இன்றைய
காலச் சூழ்நிலையில் தாய்மொழியில் கல்வி என்பது பழமைவாதமாக, குறுகிய
கண்ணோட்டத்துடன் நோக்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை நம் அரசியல்
கட்சிகளும் தாய்மொழியில் கல்வி என்பது மொழியின் பாதுகாப்பு மற்றும்
வளர்ச்சி என்ற எண்ணத்தையே கொண்டுள்ளன. உலகமயமாக்கல் நிலவும் இந்தக்
காலகட்டத்தில் தாய்மொழியில் கல்வி தங்கள் குழந்தைகளுக்கு வளமான
எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்குமா என்ற கேள்வி பெற்றோர்களிடத்தில்
எழுகிறது. இதனால் தாய் மொழியில் கல்வி என்பதை வேறொரு கண்ணோட்டத்தில்
பார்ப்பது அவசியமாகிறது.
தாய்மொழிக் கல்வி:
தாய்மொழியில்
கல்வி கற்பதன் மூலம் குழந்தைகள் கற்பதைத் தாங்கள் பேசுவதுடன் அல்லது
சமூகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கமுடியும். அதனால் அவர்கள் எளிதில்
கற்கின்றனர். அதனால் அவர்கள் ஒரு விஷயத்தை நோக்கும் விதம் வேறு மொழியில்
கற்பவர்களை விட மாறுபடுகிறது. இவை அனைத்தும் கற்கும் திறனை நாளடைவில்
அதிகரிக்கச் செய்கிறது. இது கற்கின்ற குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல்
கற்றுத் தரும் ஆசிரியர்களும் தாங்கள் சொல்ல வருவதை கற்பவருக்கு சரியாக
போதிக்க முடிகிறது. இதனால் மாணவர்களின் தன்னம்பிக்கை கூடுகிறது,
பேச்சாற்றல் வளர்கிறது மற்றும் ஆக்கத்திறன் கூடுகிறது.
இதனை
உணர்ந்துதான் தாய்மொழியில் அறிவியல் கல்வியைக் கொடுப்பதன் மூலம்
ஆக்கப்பூர்வ சிந்தனையைக் குழந்தைகள் மத்தியில் கொண்டுவர முடியும் என்று
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியுள்ளார்.
தாய்மொழியில் கல்வி என்பது எல்லா மொழிகளுக்கும் சாத்தியமாகுமா?
எழுத்து
இல்லாத மொழிகள், சிறுபான்மையினர் பேசும் மொழிகள், இலக்கணங்கள் சரிவர
இல்லாத மொழிகள், மொழி வளர்ச்சி அடையாத மொழிகள், பிற மொழிகளுக்கு சமமான
சொல்வளம் இல்லாத மொழிகளில் தாய் மொழியில் கல்வி என்பது மிகப் பெரிய
சவாலாகவே உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பல ஆராய்ச்சிகளின் அடிப்படையில்
பன்மொழிக் கல்வி என்ற கோட்பாடு வகுக்கப்பட்டுள்ளது.
பன்மொழிக் கல்வி என்பது தொடக்க கல்வியைத் தாய்மொழியில் தொடங்கி மெதுவாகத் தேசிய மற்றும் சர்வதேச மொழிக் கல்விக்கு மாறுவதாகும்.
தாய்மொழிக் கல்வி பற்றி உநெஸ்கோ(UNESCO) அமைப்பு:
தாய்மொழியில்
கல்வி பற்றி ஐ.நா. சபையின் உநெஸ்கோ –UNITED NATIONS EDUCATIONAL,
SCIENTIFIC and CULTURAL ORGANISATION (UNESCO) அமைப்பு பல்லாண்டு காலமாக
ஆராய்ச்சி செய்து வருகிறது. அந்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் சில தகவல்கள்
மற்றும் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
முதலாவதாகத்
தாய்மொழியில் கல்வி பயிலும் குழந்தைகளே மிகவும் ஆழமாகக் கல்வி
கற்கின்றனர். இது அனைத்து வயதினருக்கும் அளிக்கப்படும் கல்விக்கும்
பொருந்தும்.
