எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தி தகர்த்தது. பாலகோட், சக்கோத்தி, முஷாபாராபாத் ஆகிய 3 பகுதிகளில் இருந்த பயங்கரவாதிகள் முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இதில் புல்வாமா தாக்குதலை அரங்கேற்றிய ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் குண்டுவீசி தகர்க்கப்பட்டன.
குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து சென்ற 12 மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பயங்கரவாதிகள் முகாமை குண்டுவீசி தகர்த்தன. இந்த தாக்குதலில் 300 தீவிரவாதிகள் பலியாகி இருக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதிகள் முகாமை அழிப்பதற்காக இந்திய விமானப்படை சுமார் ஆயிரம் கிலோ அளவிலான குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்மூலம் புல்வாமா தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது.
தலைவர்கள் வாழ்த்து
பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது. இந்த தாக்குதலை வெற்றிகரமாக நிகழ்த்திய விமானிகளுக்கு வீரவணக்கம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதேபோல் இந்திய விமானப்படை வீரர்களின் வீர தீரச் செயலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டு தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி இந்திய விமானப்படை வீரர்கள் பெருமைப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். விமானப்படை தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து பிரதமரிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உஷார் நிலையில் விமானப்படை
பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய விமானப்படை அழித்ததால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதற்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்திய விமானப்படை தயார் நிலையில் உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...