தமிழகத்தில், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை இந்த ஆண்டு ரத்து
செய்யாவிட்டால் வழக்கு தொடரப்படும் என நர்சரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ
பள்ளி சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு நர்சரி, பிரைமரி,
மெட்ரிக்குலேசன், மேல்நிலைப்பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி சங்கத்தின் மாநில
செயலாளர் நந்தகுமார் கிருஷ்ணகிரியில் நேற்று அளித்த பேட்டி:
தமிழகத்தில், 5 மற்றும் 8ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது வரவேற்கதக்கது. ஆனால், முழுஆண்டு தேர்வு நெருங்கும் இந்த நேரத்தில், பொதுத்தேர்வு அறிவித்திருப்பது, மாணவர்களையும், பெற்றோர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே முப்பருவ முறையில், 2 பருவ தேர்வு முடிந்த நிலையில், அந்த தேர்வுக்குரிய புத்தகங்களை எல்லாம் மாணவர்கள் தூக்கி எறிந்திருப்பார்கள். மேலும், அவர்களுக்கு பொதுத்தேர்வை சந்திக்கும் அளவுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை.
அதைப்போல், 20 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவர்கள் வேறு பள்ளியில் சென்று தேர்வு எழுதவேண்டும். அந்த மாணவர்கள் வேறு பள்ளியில் சென்று தேர்வு எழுதுவது கஷ்டமான ஒன்றே. பருவ பாடத்திற்கான பாடப்புத்தகங்கள் இன்னும் பல மாணவர்களுக்கு கிடைக்கவே இல்லை. இந்நிலையில், பொதுத்தேர்வை சந்திக்க அந்த சிறு வயது மாணவர்களால் முடியாது. இந்த பொதுத்தேர்வு முறை அடுத்த ஆண்டிலிருந்து நடத்தினால் வரவேற்கப்படும். இன்னும் ஒரு வார காலத்திற்குள் அரசு இந்த அறிவிப்பை ரத்து செய்யவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும். தற்போது உடனடியாக கால அவகாசமின்றி, பொதுத்தேர்வை அறிவித்திருப்பது இந்த மாணவர்களின் வாழ்க்கை நிலை மற்றும் இயல்பு நிலையை பாதிப்படைய செய்யும். இந்த ஆண்டு பொதுத்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...