ஒருங்கிணைந்த கல்வி திட்டமான 'சமக்ர சிக் ஷா' நிதியின் வரவு செலவு குறித்து
அறிக்கை தாக்கல் செய்யும்படி பள்ளி கல்வி துறைக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார்
சம்மன் அனுப்பியுள்ளனர்.மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சமக்ர
சிக் ஷா; இத்திட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு ஆய்வக
பொருட்கள் நுாலக புத்தகங்கள் வாங்கவும் பள்ளி நிர்வாக செலவுக்கும் நிதி
ஒதுக்கப்படுகிறது. இந்த நிதி தலைமை ஆசிரியர்களுக்கு நேரடியாக
வழங்கப்படுகிறது.
ஆனால் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியின் தேவைக்கு ஏற்ப
ஆய்வக பொருட்கள் நுாலக புத்தகங்கள் வாங்க உயர் அதிகாரிகள் அனுமதிப்பதில்லை.
மாறாக ஆண்டு தோறும் மாவட்ட வாரியாக சில தனியார் நிறுவனத்தினர் பள்ளிகளில்
கட்டாயப்படுத்தி சில பொருட்களை கொடுத்து விட்டு தலைமை ஆசிரியர்களிடம் 50
ஆயிரம் முதல் 65 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.இதன் பின்னணியில்
அரசியல்வாதிகள் மற்றும் சில அதிகாரிகளுக்கு வேண்டியவர்கள் இருப்பதாக புகார்
எழுந்தது. அத்துடன் தனியார் நிறுவனம் வினியோகிக்கும் பொருட்களும்
புத்தகங்களும் எந்த விதத்திலும் பள்ளிக்கு பயன்படவில்லை என்றும் தலைமை
ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து நமது நாளிதழில் ஒரு
வாரத்திற்கு முன் விரிவான செய்தி வெளியானது.இந்நிலையில் தனியார்
நிறுவனத்தினர் கட்டாயப்படுத்தி வசூலித்தால் போலீசில் புகார் அளிக்கலாம் என
தலைமை ஆசிரியர்களுக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். சில பள்ளிகளின்
தலைமை ஆசிரியர்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கும் புகார் அனுப்பினர்.இதைத்
தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தமிழக பள்ளி கல்வி துறைக்கு சம்மன்
அனுப்பியுள்ளனர். மூன்றாண்டுகளாக மத்திய அரசின் திட்ட நிதியில் செலவிட்ட
தொகை எவ்வளவு என்னென்ன பொருட்கள் என்ன விலையில் யாரிடம் வாங்கப்பட்டன என்ற
விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.முதற்கட்டமாக காஞ்சிபுரம்
மாவட்ட பள்ளிகளில் இருந்து இந்த தகவல்களை தாக்கல் செய்ய
உத்தரவிடப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...