உநெஸ்கோ
நிலைப்பாடான தாய்மொழியில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்த உநெஸ்கோ
பல கூட்டங்களை நடத்தி அதன்மூலம் பல தீர்மானங்களை அறிவித்துள்ளது. அந்த
தீர்மானங்களின் தொகுப்பு:
கல்வியின் தரத்தை உயர்த்த தாய் மொழியில் கல்வியை ஆதரிப்பது மற்றும் மேம்படுத்துவது.
பள்ளிகளில் அனைத்து நிலைகளிலும் இரு மொழிகளில் அல்லது பன்மொழிகளில் கல்வியைக் கற்றுத்தர ஊக்கப்படுத்துவது.
கலாச்சாரப் பரிமாற்றக் கல்வியில் மொழியை முன்னிறுத்துவது.
தாய்மொழிக் கல்வியும் கலைச் செல்வங்களும்:
ஒரு
வளமான நாட்டுக்கு அடிப்படை வளமான கல்வி முறையே ஆகும். அதுவும் தாய்மொழிக்
கல்வி முறையே ஆகும். உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் இந்தியா உள்பட
ஒரு சில ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைத் தவிர, தாய்மொழி மூலமாகவே கல்வி
கற்பிக்கப்பட்டு வருகிறது.
மனித
ஆற்றலை வளமையாக்கவும், ஒருவரது படைப்பாற்றலை அதிகப்படுத்தவும் தாய்மொழிக்
கல்வியால் மட்டுமே முடியும். இது அறிவியல் பூர்வமாக நிரூபணமான உண்மை.
மனிதனது சிந்தனைத் திறனுக்கும் தாய்மொழிக்கும் தொடர்பு இருக்கிறது. தாய்மொழியிலேயே ஒருவர் அதிகம் சிந்திக்க முடியும்.
சிந்தனை
ஆற்றலை வளர்ப்பதும், படைப்புத் தன்மையை உருவாக்குவதும், நாகரிகமான சமூக
மனிதராக மாற்றுவதும் சமூகப் பண்பாட்டைக் காப்பாற்றிக் கொண்டே அதை
மேம்படுத்துவதும் சிறந்த கல்வியின் நோக்கம்.
நம்முடைய
கல்விமுறையான குறிப்பாக நாலைந்து பாடத் திட்டங்களைக் கொண்ட ஆங்கில
வழிக்கல்விமுறை மேற்கண்ட திறமைகளை வளர்ப்பதற்குப் பயன்படுகிறதா என்று
மனசாட்சிப்படி நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
நம்
நாட்டில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி அவசியம் என்று
அறிவுஜீவிகள் மனப்பூர்வமாகவும், ஆளும் அரசியல்வாதிகள் பேச்சளவிலும்
சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால், நடைமுறையில் அது முடியாமல்
போய்க்கொண்டிருக்கிறது.
தமிழ்மொழியை
அரசியலாக்கி, தேர்தல் வெற்றிக்குப் பயன்படும்பொருளாக மாற்றி,
உணர்வுரீதியாக பொதுமக்களை மாற்றியிருக்கிறார்களே தவிர அறிவு ரீதியாக இல்லை.
மிகுந்த
படைப்பாற்றலோடு பள்ளிக்குச் செல்லும் ஒரு குழந்தையை, மொழி, கலாச்சாரத்தில்
இந்தியத் தன்மையுடன் 3 வயது வரை நல்ல நிலையில் இருந்த குழந்தையை, ஆங்கில
வழிக் கல்வி என்று, புரியாத, சிந்தனைத் திறனற்ற, மனனம் செய்யும் கல்வி
முறையில் விடுவது என்பது உண்மையான திறமையை அழிப்பது அல்லாமல் வேறு என்ன?
தற்சமயம், சமச்சீர்க் கல்வியை அறிமுகப்படுத்தியிருப்பது மிகவும்
பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
சிந்தனைத் திறனின் திறவுகோல் தாய்மொழி:
பிப்ரவரி 21, அனைத்துலகத் தாய்மொழி தினம்.
உநெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட அத்தினம் உலகம் முழுவதும் 2000 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
தாய்மொழிதான்
சிந்திக்கும் திறனின் திறவுகோலாக இருக்கிறது. எந்த மொழியைக் கற்றாலும்,
எத்தனை மொழிகளைக் கற்றாலும் ஒருவரின் சிந்தனை உருவெடுப்பது
தாய்மொழியில்தான்.
தாய்மொழிக்
கல்வி கற்பதனால் தொழில்துறை மற்றும் பொருளாதாரம் போன்றவற்றில் வெற்றி பெற
முடியுமா என்ற கேள்வி தவறான கருத்தாகும். ஏனெனில் தாய்மொழிக் கல்வி
வாழ்க்கையை செம்மைப்படுத்துகிறது.
தாய்மொழிக் கல்வி போதனையில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியதுடன் அதன் மேம்பாட்டில் அக்கறை கொள்ள வேண்டும்.
புத்தகங்கள்தான் அரண்கள்:
உநெஸ்கோ
(UNESCO) தாய்மொழி கல்வி வளர்ச்சிக்கும், பயன்பாட்டிற்கும் மிகுந்த
முக்கியத்துவம் அளிக்கிறது. அதற்குக் காரணம் தாய்மொழி கல்வி பல்லினப்
பண்பாடு மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை உருவாக வழி வகுப்பதாகும்.
தாய்மொழிக் கல்வியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் புத்தகங்கள்தான் அடித்தளம்.
“Books are the pillars of knowledge , societies and essential for promoting freedom of expression and education for all”.
தாய்மொழிக்
கல்வி மற்றும் பண்பாடுகளின் மேம்பாட்டிற்கும் அனைத்துலக மக்களுக்கிடையிலான
நல்லிணக்கத்திற்கும் புத்தகங்கள் தான் அடித்தளமாக அமைகின்றன.
தாய்மொழியில்
புத்தகங்கள் இருக்க வேண்டும், அவற்றை படிக்க வேண்டும், பயன்படுத்த
வேண்டும். இல்லையேல், இவ்வுலகிலுள்ள 6,000 மொழிகளில் 50 விழுக்காடு
இந்நூற்றாண்டின் இறுதிக்குள் காணாமல் போய்விடும்.
“அம்மா”
என்ற சொல் தாய்மொழியின் முதற்சொல். அதுவே கல்விக்கு அடிப்படையாக இருக்க
வேண்டும். எதிர்வரும் காலத்தில் அனைத்து இன மக்களும் அனைத்துலகத் தாய்மொழி
தின விழாவில் பெருமளவில் பங்கேற்று மக்களிடையே நல்லிணக்கம் மலர முன்வர
வேண்டும்.
நாம் போராட வேண்டியுள்ளது:
தாய்மொழி
காக்கப்பட வேண்டும். உலகின் பல்வேறு அமைப்புகள் – ஐ.நா. உநெஸ்கோ(UNESCO)
ஆகியவை, தாய்மொழியில் கல்வி கற்பதற்கான உரிமையை வலியுறுத்தும் ஏராளமான
தீர்மானங்களையும் ஒப்பந்தங்களையும் உருவாக்கியுள்ளன. மக்கள் தங்களுடைய
சொந்த பண்பாடுகளைப் பின்பற்றுவது அவர்களது மனித உரிமையாகும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் இங்கு நமது அமைச்சுகளிடம் போராட
வேண்டியுள்ளது.
அனைத்து
நாடுகளிலும் தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமைகள் உண்டு என்பதில் சந்தேகமோ,
கேள்வியோ இல்லை. ஆனால் நமது நாட்டில் நாம் போராட வேண்டியுள்ளது.
அந்த உரிமையை நீர்க்க வைக்க, சீரழிக்க முயற்சி செய்கிகிறார்கள். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஒருநாள் போதுமா?
தாய்மொழியின் உயர்வை உன்னதத்தைப் பேசுவதற்கும் படிப்பதற்கும் ஒருநாள் போதுமா?
