Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

#அறிவியல்-அறிவோம்: உள்ளம் கவர் " பட்டின்"(Silk) ரகசியம் அறிவோம்.


(S.Harinarayanan)



உலகமெங்கும் உன்னதமானதாக கருதப்படும் பட்டானது இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய ஒரு புரதத் தொடர்  நூலிழை ஆகும்.  இது மென்மையான, இலகுவான, சாயமேற்ற உகந்த எளிதில் உறிஞ்சும் தன்மை கொண்ட, வெப்பத்தை எளிதில் கடத்தாத, உறுதிமிக்க, எளிதில் மடியும் (Drap) தன்மை போன்ற குணாதியங்களை கொண்டதாகும். இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பட்ட வகைகள் மல்பெரி, டசார், எர்ரி மற்றும் மூகா என நான்கு வகையாகும்.

பட்டுப் புழுவின் அறிவியல் பெயர் Bombyx mori. பட்டுப்புழு வளர்ப்பு முறை sericulture எனச் சொல்லப்படுது. இது ஒரு வேளாண் தொழில். ஒரு பூச்சியை (பட்டுப் புழுவை) வளர்ப்பது வேளாண் தொழிலாகப் பாவிக்கப்படுவது முரணான சுவாரஸ்யம். பட்டுப் புழு, முட்டைகள் பொரிப்பதற்கு 10 நாட்கள்வரை ஆகும். முட்டைகளில் இருந்து வெளிவரும் புழு 7cm நீளம் வரை வளரக் கூடியது.அது மல்பெரி இலைகளை மட்டுமே உணவாக உட்கொள்ளக்கூடியது.

புழுவின் உமிழ்நீர்தான் பட்டு:

 ஒரு வகையான பட்டு கம்பளிப்புழுவின் (Silkworm) உமிழ்நீரானது காய்ந்து உருவாகும் நூலிழைதான் பட்டு ஆகும்.நல்ல வளர்ந்த நிலையில் உள்ள பட்டுப் புழு 7.5cm இருக்கும். பட்டுப் புழுவின் மொத்த எடையில் 25 சதவீதம் உமிழ் நீர் சுரப்பிகளால் ஆனது. உமிழ் நீர்தான் பட்டு இழையாக வரும். தன்னுடைய ஐந்தாம் பருவத்தில் புழு கூடு கட்டத் தயாராகும். உமிழ் நீரை உமிழ்ந்து கூடுகளைக் கட்டுகிறது. மூன்று நாட்கள் வரை ஓயாது கூடு கட்டும். ஒரு பட்டுக் கூடு 500ல் இருந்து 1000 மீட்டர் நீளமான பட்டு இழையைக் கொண்டது.

ஒரு பட்டுப் புடவை நெய்ய 5000 பட்டுக் கூடுகள் தேவைப்படும். இந்தக் கூட்டைச் சுடுநீரில் வேகவைத்து பட்டு இழைகைளை எளிதாகப் பிரித்து எடுக்கிறார்கள். பிறகு நூலிழைகள் வெளுக்கப்பட்டுச் சாயம் சேர்க்கப்பட்டு நெய்யப்படுது. அதன் மீது தங்கம் பூசப்பட்டு சரிகை தயாரிக்கப்படுது. ஆடைகளில் ஜரிகை சேர்க்கிறது முகாலாயர் காலகட்டத்தில் வந்தது. இன்றும் தங்கம், வெள்ளி ஜரிகையைப் பட்டில் சேர்த்து நெய்யப்படுகிறது. ஒரிஜினல் தங்கம், வெள்ளி இல்லாமல் எலக்ரோப்ளேட்டிங்கில் Imitation Zariயும் இப்போது தயாரிக்கப்படுது.

லூயிபாஸ்டியரும் பட்டும்:

பட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது இன்னுமொரு சுவாரஸ்யமான விஷயம். 1857ஆம் ஆண்டு வாக்கில் ப்ரான்சின் தென்பகுதியில் இருந்த பட்டு உற்பத்திப் பண்ணைகளில் பட்டுப் புழுக்கள் எல்லாம் ஒரு வித்தியாசமான நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின.
அதனால் பட்டுத் தொழிலில் பெரிய சரிவு ஏற்பட்டது. இதைச் சரிசெய்வதற்காகப் பட்டு உற்பத்தியாளர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளரான லூயீ பாஸ்டரை (Louis Pasteur) அழைத்தார்கள். லூயீ பாஸ்டர், நோய்க்கான காரணம் பாக்டீரியா எனக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு நோய்த் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆதாரமாக இருந்தது.

பட்டின் வரலாறு;

பட்டுக்கும் கிட்டதட்ட 5000 வருஷத்துக்கும் மேற்பட்ட பாரம்பரியம் உண்டு. ஹாங் டீங் (Huang di) என்னும் ஒரு சீன மன்னனின் மனைவிதான் சீ லீங் காய் (Si-Ling-Chi). அவர் ஒருநாள் அரண்மனைத் தோட்டத்தில் உள்ள மல்பெரி மரத்துக்கு கீழ அமர்ந்து தேநீர் அருந்திக்கொண்டிருந்தாள்.

