்ட சபை தேர்தல் பணிக்கு, டி.ஆர்.பி., தலைவர், ஜெயந்தி அனுப்பப்பட்டார். அங்கிருந்து திரும்பி, மீண்டும், டி.ஆர்.பி., தலைவர் பொறுப்பில், ஜெயந்தி பணியாற்றிய நிலையில், அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மூன்று ஆண்டுகளுக்கு மேல், தொடர்ந்து ஒரே பணியில் இருக்கும் அரசு உயர் அதிகாரிகளை மாற்ற, தேர்தல் கமிஷன் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, பல்வேறு துறைகளின், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, தமிழக அரசு, நேற்று முன்தினம் பணியிடம் மாற்றியது.இந்த பட்டியலில், டி.ஆர்.பி., தலைவர், ஜெயந்தியும் இடம் பெற்றார். அவர், தமிழ்நாடு பாடநுால் கழகம் மற்றும் சேவைகள் நிறுவனத்தின், மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். கடந்த, 2018, ஏப்ரலில், டி.ஆர்.பி., தலைவராக ஜெயந்தி பதவியேற்ற நிலையில், நிர்வாக குளறு படிகளால், 10 மாதங்களில், அந்த பதவியில் இருந்து, அவர் மாற்றப்பட்டுள்ளார்.பதிவுத்துறைஐ.ஜி., மாற்றம் ஏன்?பதிவுத் துறை, ஐ.ஜி.,யாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, குமரகுருபரன், 2017 ஆக., 18ல், பதவியேற்றார். அவர், பதவியேற்றதும், 'ஆன்லைன்' பத்திரப்பதிவு முறையை அறிமுகம் செய்தார். ஆன்லைன் இல்லாமல், நேரடியாக சார் - பதிவாளர் அலுவலகங்களில், எந்த விண்ணப்பத்தையும் பெற முடியாத நிலை ஏற்பட்டது.
லஞ்சம் வாங்குவதற்காக, பதிவுக்கு வரும் பத்திரத்தை நிலுவையில் வைப்பது, திருப்பி கொடுப்பது என, ஏதாவது ஒரு முடிவை, சார் - பதிவாளர் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சார் - பதிவாளர் நிலையில் இருந்து, மாவட்ட பதிவாளர் வரையில், அடுத்தடுத்த அதிகாரிகளுக்கும் வசூல் கிடைப்பது தடைப்பட்டது.இதில், பாதிக்கப்பட்ட அதிகாரிகள், கூடுதல், ஐ.ஜி.,க்கள் துணையுடன், ஐ.ஜி.,யை மாற்ற, அழுத்தம் கொடுத்து வந்தனர். இதன் பலனாக, பதிவுத் துறை, ஐ.ஜி., குமரகுருபரன், பேரிடர் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது, பதிவுத் துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...