பழைய
ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 22-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அரசு
ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, பின்னர் வாபஸ்
பெற்றனர்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நேற்று முன்தினம் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
இந்த நிலையில் பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் நேற்று முன்தினம் இரவு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.
அதில், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 22-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையிலான காலகட்டங்களில் எந்தெந்த நாட்களில் பணிக்கு வரவில்லை என்பது தொடர்பான விவரங்களை கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்துக்கு சென்று பதிவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இது மிக முக்கியமான விஷயம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் முயற்சித்துவரும் நிலையில், கல்வித்துறை தற்போது எடுத்து இருக்கும் இந்த நடவடிக்கை ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகனிடம் கேட்டபோது, ‘தொடக்கக்கல்வி துறையில் ஒரு லட்சம் ஆசிரியர்களும், பள்ளிக்கல்வியில் 80 ஆயிரம் ஆசிரியர்களும் என மொத்தம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதுதொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தகவல் பெறப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது’ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...