கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு
பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயம் செய்துள்ள அடிப்படை சம்பளம் ₹50 ஆயிரம்
வழங்க வேண்டும் என்று கவுரவ விரிவுரையாளர்கள் கல்லூரி கல்வி இயக்குநரிடம்
மனு கொடுத்தனர். அனைத்து மாநிலங்களிலும் இயங்கும் அரசு மற்றும் அரசு
நிதியுதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு
அடிப்படை சம்பளம் வழங்குவது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு ஒரு தொகையை
நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், கல்லூரி நிர்வாகங்கள் சம்பளத்தில் ஒரு
குறிப்பிட்ட தொகையை மட்டுமே வழங்கி வருகிறது. இதனால் கவுரவ
விரிவுரையாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்லூரிகளுக்கு இணைப்பு
வழங்கியுள்ள பல்கலைக்கழகங்களிடம் பலமுறை கவுரவ விரிவுரையாளர்கள்
முறையிட்டும் பயன் ஏற்படவில்லை.
இந்நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு அடிப்படை சம்பளத்தை
₹50 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. அதனால் கவுரவ விரிவுரையாளர்கள் தங்களுக்கு
அந்த தொகையை வழங்குவதுடன், இதுவரை பிடித்தம் ெசய்யப்பட்ட தொகையையும் வழங்க
வேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரிடம் நேற்று மனு கொடுத்தனர்.
இதுகுறித்து கவுரவ விரிவுரையாளர் சங்கத்தின் மாநில தலைவர் தங்கராஜ்
கூறியதாவது: கவுரவ விரிவுரையாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக பல்கலைக் கழகம்
கடந்த முறை ₹25 ஆயிரம் நிர்ணயம் செய்திருந்தது. ஆனால், கல்லூரி
நிர்வாகங்கள் அந்தத் தொகையை முழுமையாக வழங்கவில்லை. தற்போது அந்த அடிப்படை
தொகையை பல்கலைக்கழக மானியக் குழு ₹50 ஆயிரம் என உயர்த்தியுள்ளது.
இருப்பினும், கல்லூரி நிர்வாகங்கள் எங்களுக்கு ₹15 ஆயிரம்தான் வழங்கி
வருகின்றன. பல்கலைக் கழக மானியக் குழு அறிவித்துள்ள தகுதியுடன்தான் நாங்கள்
பணியாற்றி வருகிறோம்.
அதனால், தகுதியுள்ள அனைவருக்கும், பல்கலைக் கழக மானியக் குழு
நிர்ணயம் செய்துள்ள சம்பளத்தை வழங்க வேண்டும். கடந்த 2010 ஜனவரி முதல்
மேற்கண்ட சம்பளம் தராமல் உள்ளதால் நிலுவைத் தொகை ₹15 லட்சம் வழங்க வேண்டும்
என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் சாருமதியிடம் மனு கொடுத்தோம். எங்கள்
மனு மீது அரசுத்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக பட்டியல்
தயாரிக்க உள்ளதால் அதில் இதுதொடர்பாக முடிவுகள் இடம்பெறும் என்றும்
இயக்குநர் தெரிவித்தார். இதையடுத்து, அரசு தலைமைச் செயலாளர், நிதித்துறை
செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளர்களையும் சந்தித்து மனு கொடுத்துள்ளோம்.
முதல்வர் தனிப் பிரிவிலும் மனு கொடுத்துள்ளோம் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...