பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் நடைமுறைப்படுத்துதல், பகுதிநேர - தொகுப்பூதிய பணியாளர்களை முழுநேர ஊழியர்களாக்குதல் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பு ஜனவரி 22ம் தேதி தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டம் கோரிக்கைகள் எதுவும் நிறைவேறாமலேயே ஒன்பதாவது நாளில் அரசுடன் பேச்சுவார்த்தை கூட நடைபெறாமல் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்தப் போராட்டம் கற்பித்த பாடம்தான் என்ன?
விரிவாக விளக்குகிறார் தமிழ்நாடு கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரான சு.மூர்த்தி.ஆசிரியர் போராட்டங்கள் மீது பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் இருக்கும் அதீத கவனிப்பு, சமூக ஊடகங்கள் வளர்ந்துவிட்ட நிலையிலும் அதிகமாகவே இருந்தன.
இப்போதைய போராட்டம் ஆசிரியர்களின் வழக்கமான ஊதியப் போராட்டமாகவே பேசப்பட்டது. கிராம உதவியாளர்கள், சாலைப்பணியாளர்கள், சத்துணவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அரசு ஊதியம் பெறும் அனைவரின் ஒன்றிணைந்த போராட்டமாகப் பார்க்கப்படவில்லை.
அத்துடன், போராட்டத்தில் நான்கில் ஒரு பங்கினராக இருந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது பொதுச்சமூகம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. போராடியவர்கள் மீது அரசின் பொய்வழக்கு, கைது, சிறையிலடைப்பு, தற்காலிக பணிநீக்கம் போன்ற ஜனநாயக நெறியற்ற அடக்குமுறைகள் ஏவப்பட்டன.
கோரிக்கைகள் எதுவும் நிறைவேறவில்லையே என்ற வலியை விட போராட்டத்திற்கு எதிராக மக்களின் எதிர்வினைகள் ஆசிரியர் சமூகத்தை வெகுவாகக் காயப்படுத்தியுள்ளன. ஆசிரியர்களுக்கு ஊதியம் அளிக்கும் சமூகத்தால் அவர்களது நிறைகள் கொண்டாடப்படுவதும் குறைகள் விமர்சிக்கப்படுவதும் இயல்புதான் என்பதை பெரும்பாலான ஆசிரியர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
போராட்டத்தில் வெற்றி தள்ளிப்போவதாக ஆறுதலடைய முடியவில்லை. தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை, மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கும் நேரம் போன்ற எதார்த்த சூழல்களை நியாயப்படுத்திக் கொள்ளவும் முடியவில்லை. வேலைநிறுத்தப் போராட்டம் சரியா... தவறா... என்ற பொதுமக்களின் உளவியலை அரசு ஊழியர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் நிர்ணயிப்பதில்லை.
போராட்டத்திற்கான ஆதரவும் எதிர்ப்பும் அரசு ஊழியர், ஆசிரியர்கள் இதுவரை மக்களுக்கு ஆற்றிய கடமைகள்; மக்களுக்கும் அரசு ஊழியர்களுக்குமான சமுக உறவு, வாழ்நிலை வேறுபாடு, போராட்ட வடிவம், மக்களுக்கு, குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், போராட்டக் காலம்... போன்ற சூழல்களே தீர்மானிக்கின்றன.
நீட் தேர்வு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் எதிர்ப்புகள், காவிரி நீர் உரிமை, எட்டுவழிச்சாலை, கெயில், உயரழுத்த மின்கோபுரம் போன்றவற்றிற்கான விவசாய நில அபகரிப்புகள், ஈழத் தமிழர் இனப்படுகொலை, ஆணவப் படுகொலை இப்படி தமிழகமே கடந்த பத்தாண்டுகளாக போராட்டக் களமாக இருந்து வருகிறது.
இதுபோன்ற போராட்டக் களங்களில் அரசு ஊழியர்களும், ஆசிரியர் சமூகமும் பெரிய பங்காற்றவில்லை என்பது உண்மை. இன்று மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப்பள்ளிகளையும் சத்துணவுக் கூடங்களையும் மூடக்கூடாது என்று ஆசிரியர்கள் போராடுகிறார்களே தவிர மாணவர் எண்ணிக்கை குறைவு ஏற்படக் காரணமாக இருக்கும் தனியார் பள்ளிகளை மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை.
தங்கள் குழந்தைகளையே தனியார் பள்ளிகளில் சேர்க்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களால் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதை எப்படி தடுக்க முடியும்? இருக்கின்ற ஏழைகள் ஏழைகளாகவே இருந்தால் மட்டுமே ஏழைகளின் பள்ளிகளாகிய அரசுப்பள்ளிகள் இருக்கும் நிலை உள்ளது.
