மாணவர்கள் நலனில் ஆசிரியர்களுக்கு அக்கறையில்லை என்பது போன்ற செய்திகளைப் பெரும்பாலானோர் பரப்பிவருகின்றனர். மாணவர்களுக்கும் சேர்த்துதான் எங்களுடைய போராட்டத்தை நடத்தினோம்' என்று வேதனையுடன் பேசுகின்றனர் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழையை ஓய்வூதியத் திட்ட முறையையே கொண்டு வர வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்.
அரசுப் பள்ளிகளை மூடக் கூடாது. அரசுத் துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு வகைசெய்யும் அரசாணை 56-ஐ ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தை நிறுத்த அரசுத் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் போராட்டத்தின் வீரியம் அதிகரித்தது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராடத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, பல்வேறு அரசியல்கட்சித்தலைவர்கள் கோரிக்களை ஏற்றும், தேர்வு நெருங்குவதால் மாணவர்களின் நலன் கருதியும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பு அறிவித்தது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட 1,111 ஆசிரியர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கையை ரத்து செய்வதாகப் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜாக்டோ-ஜியோவைச் சேர்ந்த சாந்தகுமாரிடம் பேசினோம்.
``மாணவர்களுக்குத் தேர்வு நெருங்கி விட்டது என்று அரசும் நீதிமன்றமும் கேட்டுக்கொண்டதால்தான் எங்களுடைய போராட்டத்தை நாங்கள் வாபஸ் பெற்றுக்கொண்டோம். இப்படியிருக்க அரசு அறிவித்துள்ள ஆசிரியர்கள் மீதான இடை நீக்கம் ரத்து என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் சம்பளத்தை உயர்த்தித் தர வேண்டும் என்று கேட்கவில்லை.
எங்கள் அடிப்படை உரிமைகளுக்காகத்தான் போராடினோம். வேலைவாய்ப்பை பறிக்கக் கூடிய அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் நாங்கள் முன் வைத்தது. இது எங்களுக்கானது மட்டுமல்ல.
எதிர்காலத் தலைமுறையினருக்கானதும்கூட. அரசு வேலைக்கு வரும் பெரும்பாலானோர், தங்களது இறுதிக் காலகட்டத்தில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற நம்பிக்கையில்தான் வருகிறார்கள். அந்த நம்பிக்கையே சுக்குநூறாக்கப்படுகிறது.
எங்களை விடுங்கள், எங்களுக்கு அடுத்துவரும் தலைமுறையினர் வந்து கேட்டால் யார் பதில் சொல்வது. அவர்களுக்கான போராட்டம்தான் இது. மக்களுக்கு எங்கள் கோரிக்கை தவறாக சென்றடைந்துவிட்டது. எங்களுக்கு சுயலாபம் இதில் எதுவும் இல்லை.
மாணவர்கள் மீது அக்கறை உள்ளதால்தான் இந்தப் போராட்டமே. எங்களிடம் படிக்கும் மாணவர்களுக்கு நாளை அரசு வேலையே கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அரசுப் பணிகளில் காலியிடங்கள் ஏற்படும்போது, தற்காலிகமாக அவுட் சோர்ஸிங் முறையில் ஆட்களைப் பணிக்கு அமர்த்துவதாகத்தான் அரசாணை 56-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படிப் பார்த்தால் நாளை அரசு பணி என்பதே இல்லாமல் போகும். எங்கள் கோரிக்கை நியாயமான கோரிக்கைகள் என்பதை மாணவர்கள் தற்போது உணர்ந்துள்ளனர். நாங்கள் அரசு வேலைக்கு வந்துவிட்டோம் எங்களுக்கு பிரச்னையில்லை.
வரும் தலைமுறையினர் பாதிக்கபடக் கூடாது என்பதன் சாரம்சம்தான் இந்தப் போராட்டம். வேறு எந்த சுயலாபமும் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...