விழாவில் பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன்.
குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வியை பெற்றோர்கள் தாய்மொழியில் தான் வழங்க வேண்டும் என தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன்கூறினார்.
ஆவடி அருகே பருத்திப்பட்டில் உள்ள மகாலட்சுமி கலைக்கல்லூரி மற்றும் தேசிய சிந்தனைக் கழகம் ஆகியவை இணைந்து தாய்மொழி தின விழாவை வியாழக்கிழமை நடத்தின. கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் தலைவர் குஞ்சிதபாதம் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் ஐயப்பன் வரவேற்புரை வழங்கினார்.
இதில், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்று பேசியது: ஒவ்வொரு ஆண்டும் பிப். 21-இல் தாய்மொழி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் தாய்மொழி என்பது முக்கியமாக உள்ளது. அனைத்து மொழிகளையும் விட தாய்மொழிதான் தொடர்பு கொள்வதற்கு எளிதானது.
அதை எக்காரணம் கொண்டும் நாம் இழந்துவிடக்கூடாது. இதில், தொடக்கக் கல்வியை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இளம் பருவத்தில் இருந்தே தாய்மொழியில் இருந்துதான் வழங்க வேண்டும். கல்வி என்பது வெறும் படிப்பு மட்டும் இல்லை.
அதில் பண்பாடு, கலாசாரம், நாகரிகம், கலை, இலக்கியம், தத்துவம், இசை, நாட்டியம் ஆகியவற்றோடும் தொடர்பு கொண்டது என்பதை நாம் மறக்கக் கூடாது. இவை அனைத்தையும் தாய்மொழி மூலமாகத்தான் கற்றுக் கொள்ள முடியும். அதனால் ஒவ்வொரு குழந்தையும் தாய்மொழியைக் கற்றுக்கொள்வதை உரக்கச் சொல்வதுதான் சர்வதேச தாய்மொழி தினத்தின் நோக்கமாகும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில்,தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.கே.சி.ராஜேந்திரன், கல்லூரியின் முதல்வர் பூமா, இயக்குநர் திருக்குமரன் மற்றும் மாணவியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ் பேராசிரியர் எஸ்.பானுமதி நன்றி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...