பள்ளி மாணவர்களுக்கு கல்வி பயிற்சி அளிக்க உருவாக்கப்பட்ட ரோபோவின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் பழனிசாமி முன்னிலையில் செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.
பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ரோபோக்களை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மாணவர்களுக்கு கல்வி பயிற்சி அளிப்பதற்காக தனியார் நிறுவனம் ஒன்று இந்த ரோபோவை தயாரித்துள்ளது. செயல்வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வி போன்ற அணுகுமுறைகள் மூலம் மாணவர்களிடையே கற்கும் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் பவ்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன்படி தற்போது செயற்கை நுண்ணறிவு முறையில் கல்வி கற்கும் நடைமுறை விரைவில் அறிமுகமாகிறது. இந்த முறையில் வகுப்பறையில் மாணவர்கள் நுழையும்போதே அவர்களின் முகங்களை வைத்து வகுப்பறைக்கு வந்துள்ள மாணவர்கள் என்பதை ரோபோ பதிவு செய்து கொள்கிறது. பின்னர், பாடங்களில் ஏற்படும் சந்தேகங்கள் குறித்து மாணவர்கள் ஏதேனும் கேள்வி கேட்க முற்பட்டால் அவர்களது பெயரை கூறி சந்தேகத்தை கூறுமாறு ரோபோ கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்னர் கேள்விக்குரிய பதிலை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் உரிய பட விளக்கங்களுடன் ரோபோ விளக்கமளிக்கிறது.
உதாரணமாக அறிவியல் பாடத்தில் பால்வெளி அண்டம் பற்றி மாணவர்கள் கேள்வி எழுப்பினால் வகுப்பறை சுவற்றில் செவ்வாய், வியாழன் உள்ளிட்ட கிரகங்களைக் காண்பித்து அவற்றின் இயக்கங்கள், சிறப்பியல்புகள், உள்ளிட்டவை பற்றி விளக்கும் வகையில் தமிழில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜப்பான், அமெரிக்கா போன்ற தொழில்நுட்பம் வளர்ந்த நாடுகளில் மட்டுமே இந்த ரோபோ கல்விமுறை நடைமுறையில் உள்ள நிலையில், தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அந்த ரோபோவை முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் இயக்கி செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ரோபோ தயாரித்த தனியார் நிறுவன அதிகாரிகள் உடன் இருந்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...