இந்த அவல நிலையை மாற்றுவதற்கு அரசுப்பள்ளிகளை நம்பி வாழும் ஆசிரியர் சமூகத்திற்குத்தான் பெரும் பொறுப்பு இருக்கிறது. அரசின் தவறான கல்விக் கொள்கைகளாலும் கல்வித்துறையின் நிர்வாகச் சீர்கேடுகளாலும் அரசுப்பள்ளிகளுக்கு ஏற்பட்ட பரிதாபகரமான நிலைக்கு ஆசிரியர்கள் மட்டுமே காரணம் என்ற பொது சமூகத்தின் குற்றச்சாட்டுக்கு உரிய பதிலை வழங்க ஆசிரியர் சங்கங்கள் தவறிவிட்டன.
ஆட்சியாளர்களைவிட அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்பினர் மக்கள் நலன், குழந்தைகளின் கல்வி நலன் குறித்து மிகுந்த அக்கறை கொள்வது சமூகப் பொறுப்பாகும். மக்களையும் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழைக் குழந்தைகளையும் பகடைக்காயாக மாற்றுவது அறம் சார்ந்த போராட்ட முறையல்ல.
தொழிற்சாலைகளில் பொருள் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள் பொருள் உற்பத்தியை நிறுத்தி முதலாளிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் போராட்ட வடிவத்தை மக்களுக்கு சேவையாற்றும் அரசு ஊழியர்களும் ஏழைக் குழந்தைகளுக்கு கல்விப் பணியாற்றும் ஆசிரியர்களும் பின்பற்றுவதற்குப் பதிலாக மாற்று வடிவத்தைப் பின்பற்றியிருந்தால் மக்களின் எதிர்ப்பிற்கும் அரசின் அடக்குமுறைக்கும் இடமளித்திருக்காது.
2003 போராட்டத்தின் போது உச்சநீதிமன்றம் அரசு ஊழியர் போராட்டம் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது. இப்போதுவரை இத் தீர்ப்பே நடைமுறையில் உள்ளது. ‘‘போராடும் அரசு ஊழியர்களை ஒரு மணி நேரத்தில் வேலையை விட்டு நீக்க முடியும். எனவே உடனடியாகப் பணிக்குத் திரும்பவேண்டும்...” என்று உயர்நீதி மன்றம் எச்சரித்தது உச்ச நீதி மன்றத் தீர்ப்பினை வழிமொழிவதாகவே அமைந்திருந்தது.
நமது ஆட்சியாளர்கள் பின்பற்றிவரும் பெருநிறுவனங்கள், தனியார்கள் நலன்களுக்கான கொள்கைகளே அரசு ஊழியர், ஆசிரியர் ஓய்வூதியப் பறிப்பு, நிரந்தர பணி நியமன முறை ஒழிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன. வருங்காலத்தில் அரசு வேலைவாய்ப்பை நம்பியுள்ள படித்த இளைஞர்களுக்கும் இக்கொள்கைகள் எதிரானவை என்பதை பொது சமூகத்திடம் எடுத்துச் சொல்லி அரசு ஊழியர் / ஆசிரியர் அமைப்புகள் ஆதரவு திரட்டியிருக்க வேண்டும்.
அதே சமயம், ஆசிரியர்களுக்கு என்று தனித்துவமான மதிப்பீடுகளை, எதிர்பார்ப்புகளை முன்வைக்கின்ற மக்கள்; ஒரு சராசரி குடிமகனுக்கு இருக்கும் போராட்ட உரிமைகள் ஆசிரியர் சமூகத்துக்கும் உண்டு என்பதை உணரவேண்டும்.
ஏனெனில் ‘அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளத்துக்கே அரசின் வருமானத்தில் 71% செலவாகிறது; மக்களின் நலத்திட்டங்களை கடன் வாங்கி நிறைவேற்றவேண்டியுள்ளது, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பொறியியல் படித்த இளைஞர்களே ஆசிரியர்களைவிடக் குறைவான ஊதியம் வாங்குகிறார்கள்...’ போன்ற கருத்துகளைக் கூறி மக்களையும் ஆசிரியர்களையும் பிரித்து மோதவிடும் ராஜ தந்திரத்தையே அரசு பின்பற்றுகிறது.
இதை ஆசிரியர் சமூகமும் பொதுமக்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். காரணம், அரசு ஊழியர் - ஆசிரியர் அமைப்புகளின் பழைய, ஓய்வூதியப் பாதுகாப்பு, அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல், காலமுறை ஊதியம் கோருவது, தொகுப்பூதிய முறை ஒழிப்பு... போன்ற கோரிக்கைகள் வருங்காலத்தில் அரசு வேலைக்கு வருபவர்களுக்குமான கோரிக்கையும் கூட. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், இது ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டுக்கான போராட்டம்.
தோ.திருத்துவராஜ்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...