அம்மா
மொழி, பாட்டி மொழி இருக்கின்றன. அத்துடன் “வைப்பாட்டி” மொழியும்
இருக்கிறது. இவற்றுக்கிடையிலான வித்தியாசங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்
என்று கூறிய திராவிடம் “தாய்மொழி எனது உள்ளத்தில் இருக்கிறது என்று
கூறுவது வழக்கம்”. ஆனால் அது நமது குருதியில் இருக்க வேண்டும்.
இப்போதெல்லாம்
பெரும்பாலானவர்கள் தாய்மொழியைத் தங்களுடைய வியாபார நோக்கத்திற்காக
பயன்படுத்துகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் உநெஸ்கோ(UNESCO) அளித்துள்ள
தகவலின்படி இன்னும் 200 ஆண்டுகளில் இந்தியும் வங்காளமும் தான் மிஞ்சும்
என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்படுவோம்.
“தாய்மொழி வளர தினமும் உழைப்போம்”.
நமது அரசாங்கம் செயல்பட வேண்டிய சில வழிமுறைகள்:
தாய்மொழியில்
தொடக்க கல்வியை அரசு எல்லா பள்ளிகளிலும் அமல்படுத்த முயற்சி செய்ய
வேண்டும். மேலே குறிப்பிட்டது போல் தாய் மொழியில் கல்வி கற்பதே
குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு உதவும் என்ற கருத்தை மக்களிடம் எடுத்துச்
செல்ல வேண்டும்.
ஒவ்வொரு குழந்தையின் பிறப்பு
சான்றிதழிலும் தாய்மொழி எது வென்பது பதிவு செய்யப்பட வேண்டும். இதனால்
பிறப்புச் சான்றிதழில் எந்தத் தாய்மொழி இருக்கின்றதோ அந்த மொழியிலேயே கல்வி
கொடுக்கும்படி செய்யமுடியும்.
முதல் வகுப்பு முதல்
எட்டாம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி அமைய வேண்டும். மற்றும் இன்றையச்
சூழலில் உலகளாவிய தொடர்புகளுக்கு ஆங்கிலக் கல்வி தேவை என்பதால் ஆரம்பக்
கல்வியில் தொடர்புத் திறனை மேம்படுத்தும் ஆங்கில மொழி கல்வியைப் பள்ளிகளில்
ஆழமாகக் கற்பிக்க வேண்டும்.
உயர் கல்வியில் பயிலும்
எல்லா புத்தகங்களையும் தாய்மொழியில் மொழிப்பெயர்ப்பது சாத்தியமில்லை
என்பதால் உயர் கல்வியில் ஆங்கிலத்தை பிரதானமாக வைக்கலாம். அதற்காகத் தாய்
மொழியில் உயர்கல்வியை முழுவதுமாக புறக்கணிக்கத் தேவை இல்லை.
தமிழ்நாடு
அரசாங்கம் இப்பொழுது சமச்சீர்க் கல்வியை அறிமுகப் படுத்தியுள்ளது மிகவும்
வரவேற்கத்தக்கதாகும். இதனால் சமூகத்தில் சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கும்,
தரமான கல்வியை, ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் சமமாக
எல்லோருக்கும் கிடைக்கச் செய்வதற்கும் வழிவகுக்கும். இதற்கு CBSE, ICSE,
MATRIC போன்ற பாடதிட்டங்களை இரத்து செய்து சமச்சீர் கல்வி ஒன்றையே
இந்தியாவின் கல்வித் திட்டமாக்க வேண்டும்.
மன்னிக்க முடியாத குற்றம்:
தங்களுடைய
இளமைக் காலத்தில் தாய்மொழியில் கல்வி கற்கும் குழந்தைகள், இதர
மொழிகளையும், இதரப் பாடங்களையும், தாய்மொழியில் கல்வி கற்காத குழந்தைகளை
விட சிறப்பாக கற்றுத் தேருகின்றனர்.
தமிழ்மொழியை
நம் குழந்தைகள் சிறப்பாகக் கற்று சான்றோர்களாக வாழ வழி அமைப்பது நமது
முக்கிய கடமையாகும். குழந்தைப் பருவத்திலேயே தமிழைக் கற்பதன் மூலம் நம்
குழந்தைகள் பாடங்களையும், மொழிகளையும் கசடறக் கற்பதிலே வல்லவர்களாகத்
திகழ்வார்கள் என்பதில் ஐயமே இல்லை.
“தமிழை மறந்தால் தமிழ் இலக்கியமும், வரலாறும் அதோடு போய்விடும். மன்னிக்க முடியாத குறை வந்து சேரும்”.
தாய்மொழிக் கல்விக்கு எதிரான அனைத்து வேறுபாடுகளும் அகற்றப்பட வேண்டும்:
எந்த
நாட்டின் ஒற்றுமையின்மைக்கும் தாய்மொழிக் கல்வி காரணமாக இருந்ததே இல்லை.
ஒரே மொழிக்கல்வி எந்த நாட்டிலும் ஒற்றுமையை உறுதிப்படுத்தி அதனை
நிரந்தரமாக்கியதில்லை.
ஒற்றுமையின்மைக்கு
வித்திடும் என்ற கூற்றுக்கு மாறாக தாய்மொழிக் கல்வி சிறார்களின் ஆற்றலை
வளர்த்திடவும், பல்லின மக்களிடையே அவரவர்களின் பண்பாடுகளைப் புரிந்து
கொள்ளவும் வேறுபாடுகளை உணர்ந்து போற்றவும் அவற்றினால் வளப்பமடையவும்
உதவுகிறது. தாய்மொழியின் இச்சிறப்புகளை ஐ.நா. மன்றம் ஏற்றுக்கொண்டு
அங்கீகாரம் அளித்துள்ளது.
தாய்மொழியின்
முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளவும், அதன் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கவும்,
அதனை போதனை முறையில் நடைமுறைப் படுத்த வேண்டும்.
மொழி ஆன்மாவாகும். பன்முக கலாச்சாரமும் பன்முக மொழி போதனையும் ஒற்றுமைக்கு எதிரானது அல்ல.
முடிவுரை:
மொழி
என்பது வெறும் கருத்து பரிமாற்றங்களுக்கான ஒரு கருவி என்பதைத் தாண்டி அது
மக்களின் கலாச்சாரங்களைத் தாங்கி நிற்கும் சாதனமாக உள்ளது. அது மக்களின்
பண்பாட்டுடன் இரண்டறக் கலந்துள்ளது. தாய்மொழிக் கல்வியால் கலாச்சாரங்களை
ஒட்டி கல்வி கற்க முடிகிறது. மக்கள் தங்கள் கலாச்சாரங்களைத் தழுவி
வாழ்கின்றனர். இதனால் உலகில் பல்வேறுபட்ட கலாச்சாரங்களைப் பாதுகாக்க
முடிகிறது.
உலக நாடுகள்
அனைத்தும் தாய் மொழிக் கல்வியின் அவசியத்தை உணர்ந்து அதை நோக்கி
நகர்ந்துள்ளன. நம் நாட்டிலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தாய் மொழி
கல்வியை ஆதரித்தால் தான் ஒரு வலிமையான தலைநிமிர்ந்த சமூகத்தை உருவாக்க
முடியும்.
by Mrs. Mahalakshmi, Salem.
உலகில் தோன்றிய முதல் மொழி.எனவே உலக மொழிகள் அனைத்திற்கும் தாய்மொழி.பிற மொழிகள் பேச்சு வழக்கே இல்லாத நிலையில், இலக்கியங்களை உருவாக்கி, பெருமை பெற்ற மொழி.
ReplyDeleteஉலகின் பல மொழிகளுக்கும் வேர்ச்சொற்களைக் (Root word) கொடுத்து, அவற்றையும் பிழைக்க வைக்கும் மொழி. கற்காலம் முதல் கணினிக்காலம் வரையும், காலத்திற்கேற்ப, தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ளும் மொழி. வேற்று மொழியினரும், கற்று, இலக்கண, இலக்கிய நூல்கள் படைக்கும் மொழி.
ஈடு,இணை கூறவியலாத மொழி.
தன்னைக் கற்றவரை, தன்னை விட்டு, விலகிச் செல்லவிடாத மொழி.
இயற்கை மொழி, இயல்பு மொழி, இன்மொழி - நம் தமிழ் மொழி.