ஒரு சமுதாயம் சிறப்பாக வாழ வேண்டும் என்றால் 'அனைவருக்கும் கல்வி' அளிக்க வேண்டும் என்ற உண்ணதமான கனவோடு 16,000 பள்ளிகளை திறந்தார் கர்மவீரர் காமராஜர். அந்தக் கனவை காற்றிலே பறக்க விட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடுவதற்கு திட்டமிடுகிறார்கள் இன்றைய ஆட்சியாளர்கள். அரசுப்பள்ளி School வேண்டும் என்று கூறிய காலம் மாறி, அரசுப் பள்ளியே வேண்டாம் என்று கூறும் நிலைக்கு மாறிவிட்டனர் இன்றைய பொதுமக்கள்.
தனியார் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் basic needs மற்றும் ஆங்கில வழி மோகம் மக்களை வெகுவாக தனியார் பள்ளியை நோக்கி படையெடுக்க வைத்தது. இதன் விளைவு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
இந்த கல்வியாண்டில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில்பத்திற்கும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர் என்கிறது தமிழக அரசு. இப்பள்ளிகள் அனைத்தும் மூடும் அபாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறது. இதுபோல் மூடும் நிலையில் வெறும் ஆறு மாணவர்களோடு இருந்த பள்ளியில் 55 மாணவர்ளை சேர்த்து மீட்டெடுத்திருக்கிறார்கள் ஒரு கிராம மக்கள். மாற்றத்திற்கு முன் நெல்லை மாவட்டத்தில் உள்ள கருவநல்லூர் கிராமத்தில் கடந்த 50 வருடங்களாக செயல்பட்டு வந்தது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து இந்த கல்வியாண்டின்(2018-19) தொடக்கத்தில் வெறும் ஆறு மாணவர்கள் மட்டுமே படித்ததால், பள்ளி மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதை உணர்ந்த இக்கிராமத்து இளைஞர்கள் பள்ளியை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். இக்கிராமத்திலிருந்து தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து கூட்டம் போட்டு, பள்ளி மூடும் அபாயத்தையும், பள்ளியை மூடிவிட்டால் திரும்ப பள்ளியைத் திறப்பது கடினம் என்பதையும் கூறி கருத்து கேட்டுள்ளனர்.
அதற்கு பொதுமக்கள், 'தனியார் பள்ளியில் அடிப்படை வசதிகள், வாகன வசதிகள், ஆங்கில வழிக்கல்வி மற்றும் எல்.கே.ஜி, யு.கே.ஜி போன்ற வசதிகள் இருக்கிறது. ஆனால் இந்த அரசுப் பள்ளியில் எதுவும் கிடையாது, இதை சரிசெய்தால் நாங்கள் எங்கள் பிள்ளைகளையும் சேர்க்கிறோம்' என்று கூறிவிட்டனர். மாற்றத்திற்கு பின் உடனடியாக களத்தில் இறங்கிய இளைஞர்கள் மானூர் வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி.கீதா அவர்களை சந்தித்து பள்ளிக்கு நிலையை எடுத்து கூறி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கான அனுமதியை பெற்றனர்.
இதனை அறிந்த பொதுமக்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை இதே அரசுப் பள்ளியில் சேர்க்கத் தொடங்கினர். அதோடு நிறுத்தாமல் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை தொடங்கி அதன் மூலம் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளையும் தொடங்கி, அதற்காக ஆசிரியரையும் நியமித்தனர்.பள்ளியின் கட்டமைப்பை சரிசெய்ய திட்டமிட்ட இளைஞர்கள், 'அரசுப் பள்ளியை மீட்போம்' என்ற வாட்சப் குழுவை ஆரம்பித்து பள்ளிக்காக உதவி கேட்டுள்ளனர்.
இதை பார்த்த பலரும் அவர்களால் முடிந்த பணத்தை உதவியுள்ளனர். மேலும் இதையறிந்த வியட்நாம் நாட்டில் வாழும் தமிழர்கள் 50,000 ரூபாய் அளித்து பேருதவி செய்திருக்கிறார்கள். இப்பணத்தை வைத்து பள்ளியின் கட்டமைப்பை சரிசெய்துள்ளனர். மேலும் தனியார் நிறுவனங்களிடம் உதவிகளை நாடியதில் பள்ளிக்கு தளம் அமைத்தல், சுவர்களுக்கு வண்ணம் பூசுதல் மற்றும் இரண்டு கணினிகளையும் வழங்கியிருக்கிறார்கள். இதையறிந்த நெல்லை மாவட்ட உதவி ஆட்சியர் திரு.சுகபுத்ரா மற்றும் இணை ஆட்சியர் லெக்ஷ்மி ப்ரியா அவர்களும் பள்ளியை பார்வையிட்டு, பள்ளிக்குத் தேவையான சுற்றுச்சுவர் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். மேலும் நெல்லை கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இணைந்து விளையாட்டுப் பொருட்களை அளித்தனர். சமீபத்தில் இதற்கான விழா நடைபெற்றது.அறியாதவர்கள் கூட உதவுவதை அறிந்து நெகிழ்ந்த அருகிலுள்ள கிராம மக்களும் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்க்கத் தொடங்கினர்.
இவர்களுக்காக பள்ளியில் இருந்து வேன் வசதியும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். வெறும் ஆறு மாணவர்களாக இருந்த இப்பள்ளி இப்போது 55 மாணவர்களோடு 'அரசுப் பள்ளியை மீட்போம், கிராமப் பொருளாதாரத்தை உயர்த்துவோம்' என்ற உயரிய லட்சியத்தோடு முன் உதாரணமாக விளங்குகிறது. பலரும் இக்கிராமத்தினரை பாராட்டி வருகின்றனர். மேலும் 'சிறந்த செயல்பாட்டிற்கான அன்னை தெரசா விருதை' வழங்கி கெளரவித்துள்ளது அன்னை தெரசா அறக்கட்டளை.இந்த முயற்சியை தமிழக அரசு கையிலெடுத்தால் மட்டுமே தமிழநாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை காப்பாற்ற முடியும் என்கிறார்கள் அக்கிராமத்து இளைஞர்கள். பளீரென்று கம்பீரமாக நிற்கிறது பள்ளி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...