வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தோரணம்பதி அரசு தொடக்கப்பள்ளிக்கு தேவையான இருக்கைகள், மின்விசிறிகள் உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கல்வி சீர்வரிசை வழங்கினர்.
அரசினுடைய திட்டங்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களுடைய பங்களிப்பின் மூலம் தொடக்கப்பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 2018-19 கல்வியாண்டில் பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வேலூர் மாவட்டம் தோரணம்பதி அரசு தொடக்கபள்ளியில் 40 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
இத்திட்டத்தின்கீழ் மாணவ-மாணவிகளுக்கு தேவைப்படும் விதமாக பள்ளிக்கு தேவையான குறிப்பேடு, பென்சில், மின்விசிறிகள், கடிகாரம், தேசத்தலைவர்களின் படங்கள், வட்டமேசை, குடிநீர் குடம், குடிநீர் டிரம், இருக்கைகள், விளையாட்டு உபகரணங்கள், பூமி உருண்டை, பீரோ உட்பட சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பெற்றோர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் இணைந்து பள்ளிக்கு கல்வி சீர்வரிசையாக வழங்கினார்கள்.
முன்னதாக சீர்வரிசை பொருட்களை தோரணம்பதி பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கல்விசீர் வரிசையை வழங்கினர்.
மேலும், இந்த விழாவில் வட்டாரக்கல்வி அலுவலர்கள் திரு. வெங்கடாசலம் , திருமதி. சித்ரா , மேற்பார்வையாளர் திரு . சுபாஷ் சந்தர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் திருமதி. சாக்கி ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளி அனைத்து வசதிகளுடன் அமைந்தால், அவர்களின் எதிர்காலம் வளமாக அமையும் என பொதுமக்களிடம் கூறினர்.
மேலும் இந்த ஊர்வலம் குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்டதாக தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர் சரவணன் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...