அப்போது அந்த மரத்தின் மேல் இருந்து வெள்ளை, வெள்ளையான கூடுகள் தேநீர்க் குவளைக்குள் விழுந்து விட்டன. பயத்தில் குவளையைத் தவற விடவும் அது அவள் மீது விழுந்து, தேநீர் முழுவதும் ஆடையில் சிதறிவிட்டது. அதைத் துடைக்கக் கவனித்தபோது அந்தக் கூடு, பளபளக்கும் இழையாக மின்னியதை வியந்து கவனித்திருக்கிறார். பிறகு அது மல்பெர்ரி இலைகளில் இருக்கும் பட்டுப் புழுக்களின் கூடு என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்.
இது நடந்தது கி.மு. 2700ஆம் ஆண்டு வாக்கில். பிறகு சீ லீங் காய், பட்டு வளர்ப்பதை ஒரு தொழிலாக மேம்படுத்தியிருக்கிறார். அந்த ராணியைச் சீனர்கள் பட்டின் கடவுளாக இன்றைக்கும் போற்றுகிறார்கள். ஒரு பெண் கண்டுபிடித்ததாலோ என்னவோ பட்டுத் தொழில் நுட்பம் பெண்களுக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியமாக வெகு காலத்துக்கு இருந்தது.

பட்டு கண்டுபிடிக்கப்பட்ட அதே நூற்றாண்டில் சீனாவில் பட்டு உற்பத்தி பெரும் வளர்ச்சியடைந்தது. மேலை நாடுகளுக்கும் பட்டு நூல் ஏற்றுமதி செய்யப்பட்டுப் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஐரோப்பாவையும் ஆசியாவையும் வியாபார ரீதியாக இணைக்கும் பட்டுப் பாதை (Silk Route) பட்டு விற்பனைக்காக உருவானதுதான்.

பட்டு தயாரிக்கும் நுட்பம் கிட்டதட்ட 2500 வருஷமாகச் சீனர்களால் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது. அண்டை நாடான ஜப்பான்தான் முதலில் பட்டின் ரகசித்தை அவிழ்த்தது. அது நடந்தது கி.மு. 3ஆம் நூற்றாண்டில். அவர்கள் சீனப் பெண்கள் சிலரை அடிமையாகக் கொண்டுபோய் இந்த நுட்பங்களைத் அறிந்துகொண்டார்கள்.

இந்தியாவும் பட்டும்;

இந்தியாவுக்குப் பட்டுப்புழு வளர்ப்பின் நுட்பம் வந்தது ஒரு சீன இளவரசி மூலமாகத்தான். பண்டைய இந்தியாவின் ஒரு பகுதியை ஆண்ட இளவரசன் ஒருவன், சீன இளவரசி ஒருத்தியை மண முடித்தார். அவள் வழியாக வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பட்டுத் தொழில்நுட்பம் கி.மு. 1ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு அறிமுகமானதாகச் சொல்லப்படுகிறது.பண்டைய இந்திய மன்னரான கனிஷ்கர் காலத்தில், கி.மு. 58இல், இந்தியாவில் இருந்து பட்டு ரோமுக்கு ஏற்றுமதி செய்ததாக வரலாற்றுத் தகவல் இருக்கிறது. கி.பி.16 நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் பட்டு உற்பத்தியில் ஆர்வம் காட்டினார்கள். 

ஒரிஜினல் பட்டினை எப்படி அறிவது:

சிலர் அசல் பட்டு என்று கூறி நைலான் நூல் கலவையில் செய்யப்பட்ட சேலையை, பட்டு சேலை என்று கூறி விற்பனை செய்து விடுகிறார்கள்.
அசல் பட்டு சேலையை கையில் தூக்கிப்பிடித்துக் கொண்டு அதை விரலால் சிறிது தடவி பார்த்தாலே அதன் மென்மைத்தன்மையை வைத்து தெரிந்து கொள்ளலாம்.சுங்குமுடிகள் சீராக இல்லாமல் இருப்பதை யாராவது பட்டு சேலை என்று கூறி கொடுத்தால் அது அசல்பட்டு கிடையாது. அதுபோன்று ஜரிகைகூட இல்லாத அசல் பட்டு சேலையின் ஆரம்பவிலையே ரூ.8 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும். 

எளிதான முறையில் கண்டுபிடிக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. அதாவது சேலையின் ஓரத்தில் தொங்கும் நூலை வெட்டி அதில் தீ வைத்தால், அது நின்று எரியும். அதுதான் அசல் பட்டு. ஆனால் கலவையான பட்டு சேலையின் நூலை வெட்டி அதில் தீ வைக்கும்போது, அதன் நூல் நமது முடி எரிவதைபோன்று சுருங்கிக்கொண்டே செல்லும். இதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.அசல் பட்டு சேலையின் ஆயுட்காலம் 100 ஆண்டுகளுக்கும் அதிகமாக இருக்கும்.

பராமரிப்பது எப்படி?

பட்டு சேலையை மற்றதுணிகள் போல துவைத்துவிடக்கூடாது. பட்டு சேலையில் அழுக்கு மற்றும் கரையை எடுக்கக் கூடிய திரவங்கள் கிடைக்கிறது. அதை வாங்கி பயன்படுத்தலாம். சிலர் தெரியாமல் பட்டு சேலையை டிரைவாஷ் செய்து விடுகிறார்கள். அவ்வாறு செய்தால் அதன் பளபளப்பு குறைந்துவிடும். அவ்வாறு செய்யவே கூடாது.

ஒரு வாளி தண்ணீரில் ஒரு லிட்டர் பாலை கலந்து, அதில் பட்டு சேலையை முக்கி வெயிலில் காயப்போட வேண்டும். அவ்வாறு செய்யும்போது, பட்டு சேலையில் மேலும் பளபளப்பு அதிகரிக்கும். அத்துடன் குறைந்தது 6 மாதத்துக்கு ஒருமுறை வெயிலில் ஒருமணி நேரம் காய வைக்க வேண்டும். மாதத்துக்கு ஒருமுறை சேலையின் மடிப்பை மாற்றி மடிக்க வேண்டும். சிலர் பட்டு சேலையை உடுத்திவிட்டு கழற்றியதும், அதை மடித்து வைத்துவிடுவார்கள். அவ்வாறு செய்யக்கூடாது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive